சனி, 18 ஜனவரி, 2014

மண்டோதரி

 மண்டோதரி

மண்டோதரி திருமணம் 
பஞ்ச கன்னியர்கள் என ஐந்து பெண்கள் நமது புராணத்தில் குறிப்பிடப்படுகிறார்கள். அவர்கள், அஹல்யா, கௌதம முனிவரின் மனைவி, ராமாயணத்தில் பேசப்படுபவர்.
த்ரௌபதை, பாண்டவர்களின் பத்தினி, மகாபாரதத்தின் பெண் தலைவி,
சீதா, ராமாயண காவியத்தலைவி,
தாரா, வானரத் தலைவன் வாலியின் மனைவி, ராமாயண பாத்திரம்,
மற்றும் மண்டோதரி, இலங்கை மன்னன் ராவணனின் மனைவி, இவரும் ராமாயணத்தில் பேசப்படுபவர்.
சில இடங்களில் குந்தியையும் இந்த வரிசையில் சேர்க்கிறார்கள்.
இவர்கள் பெயரைச் சொன்னால் செய்த பாவம் தீரும் என்பது ஐதீகம்.
இவர்கள் முறையே பஞ்ச பூதங்களான வாயு, அக்கினி, பூமி, ஆகாயம் மற்றும் நீர் இவைகளுக்கு ஆதாரமாக சொல்லப்படுகிறார்கள்.

ராமனும் ராவணனும்.

இன்று இவர்களில் ஒருவரான ராவணனின் மனைவி மண்டோதரியை பற்றி பேசுவோம்.

ராமாயணத்தில் வாலியின் மனைவி தாராவும் மற்றும் ஒரு சிலர் மட்டுமே ஸ்ரீராமனை மனிதனாக இல்லாமல் ஸ்ரீவிஷ்ணுவின் அவதாரமாக புரிந்துக்கொண்டவர்கள். ராமனிடம் சுக்ரீவனை தஞ்சம் அடைய செய்து ராமனின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளச் சொல்லியது அவள்தான்.
சுக்ரீவன் ராமனை தஞ்சம் அடைந்த பின் வாலியையும் ஸ்ரீராமனுடன் சமாதானமாகி போகச் சொன்னது செவிடன் காதில் சங்காகி போனது.
தாராவைப் போல் மண்டோதரியும் ஸ்ரீராமனை முழுவதுமாக அறிந்துக் கொண்டவள்.

இராமாயண போர் 


மண்டோதரி, இவள் அசுர குல அரசன் மாயசுரா, ஹேமா ஆகியோருக்கு ஒரே மகளாக மாயாவி, தந்துபி என இரண்டு சகோதரர்களுடன் பிறந்தவள்.

தற்காலத்தை போலவே அன்றும் பார்த்தவுடன் காதல், பெண்ணை கல்யாணம் செய்துக் கொடுக்கும் தந்தைகளின் கஷ்டங்கள், சீதன பிரச்னைகள், பெண்ணுக்கு பொருத்தமான கணவனை தேடிக் கண்டுபிடிப்பது போன்ற பல கஷ்டங்கள் இருந்தன. அதுவும், நன்றாக கற்றுணர்ந்த, பல கலைகளில் வல்லவராக இருந்த பெண்களுக்கு அவர்களுக்கு ஈடாக கணவனைக் கண்டு பிடிப்பது குதிரைக் கொம்பாகவே அன்றைய தந்தையர்களுக்கும் இருந்தது.

.அழகும், அறிவும், நுட்பமும் தெரிந்த உனக்கு பொருத்தமான கணவனை எப்படி கண்டுபிடிக்கப் போகிறேன் என்று மாயாசுரன் மண்டோதரியிடமே வருத்தமுற்று சொன்னான் என்கிறது புராணம்.

சீதை அசோக வனத்தில் 


இப்படியாக ஒரு முறை தந்தையும் மகளும் காட்டுப் பகுதியில் நடந்து செல்லும் போது, இன்னுமொரு அசுர மன்னன் ராவணன் அவர்களை கண்டான். அவள் அழகில் மயங்கி அவளை திருமணம் செய்துக் கொள்ள சம்மதம் சொன்னான். அவளும் அவன் ஆண்மையில் கண்டதும் காதலுற்றாள்.
ஏகப்பட்ட சீதனத்துடன், பின்னர் ராவணன் போர்க்களத்தில் லக்ஷ்மணனை தாக்க பயன்படுத்திய வேலாயுததுடனும் திருமணம் சிறப்பாக நடந்தேறியது.
ராவணனுக்கு அசுர குலத்திலேயும், இறைக் குலத்திலேயும் நாகர் இனத்திலும் ஏகப்பட்ட மனைவிகள் இருந்தாலும் அவன் மண்டோதரி மேலேயே மிகுந்த காதல் கொண்டிருந்தான்.
.
அவள் அவனுக்கு எப்போதும் நல்வழிகளையே போதித்துக் கொண்டிருந்தாள். அவளை அவன் கடும் சொற்களால் கடிந்துக் கொண்டதே இல்லை.
மண்டோதரிக்கு ஸ்ரீவிஷ்ணு ஸ்ரீராமனாக இந்த பூமியில் தசரதனுக்கு மகனாக அவதரித்திருந்தது தெரிந்திருந்தது. ராவணனை அழிக்க சர்வ சக்தியுள்ள ஒரு மனித இனம் தவிர உலகில் வேறு எந்த உயிரும் கிடையாது என அருள் பெற்றவன் ராவணன். அவனை அழிக்கவே ஒரு சாதாரண மனிதனாக விஷ்ணு பிறவி எடுத்திருப்பதை அவள் அறிந்திருந்தாள்.
சீதையை ராவணன் கடத்தி வரும் போதும் மண்டோதரி ஸ்ரீராமனின் புகழைப் பற்றி எவ்வளவோ எடுத்துரைத்தும் ராவணன் கேட்கவில்லை.
ஸ்ரீராமன் எல்லாம் வல்லவன், அவன் எங்கும் நிறைந்தவன், அவன் சாதாரண மனிதன் அல்ல, அவனை எதிர்ப்பதோ அவமானப்படுத்துவதோ ராவணனுக்கு அழிவையும் ஆபத்தையும் உண்டாக்கும் எனவும், சீதா ஜகன்மாதா, அவளே ஒரு யோக மாதா. ஆகையால் அவளை திரும்பவும் ராமனிடம் ஒப்படைத்துவிடுங்கள் என்றும் மன்றாடினாள்.
ஆனால் ராவணன் அவள் பேச்சை கேட்க மறுத்தான். இதனால்தான் சீதா ரொம்பவும் சிரமப் படாமல் அசோக வனத்தில் இருந்தாள்.
ராவணன் போரில் இறந்தப் பின்பு மண்டோதரி அவன் மேல் விழுந்து அழுதாள். ஸ்ரீராமன் அவள் பண்பறிந்து அவளுக்கு மோட்சம் வழங்கினான்.


பத்மாட்சன், மகாலட்சுமி தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என தவமிருந்தான். மகாலட்சுமி அவன்முன் தோன்றி, நான் விஷ்ணுவை என்றும் பிரியேன். நீ அவரிடம் அனுமதி கேட்டு உன் ஆசையைப் பூர்த்தி செய்து கொள் என்று கூறினாள். அவன் அப்படியே செய்து விஷ்ணுவிடம் ஒரு மாதுளம் கனியைப் பெற்றான். அதைப் பிளந்த போது அதிலிருந்து ஒரு அழகிய பெண் குழந்தையாக மகாலட்சுமி தோன்றினாள்.

அவளுக்கு பத்மை என பெயரிட்டு வளர்த்து, நீலநிறம் உள்ளவனுக்குதான் பெண் தருவேன் என்றான் அந்த அசுரன். உடனே அனைவரும் அவனிடம் போரிட்டு அவனைக் கொன்றனர். தந்தை இறந்ததும் யார் கையிலும் சிக்காமல் பத்மை தீக்குளித்தாள்.
ஆனால் தீயினுள் புதிய பூப்போல இருந்தாள். சிலநாள் சென்றதும் வெளியில் வந்து அமர்ந்தாள். அவ்வழியே சென்ற இராவணன் அவளைக் கண்டு மோகித்து அவளை அடைய முயன்றான். உடனே பத்மை, என்னால்தான் நீ அழிவாய் எனக் கூறிவிட்டு தீயில் பாய்ந்தாள். இராவணன் தீயை அணைத்துவிட்டு உள்ளே தேட ஒரு ரத்தினம் கிடைத்தது. அதை ஒரு பெட்டியில் வைத்து எடுத்துச் சென்று மண்டோதரியிடம் கொடுத்தான்.
அவள் அந்த பெட்டியை திறந்து பர்த்த போது அழகிய பெண் குழந்தை இருந்தது. அதைத் தன் குழந்தைபோல் எண்ணி கொஞ்சினாள். இராவணன் அந்தக் குழந்தையைத் தூக்க முயலும் போது, இராவணா! இந்தப் பெண் குழந்தையால் தான் உனக்கும், இலங்கைக்கும் அழிவு நேரும் என அசரீரி சொன்னது. உடனே அதைக் கொல்ல முயல, மண்டோதரி தடுத்து, இது நம் குழந்தை. இதைக் கொல்ல வேண்டாம் பெட்டியிலிட்டு கண்காணாமல் வெகுதொலைவில் சென்று பூமியில் புதைத்து விடுங்கள் என்றாள். அப்படியே இராவணன் காவலர்களிடம் ஆணையிட்டான். அக்குழந்தையை இமயமலை அடிவாரத்தில் புதைத்து விட்டனர்.

ஜனகர் மிதிலையில் ஏர் உழும்போது பெட்டியில் கிடைத்தது இந்தப் பெண் குழந்தை தான். அதற்கு சீதை எனப் பெயரிட்டு வளர்த்து இராமனுக்குத் திருமணம் செய்வித்தனர். அந்த சீதையைத் தான் வனவாசத்தின் போது இராவணன் தன் நாட்டுக்கே திரும்ப கொண்டு சென்று அதனாலேயே அழிந்தான்.

சனி, 11 ஜனவரி, 2014

ஸபரி




ராமாயணக் காலத்தின் பெண் முனிவர்களில் ஒருவர் ஸபரி. வேடவ இனத்தை சேர்ந்த இவர் சிறு வயது முதலே மதங்க ஆஸிரமத்தில் இணைக்கப் பட்டவர். சிறு வயதில் இவர் காட்டினில் காணப்படும் புதிய பழங்களை பறித்து மதங்க முனிவர் செல்லும் வழியில் வைத்திருப்பார். பல நாட்கள் இதை உண்ட முனிவர் ஒரு நாள் இது போல சிரமப் பட்டு பழங்களை வைத்து யார் தன்னை பூசிக்கிறார்கள் என்று தேடும் போது ஸபரி அவர் முன் நின்று தான் செய்து வந்ததாக சொன்னார். அன்று முதல் அவர் ஆஸிரமத்தின் ஒரு அங்கமானார்.
இறக்கும் தறுவாயில் மதங்க முனிவர் ஸபரியை அழைத்து விரைவில் ராம பிரான் இந்த ஆஸிரமத்திற்கு வருவார் எனவும் அவரை குறையேதும் இன்றி உபசரித்து வணங்கவேண்டும் என்றும் கூறினார். இப்போதுதான் மதங்க மாமுனிவரின் சீடர்களின் வியர்வை துளிகள் யாவும் பூக்களாக மாறி முனிவருடன் அவர்களும் சொர்க்கம் எய்தினர் என்று புராணம் சொல்கிறது. ஸபரி, ராமனின் வரவிற்காக அங்கேயே காத்திருந்தார்.

சீதையை தேடி ராமனும் லக்ஷுமனனும் வருகையில், வழியில் கபந்தன் என்பவனை கொல்ல நேரிட்டது. இறந்த கபந்தன் அசுரனாக மாறி மதங்க ஆஸிரமத்தில் ஸபரி அவர்களுக்காக காத்திருப்பதாக கூறினான். ராமனும் லக்ஷ்மனனும் ஸபரியை காண ஆஸிரமத்திற்கு சென்றனர். ஸபரி அவர்களை கண்டதும் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்து பூக்களும் பழங்களும் கொண்டு பூசித்தார்.
பின்னர் ஸபரி அவர்களை வேண்டி தவமிருந்து மான் தோலுடன் நெருப்பில் ஊடுருவி இந்த பூவுலக பந்தங்களில்ருந்து விடுபட்டு சாத்வீக தேவதையானார்.

ராமரின் ஆச்சர்யா பக்தியுடனும் அர்ச்சனா பக்தியுடனும் ஸபரி ஆச்சர்யனாக பரமபதத்தை அடைந்து ராம பிரானின் ஆசியுடன் மதங்க முனிவருடன் சொர்க்கத்தை சென்றடைந்தார்.

ஸ்ரீ ராம பிரான் ஜடாயு, குகன் மற்றும் ஸபரி என மூவருக்கு இவ்வுலகில் மோட்சத்தை கொடுத்தவர்.
வயதில் மூத்த ஸபரி தனது இறுதிக் காலத்தில் தனியாக யார் உதவியுமின்றி வாழ்ந்து சதா சர்வ காலமும் ஸ்ரீராமனின் புகழையே பாடிக் கொண்டிருந்தார். அவரது வரவிற்காக ஆஸிரமத்தில் வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தார்.

கிஷ்கிந்தையில் தாரா, லங்கையில் மண்டோதரி, அயோத்தியில் சுமித்ரா, மாதங்க ஆஸிரமத்தில் ஸபரி என இவர்கள் அனைவரும் ஸ்ரீராமனே இந்த அண்டத்தின் பரிபாலன் என கருத்தப் படும் பரதத்வம் என நம்பினர்.

தசதரரின் மகனான ஸ்ரீராமன் சிவம், சத்யம், சுந்தரம், தர்மம், கருணை, அழகு, உண்மை, நீதி, அன்பு மற்றும் புருதோதமம் அனைத்தும் தன்னுள் கொண்டவன் என்று பாடுகிறார் தியாகராஜ ஸாமிகள்.
இதையே தனது கருத்தாக கொண்டு இதற்கு முன்பு ஸ்ரீராமரை போற்றிப் பாடினார் ஸபரி. தாழ்ந்த இனமாக இருந்தும் அதி புத்திசாலியாக இல்லாதிருந்தும் அவர் தனது நிறைந்த மனதினால், நல்லது நடக்கும் போது ஆரவாரம் செய்யாதிருப்பதும் பாதகம் நேரும் போது விசனப் படாமல் இருப்பதும் அவருக்கு இயல்பாயிற்று. அதனால் அவர் இறை அருளைப் பெற்றார்.
அவர் இறைவனை சந்திக்கவும் அவரது அருளை பெறவும், இறைவன் திருவடி சேரவும் ஒன்பது வகையான பக்திகளை போற்றினார்.
ஸ்ரவனா: இறைவன் அருட்கதைகளை கேட்பது
கீர்த்தனா: இறையருளை போற்றிப் பாடுவது
ஸ்மரனா: இறைவன் பெயரை என் நேரமும் ஜபிப்பது
பாதசேவனா: இறைவன் திருவடிகளை பற்றிவது
அர்ச்சனா: இறைவனை வணங்குவது
வந்தனா: இறைவனுக்கு நம்மை சமர்ப்பிப்பது
தாஸ்யா: இறைவனுக்கு வேலைகாரனாக இருப்பது
ஸாக்யா: நம் மனதை இறைவனின் நிலமாக்கி பண்பட செய்வது
ஆத்ம நிவேதனா: நம்மை முழுமையாக இறைவனிடம் ஒப்படைப்பது ஆகியவன.