சனி, 13 ஜனவரி, 2018

சக்கரத்தாழ்வார்



சக்கரத்தாழ்வார் சிறப்பு

திருமாலின் கையில் இருக்கும் சக்கரம்  இருப்பதைப் பார்த்தீருப்போம் .ஆனால் அந்த சக்கரம் யாரு?ன்னு நிறைய பேருக்கு தெரிந்திருக்காது .அந்த சக்கரம் யாரு ?அதன் மகிமை என்ன ?என்பதைப் பற்றி இந்த பதிவில் அடியேன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .

பக்தில பல வகை உண்டு .நமக்கு தெரிந்த ஆன்மீகக்   கருத்துக்களை நாலு பேர் தெரிந்து கொள்ளுவது ஒரு வகையான பக்தி என்று சொல்லலாம் .

அடியேனும் அந்த வகைதான் .
அடியேன் பதிவின்  மூலமாக பயன்பெறுகிறார்கள் என்பது  அடியேன்
சுவாமிக்கு செய்யும் கைங்கரியம் எண்ணி இந்த பதிவு...........

சங்கடம் தீர்க்கும் சக்கரத்தாழ்வார்

சக்கரத்தாழ்வார்,
சுதர்சனர்,
சக்கரராஜன்,
நேமி,
திகிரி,
ரதாங்கம்,
சுதர்சனாழ்வான்,
திருவாழிஆழ்வான் என்று பல்வேறு நாமங்களால் போற்றப்படும் சுதர்சன சக்கரமே சக்கரத்தாழ்வாராகும்.

மகாவிஷ்ணுவின் கைகளில் பல்வேறு விதமான ஆயுதங்கள் இருந்தாலும் பெரும்பாலான கோயில்கள், திவ்ய தேசங்களில் சங்கும், சக்கரமும் ஏந்திய திருக்கோலத்தில்தான் காட்சியளிப்பார். ‘சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்’ என்று திருப்பாவையில் திருமாலை பாடுகிறார் ஆண்டாள்.

திருமாலை எப்போதும் தாங்கிக்கொண்டிருக்கும் ஆதிசேஷனை அனந்தாழ்வான் என்றும், வாகனமான கருடனை கருடாழ்வார் என்றும், நம்மாழ்வார் ஞானம் பெற்ற புளியமரத்தை திருப்புளியாழ்வான் என்றும், மகாவிஷ்ணுவின் பஞ்ச ஆயுதங்களில் முதன்மையான சக்கரத்தை திருவாழிஆழ்வான் எனும் சக்கரத்தாழ்வான் என வைணவ சாஸ்திரங்களும், சில்பரத்தினம் என்ற நூலும் தெரிவிக்கிறது.

பெருமாள் கோயில்களில்
8 கரங்கள் கொண்ட சுதர்சனரையும்,
16 கரங்கள் கொண்ட மூர்த்தியையும்,
32 கரங்கள் கொண்ட மகா சுதர்சனரையும் காணலாம்.

பொதுவாக, 8 அல்லது 16 கரங்களுடன் வீறு கொண்டு எழும் தோற்றத்துடன் அறுகோண சக்கரத்தில் சக்கரத்தாழ்வார் காட்சி தருவார்.‘ஷட்கோண சக்கரம்’ என்னும் ஆறுகோணத்தின் மத்தியில் உக்கிர வடிவ சுதர்சனரும், ‘திரிகோண சக்கரம்’ எனும் முக்கோணத்தில் யோக நரசிம்மரும் அருள்பாலிக்கின்றனர்.

சுதர்சனர் தனது திருக்கரங்களில்
சக்கரம், மழு, ஈட்டி, தண்டு, அங்குசம்,அக்னி, கத்தி, வேல், சங்கம், வில், பாசம், கலப்பை, வஜ்ரம், கதை,
உலக்கை,
சூலம் என 16 கைகளில் 16 வகையான ஆயுதங்களுடன் மகா சுதர்சன மூர்த்தியாக காட்சி தருகிறார்.

சுதர்சனர் வழிபாடு மிகவும் சிறப்பானதாக கூறப்படுகிறது. அழிக்க முடியாத பகையை அழித்து, நீக்க முடியாத பயத்தை நீக்க வல்லவர் சுதர்சன மூர்த்தி.

மனிதனுக்கு பெரும்பாலான பாதிப்புகளுக்கு மூல காரணமாக இருப்பவை

ருணம், ரோகம், சத்ரு எனப்படும் கடன், வியாதி, எதிரி ஆகியவைதான்.

அவற்றை அழித்து மனஅமைதியை தருகிறார் சுதர்சன மூர்த்தி.

கல்வி தொடர்பான தடைகளை நீக்கி சரளமான கல்வி யோகத்தை அருள்வார்.

கெட்ட கனவுகள், மன சஞ்சலம், சித்த பிரமை, பேய், பிசாசு, பில்லி, சூனியம்,
ஏவல் போன்ற மனம் தொடர்பான பாதிப்புகள், தொந்தரவுகளில் இருந்தும் விடுபடச் செய்வார்.

ஜாதகத்தில் 6, 8, 12&ம் அதிபதிகளின் திசைகள், புதன், சனி திசை நடப்பவர்கள் ஸ்ரீசுதர்சனரை வழிபட்டால் கிரக தோஷத்தில் இருந்து விடுபடலாம்.

சனி கிழமைகளில் சக்கரத்தாழ்வாருக்கு துளசி சாற்றி, துளசியால் அர்ச்சனை செய்து 12, 24, 48 முறை வலம் வந்து வழிபட்டால் பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் நிறைவேறும். நம்மை சூழ்ந்திருக்கும் துன்பங்கள், தடை, தடங்கல்கள் எல்லாம் விலகி நல்வழி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சந்தோஷம் தருபவர் சக்கரத்தாழ்வார்

திருமாலின் வலக்கையை அலங்கரிக்கும் சக்கர ஆயுதமே சக்கரத்தாழ்வார். இவர் திருமாலுக்கு இணையானவர் என்று வேதாந்த தேசிகர் கூறுகிறார். இவர் திருவாழியாழ்வான், சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சன ஆழ்வார் என்றெல்லாம் பல பெயர்களால் அழைக்கப்படுபவர். திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்குத் தனிச் சன்னதி உண்டு. இவர் பதினாறு, முப்பத்திரண்டு என்ற எண்ணிக்கைகளில் கைகளை உடையவர்.

பெரியாழ்வார் `சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு’ என வாழ்த்திப் பாடியுள்ளார். திருமாலுக்கு இணையானவர் என்று எழுதிய சுவாமி தேசிகன், சுதர்சனாஷ்டகத்தில் சக்கரத்தாழ்வாரைப் பலவாறும் போற்றியுள்ளார்.

பெருமாள் கையை அலங்கரிப்பவர்

சங்கு, சக்கர, கதாபாணியான பெருமாளின் கரங்களில் எப்போதும் வலக்கையிலேயே இடம் பெற்று இருப்பவர் சக்கரத்தாழ்வார். ஆனால் சில இடங்களில் மாறுபட்டும் அமைந்திருப்பது உண்டு. திருக்கோவிலூரில் மூலவர் இடக்கையில் காட்சி அளிக்கிறார் சக்கரத்தாழ்வார். அதே போல் அமைந்து பிரயோகிக்கும் நிலையில் காணப்படுவது பஞ்ச கிருஷ்ண திருத்தலங்களில் ஒன்றான திருக்கண்ணபுரத்தில்.

நவகிரக தோஷம் நீங்க

சிவன் கோயில்களில் மட்டுமே நவகிரக வழிபாடு உண்டு. அவ்வழிபாடுகளினால் பக்தர்கள் தங்கள் தோஷங்களை நீக்கிக்கொள்வார்கள். விஷ்ணு கோவில்களில் உள்ள சக்கரத்தாழ்வார் வழிபாடும் நவகிர தோஷங்களை நீக்கும் என்பது ஐதீகம். சக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி, `

ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம’

என்ற மந்திரம் சொன்னால் நவகிரக தோஷங்கள் விரைவில் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.

மேலும் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும் என்பதும் ஐதீகம். இந்த சுதர்சனருக்கு உகந்த நாள் வியாழன் மற்றும் சனிக்கிழமை. அன்று அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும் என்றும் நம்பிக்கை உள்ளது.

சக்கரத்தாழ்வார் எதிரிக்கு எதிரி

சிசுபாலனின் தாய்க்கு அளித்த வாக்கின்படி, சிசுபாலனின் தவறை நூறு முறை மன்னித்துவிட்டார் கிருஷ்ணர். அவனது நூற்றியோராவது தவறைக் கண்டு கொதித்த சுதர்சன சக்கரம் சீறி எழுந்து பெருமாளின் எதிரியான சிசுபாலனை அழித்தது.

மகாபாரத யுத்தத்தின்போது, ஜயத்ரதனை வெல்ல இயலாத நிலையில் பெருமாளின் சக்கரம் வானில் சுழன்று எழுந்து சூரியனை மறைத்தது. அதனால் குருஷேத்திரமே இருண்டது. இதனால் ஜயத்ரதன் ஒழிக்கப்பட்டு, மகாபாரத வெற்றிக்கு வித்திடப்பட்டது.

கஜேந்திர மோட்சம் என்ற புராணக் கதையில், யானையின் காலைப் பிடித்துக்கொண்ட மகேந்திரன் என்ற முதலையை சீவித் தள்ளி, கஜேந்திரனைக் காப்பாற்றியது சுதர்சன சக்கரமே.

பக்தர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால், பெருமாளுக்கே இடையூறு ஏற்பட்டாற்போல் விரைந்து காப்பவர் சக்கரத்தாழ்வார் என இவை நிரூபிக்கின்றன.

பக்தர்களுக்கு சந்தோஷம் தருபவர்

பக்தர்களுக்கு வரும் பகையை அழித்து, உள்ளார்ந்த பயத்தை போக்கிக் காப்பவர் சுதர்சனர். மனிதனின் நிம்மதியை பாதிப்பவை கடன், வியாதி, எதிரி தரும் துன்பம் இவற்றை முற்றிலும் நீக்கி சந்தோஷத்தை அளிப்பவர். இவர் கல்வியில் தடையை நீக்கி இடைவிடாது தொடரும் கல்வி யோகத்தைத் தருபவர் என்பது நம்பிக்கை.

சக்கரத்தாழ்வாரை சனிக்கிழமைகளில் தரிசிக்க வாழ்வு வளம் கூடும். சென்னை திருவொற்றியூரில் காலடிப்பேட்டை சந்நிதி தெருவில் அமைந்துள்ள கல்யாண வரதராஜர் கோவிலில் அருள்பாலிக்கும் சக்கரத்தாழ்வார் பொன்னையும் பொருளையும் மட்டுமல்ல திருமண வரத்தையும் வாரி வழங்குபவர். `சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்’ என்று பெருமாளுடன் அவரது சக்கரத்திற்கும் சேர்த்தே ஏற்றம் தருகிறாள் ஆண்டாள்.

நன்மைகள் கிடைக்க சக்கரத்தாழ்வார்

தெய்வங்களில் சிறப்புடைய தெய்வம் மகாவிஷ்ணு. அவர் ஸ்ரீமன் நாராயணன் ஆவார். உலகம் அனைத்தையும் படைத்து காத்து தன்பால் அடக்கி கொள்ளவும் ஆற்றல் படைத்தவர் மகாவிஷ்னு. அவரின் பெருமையை 18 புராணங்களிலும் சிறக்கப்பேசுகின்றார்கள். மகாவிஷ்னுக்கு சிறந்த ஆயுதங்களாக போற்றப்படுபவை 5 ஆயுதங்களாகும். அவை சங்கு, சக்கரம், கெதை, வில், கத்தி இவற்றை ஐம்படை என்று கூறுவார்கள்.



படை என்ற சொல்லுக்கு ஆயுதம் என்று பொருள். இந்த ஐந்தாம் படையை கொண்டு பகவான் ஸ்ரீமன் நாராயணன் தீயவர்களை அழித்து நல்லவர்களை காப்ëபாற்றிவருகிறார் இந்த ஐந்து ஆயுதங்களில் சிறப்புடையது சக்கரமாகும். இந்த சக்கரத்திற்கு ஆழ்வார் என்று அடைமொழி சேர்த்து சக்கரத்தாழ்வார் என்று வைணவம் சிறப்பித்து பேசுகிறது.



சக்கரத்தாழ்வாருக்கு சுதர்ஷனம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. அந்த சுதர்ஷனனை பற்றி சுதர்ஷன சதகம் என்று 100 பாடல்கள் அடங்கிய ஒரு நூல் ஒரு பெரியவரால் பாடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் சக்கரத்தாழ்வாரின் பெருமையை அப்பெரியவர் பல சான்றுகளுடன் விளக்கியும் கூறியுள்ளார் அந்த நூலை நாம் தினந்தோறும் படித்தால் குறைகள் எல்லாம் நீங்கும்.



நன்மைகள் பல உண்டாகும் என்றும் அப்பெரியவர் கூறியுள்ளார். கஜேந்திர மோட்சம், அம்பரிகன் வரலாறு, ஆகியவை எல்லாம் சக்கரத்தாழ்வாரின் பெருமையையும் ஏகாதசி விரதத்தின் உயர்வையும் கூறுகின்றன. அந்த சுதர்ஷன சதகம் அதுபோன்ற சுதர்ஷன சதக நாமம் ஆகிய நூல்களை நாமும் பாராயணம் செய்தோமானால் நலம் பல பெறலாம். குறைகள் நீங்கும். கிரக தோஷம் விடுபடும்.



ஆகவே ஆழ்வார்கள் பண்ணிரென்டு பேர்களும் மிகவும் போற்றி புகழப்பெற்ற சக்கரத்தாழ்வாரின் பெருமையை கோதை நாச்சியார் (ஆண்டாள்) ஆழிமழை கண்ணா என்கின்ற திருப்பாவை பாடல்கள் மூலமாக சிறப்பித்து பாடியுள்ளார். தமிழில் அமைந்த '' என்ற எழுத்தின் பெருமையை இந்த பாடல்கள் மூலமாக சிறப்பித்து பேசியுள்ளார்கள்.



ஆகவே ஆழிமழை கண்ணா என்ற பாசுரத்தை நாமும் பாராயணம் செய்வோமானால் நாட்டில் மழை பொழியும், வளம் பெருகும், தீமைகள் அகலும் மேன்மேலும் நன்மைகள் உண்டாகும். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த சக்கரத்தாழ்வார் திருத்தலம் திருவாரூர் மாவட்டம், மன்னார் குடியிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள திருமக்கோட்டை ஊராட்சி, மகாராஜபுரம் கிராமத் தில் அமைந்துள்ளது.



ஸ்ரீரெங்கநாயகி சமேத அருள்மிகு அரங்கநாதர் சுவாமி கோவிலில் தென்மேற்கில் கிழக்கு முகமாக நின்ற கோலத்தில் தனி சன்னதியாக அருள்பாலித்து வருகிறார். கிழக்கு முகமாக சக்கரத்தாழ்வாரும், மேற்கு முகமாக யோக நரசிம்மரும் ஒரே கல்லில் அமைந்துள்ளது இத்திருத்தலத்தின் சிறப்பாகும். இப்படியொரு சிறப்பிற்குரிய சக்கரத்தாழ்வாரை நாமும் வழிபடுவோம்.

சக்கரத்தாழ்வாரை தினமும் தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால் கீழ்வரும் பலன்கள் கிடைக்கும். கண்ணுக்கு தெரிந்த, தெரியாத எதிரிகள் எல்லோரும் கூண்டோடு அழிந்து போவர். இவரை எவரும் எதிர்க்க மாட்டார்கள். அனைவரும் இவர்கள் மேல் அன்பைப் பொழிவார்கள்.

ஏதாவது ஒரு காரணத்தினால் மனதில் எப்போதாவது பயம் தோன்றினால் இவர் மந்திரங்களைச் சொல்வதன் மூலம் அந்தப்ப பயமானது இல்லாது அழிந்து ஒழிந்து போகும். கடுமையான தீர்க்க முடியாத வியாதிகள் உள்ளவர்கள் இவரை எண்ணித் துதித்து வந்தால் அந்த வியாதிகள் குணமாகும்.

வறுமையினால் பாதிக்கப்பட்டு ஒருவர் துக்கத்தை அடைந்திருந்தால் இவர் வழிபாட்டின் மூலமாக வறுமை ஒழிந்து, ஏழ்மை அழிந்து, செல்வம் குவியும். எதிர்பாராத பட்டங்களும், பதவிகளும் இவர்களைத் தேடி வரும். திருமணம் நடைபெறுவதில் சிக்கல்கள் இருந்தாலோ, பிறரின் தலையீட்டினால் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலோ அவை எல்லாம் நீங்கித் திருமணம் நல்ல முறையில் நடைபெறும்.

நோயாலோ, விபத்தாலோ, நஞ்சாலோ, பகைவரின் அச்சுறுத்தாலோ விளைந்திருக்கும் மரண பயம் அகலும். புத்தியில் தெளிவு உண்டாகும். ஞான வைராக்கியம் பிறக்கும்.

மகாவிஷ்ணுவின் கைகளில் பல்வேறு ஆயுதங்கள் இருக்கின்றன .அவர் வலது கையில் இருக்கும் ஆயுதமான ஸ்ரீ சக்கரம் மிகவும் முக்கியமானது .

சக்கரம் என்பது  சக்கரத்தாழ்வாரை குறிப்பதாகும் .பகைவர்களை அழிக்கும் ஆயுதமாக சக்கரத்தாழ்வார் விளங்குகிறார் .

சக்கரத்தாழ்வாருக்கு ஸ்ரீ சுதர்சனர் ,ஸ்ரீ சக்கரம் ,திகிரி ,ஸ்ரீ சக்கரம் ,திருவாழியாழ்வான் எனும்
திருநாமங்கள் உண்டு .ஸ்ரீ சுதர்சனர் என்பதற்கு நல்வழி காட்டுபவர் என்று பொருள் .சுதர்சனம் மங்களமானது .

யோக நரசிம்மர்

நான்கு கரங்களுடன் யோகா நரசிம்மர் உள்ளார் .
அந்த 4 கரங்களும் அறம்,பொருள் ,இன்பம் ,வீடு ஆகியவற்றை தன்னை நாடி வரும் அடியவருக்கு வழங்குவதாக ஐதீகம.


-bairavafoundation.org