திங்கள், 12 ஆகஸ்ட், 2019

அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், திட்டை

அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், குரு பரிகாரதலம், திட்டை







, தஞ்சாவூர் மாவட்டம்

தஞ்சாவூர் வட்டத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூருக்கு வட மேற்கே 9 கி.மீ. தூரத்தில் திட்டை அல்லது தென்குடித்திட்டை என அழைக்கப்படும் கிராமத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. தஞ்சை, பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து திருக் கருகாவூர் செல்லும் பஸ்கள் மணிக்கொன்று உண்டு.

திருமணம், குழந்தை வரம் போன்ற நன்மைகள் குருவின் பார்வையினால் கிடைக்கும். அதிலும் தமிழகத்தில் ஏன் இந்தியாவிலேயே குரு பெயர்ச்சிக்கு சிறந்த தலம் என்றால் அது தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோவில்தானாம்.

வசிஷ்டேஸ்வரர் கோவில் மூலவாராவார். தாய் உலகநாயகி அம்மை.

இந்த கோவிலின் தல விருட்சம் முல்லை, வெண் செண்பகம், செவ்வந்தி ஆகும். தல விருட்சம் என்பது அந்தந்த பகுதியில் அதிகம் இருக்கும் மரங்களாகவே இருக்கும். அப்படி இந்த பகுதியில் அதிகம் வளர்ந்து நிற்கும் முல்லை, வெண் செண்பகம், செவ்வந்தி ஆகிய மரங்கள் தல விருட்சங்களாக இருக்கின்றன.

குருப்பெயர்ச்சி நாளில் இங்கு மிகுந்த கூட்டம் வரும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இந்த ஊருக்கு பக்தர்கள் வருகிறார்கள். திருகார்த்திகையும், மஹாசிவராத்ரியும் இங்கு கொண்டாடப்படும் மற்ற விழாக்கள் ஆகும்.

இந்த கோவிலில் ஒரு சிறப்பு இருக்கிறது. வருடத்தில் ஆறு நாட்கள் மட்டும் சூரியன் மூலவரின் மீது பட்டு சிறப்பு காட்டுகிறார். அதாவது ஆவணி மாதம் 15,16,17 ஆகிய நாட்களிலும், பங்குனி மாதம் 25,26,27 ஆகிய நாட்களிலும் இந்த சூரியன் தன் ஒளியை மூலவரின் மீது பாய்ச்சுகிறது.

மூலஸ்தானத்தில் மேற்புறமிருந்து தண்ணீர் மூலவருக்கு மேல சரியாக சொட்டுகிறது. இது இந்த கோவில் கட்டியதிலிருந்து நிகழ்கிறதாம். அதிலும் சரியா 20 நிமிடங்களுக்கு ஒரு முறை என இத்தனை வருடங்களாக சொட்டிக்கொண்டிருப்பது அதிசயமாகவே பார்க்கப்படுகிறது.

"பொதுவான" பக்தர்கள் கருவறையிலிருந்து சுமார் இருபதடிகள் தள்ளி நின்றுதான் ஸ்வாமியை தரிசிக்கவே முடியும். இந்த அழகில் எங்கே இதையெல்லாம் பார்ப்பது? கோவில் அர்ச்சகரும் இதிலெல்லாம் ஆர்வம் காட்டுவதில்லை. ஒரு அர்ச்சகர் ஓரமாக உட்கார்ந்து மொபைலில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார்.

சிவனின் தேவாரப்பாடல்கள் பாடப்பெற்ற 274 கோவில்களில் இதுவும் ஒன்று. இந்த கோவிலில் நடைபெறும் நித்யாபிஷேகம் வேற எந்த கோவிலிலும் நடைபெறாத ஒன்று.

திருமண தோஷம் இருக்கும் பெண்களுக்கு இந்த கோவிலுக்கு சென்று வந்தால் விரைவில் திருமணம் நடக்கும். வயது தாமதித்துக்கொண்டே இருந்தால், இந்த கோவிலுக்கு சென்று வரலாம். விரைவில் திருமண யோகமும், குழந்தை யோகமும் கிடைக்கும். வியாழன் பார்வை இருந்தால் தொழில் முன்னேற்றம் காணலாம் என்றும் கூறப்படுகிறது. இங்குள்ள மங்காம்பிகையை வழிபடுங்கள் எங்கிறார்கள்.

குரு பகவானுக்கு தமிழகத்தில் நிறைய கோவில்கள் இருந்தாலும், வசிஷ்டேஸ்வர் குருவை ராஜகுருவாக பார்க்கும் ஒரே தலம் இதுதான்.

மற்ற குரு ஸ்தலங்களில் தெட்சிணாமூர்த்திக்கே குருபெயர்ச்சி நடத்தப்படுகிறது இத்தலத்தில் மட்டும்தான் குருவுக்கு பெயர்ச்சி விழா கொண்டாடப்படுகிறது

தலம், தீர்த்தம், மூர்த்தம்... விசேஷங்கள்!

பல பெருமைகளைத் தாங்கி நிற்கிறது தென்குடித்திட்டை திருத்தலம். வசிஷ்டர் இங்கு வந்து ஆஸ்ரமம் அமைத்து, இறைவனை வழிபட்டு, தவமிருந்த புண்ணிய பூமி இது. எனவே இந்தத் தலம் வசிஷ்டாஸ்ரமம் எனும் பெயரைப் பெற்றது.

வசிஷ்ட முனிவர், க்ருதயுகத்தில் பலாஸவனம் எனப் பெயர் சூட்டியுள்ளார், இந்தத் தலத்துக்கு! ஸ்ரீபைரவர், திரேதா யுகத்தில்... இந்தத் தலத்தின் மகிமையை உணர்த்தும் வகையில், சம்யாகவனம் என்று இந்தத் தலத்தைப் போற்றிச் சொல்லியிருக்கிறார்.

துவாபர யுகத்தில், வில்வவனமாகத் திகழ்ந்த இந்தத் தலத்தை வில்வவனம் என்றே அழைத்துள்ளார் சேஷ பகவான்.

அதேபோல், தீர்த்தங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகப் போற்றப்படுகிறது. தென்குடித் திட்டை தலத்தில், பசு தீர்த்தம், சூல தீர்த்தம், சக்கர தீர்த்தம் ஆகியவை உள்ளன. பசு தீர்த்தத்தின் ஒரு துளி நீரானது, நம் சகல பாவங்களையும் போக்கிவிடும் வல்லமை கொண்டது என்கிறது ஸ்தல புராணம்.

சூல தீர்த்தமானது, சிவ பக்தியில் நம்மை திளைக்கச் செய்து, சிவனாரின் திருப்பாதத்தில் நம்மை ஆட்கொள்ளச் செய்யும் வல்லமை கொண்டது.

திருமால், தன் திருக்கரத்தில் உள்ள ஸ்ரீசக்கரத்தைக் கொண்டு உருவாக்கியதே சக்கர தீர்த்தம். அதற்கு இணையாக இருந்து சர்வ வல்லமைகளையும் தரவல்லது, தீயசக்திகளை அழித்து சகல யோகங்களும் தரக்கூடியது இந்த சக்கர தீர்த்தம் என்று போற்றுகிறார்கள் ஞானிகள்.

அடுத்து... மூர்த்தம்! புராணங்களிலும் புராதனக் குறிப்புகளிலும் கல்வெட்டுகளிலும் ஸ்வாமிக்கு இருக்கிற ஏகப்பட்ட திருநாமங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஸ்ரீதட்சிண குடீத்வீப க்ஷேத்திரேஸ்வரர் என்று திருநாமம் ஈசனுக்கு. அதாவது தென்குடித் திட்டை தலத்தின் ஈஸ்வரன் என்று அழைக்கப்படுகிறார் சிவனார்.

சுயம்பு மூர்த்தம் என்பதால், தானே தோன்றியவர் என்பதால், ஸ்ரீஸ்வயம்பூதேஸ்வரர் எனும் திருநாமமும் ஈசனுக்கு உண்டு. வசிஷ்ட மகரிஷி தவமிருந்து வழிபட்டதால், ஸ்ரீவசிஷ்டேஸ்வரர் என்றும் பசுக்கள் வணங்கி வழிபட்ட தலம் என்பதால் பசுபதீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார் சிவபெருமான்.

தவிர, ஸ்ரீஅனந்தீஸ்வரர், ஸ்ரீதேனுபுரீஸ்வரர், ஸ்ரீரதபுரீஸ்வரர், ஸ்ரீநாகநாதர், ஸ்ரீநாகேஸ்வரர் எனும் பெயர்களும் திட்டை சிவனாருக்கு உண்டு என்கின்றன குறிப்புகள்.

மகரம் ஆடுங்கொடி மன்மத வேள்தனை நிகரல் ஆகா நெருப்பு எழ விழித்தான் இடம் பகரவாள் நித்திலம் பன்மக ரத்தொடும் சிகர மாளிகை தொகும் தென்குடித் திட்டையே! என்று பாடுகிறார் திருஞானசம்பந்தர்.

அதாவது, மீன் கொடியை வைத்திருப்பவன் மன்மதன். அவனை தன் பார்வையால் சுட்டெரித்தவன் குடிகொண்டிருக்கும் தலம் என்று தென்குடித்திட்டையைச் சொல்கிறார்.

இந்திரலிங்கம்

விஷ்ணுவும், பிரம்மாவும் தங்களில் யார் பெரியவர் என்று நிரூபிக்க வராக அவதாரம் எடுத்து விஷ்ணு பூமியை குடைந்து சிவனின் அடியை தேட, பிரம்மதேவர் சிவனின் முடியை நோக்கி அன்னப் பறவையில் பறக்கிறார். ஆனால் விஷ்ணுவும், பிரம்மனும் தங்கள் முயற்ச்சியில் தோல்வியடைய சிவபெருமான் அடியையும், முடியையும் காணமுடியாத ஜோதி பிழம்பாக நின்ற இடம் திருவண்ணாமலை என்று புராணம் சொல்கிறது.

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அஷ்டலிங்கம் எனப்படும் 8 லிங்கங்கள்அமைந்துள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையை நோக்கியவாறு அமைக்கப்பட்டுள்ளன. அதோடு ஒவ்வொரு லிங்கமும் உலகில் இருக்கும் வெவ்வேறு திசைகளை குறிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த அஷ்ட லிங்கங்கள் இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசானியலிங்கம் என்ற பெயர்களில் அறியப்படுகின்றன. இவ்வெட்டு லிங்கங்களும் கிரிவலம் வரும் பாதையில் அமைந்திருப்பதோடு, இவற்றை தரிசனம் செய்வதால் வாழ்வின் துன்பங்கள் நீங்கி சுகவாழ்வு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

1. #இந்திரலிங்கம்

: கிரிவலம் செல்லும் வழியில் முதன்முதலில் நாம் தரிசிப்பது இந்திரலிங்கம். இந்த லிங்கம் கிழக்கு திசையை பார்த்தவாறு அமைக்கப்பட்டுள்ளது. இது தேவர்களின் தலைவன் இந்திரதேவனால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. மேலும் இந்த லிங்கம் சூரியன் மற்றும் சுக்கிரனின் ஆட்சியில் உள்ள லிங்கமாதலால் இதை வணங்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும், குறையில்லா செல்வமும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

- தொடரும்...

அக்னி லிங்கம்

அக்னி லிங்கம்


இந்து சமயத்தில் சிவபெருமானை அருவம், உருவம், அருவுருவம் என மூன்று நிலைகளில் வழிபடுகின்றனர். இவற்றில் லிங்க வழிபாடு அருவுருவ நிலையை குறிக்கிறது.

அதோடு ஆண் வடிவம் ருத்ர பாகம், விஷ்ணு பாகம், பிரம்ம பாகம் என் மூன்றாக பகுக்கப்பட்டுள்ள வேளையில், பெண் பாகம் சக்தி பாகம் என்று அழைக்கப்படுகிறது.

மேலும் உலகில் சுயம்பு லிங்கம், தேவி லிங்கம், காண லிங்கம், தைவிக லிங்கம், ஆரிட லிங்கம், அசுர லிங்கம், மானுட லிங்கம், பரார்த்த லிங்கம், சூக்கும லிங்கம், ஆன்மார்தத லிங்கம், அப்பு லிங்கம், தேயு லிங்கம், ஆகாச லிங்கம், வாயு லிங்கம், அக்னி லிங்கம் என பல வகை லிங்கங்கள் காணப்படுகின்றன.

அக்னி லிங்கம்:
கிரிவலப் பாதையில் இரண்டாவதாகவும், வலது புறத்தில் உள்ளது அக்னி லிங்கம். தென்கிழக்குத் திசை பஞ்ச பூதங்களில் அக்னி தலமே திருவண்ணாமலை என்பதால், இந்த லிங்கத்துக்கு தனி இடம். வாழ்க்கையில் வரும் இடைஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது. அக்னி லிங்கத்தின் கீழ் திசையில் அக்னி தீர்த்தம் உள்ளது. எதிரில் இருப்பது அக்னி மண்டபம். அக்னி லிங்கத்தின் அருகேயே ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகளின் ஆஸ்ரமம் உள்ளது. கிரிவலப் பாதையில் 3 ருத்ர மூர்த்திகள் அங்கப் பிரதட்சிணம் செய்தனர். அவர்களின் திருமேனிகள் ஜோதியாக மாறியது. ஒரு செவ்வாய்க்கிழமை அவர்கள் கிரிவலம் வந்தபோது, குறிப்பிட்ட இடத்தைக் கடக்கும்போது பனிமலை போன்ற குளிர்ச்சியை உணர்ந்தனர். அந்த இடமே சுயம்பு லிங்கமான அக்னி லிங்கம் என்கிறது ஆலய வரலாறு. அக்னி லிங்கத்தை வழிபட நோய்கள், பயம் நீங்கும். எதிரிகள் தொல்லை எரிந்து சாம்பலாகும்.

புதன், 7 ஆகஸ்ட், 2019

திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில்

16 பட்டைகளுடன் கூடிய மிகப்பெரிய லிங்கம் இது தான்.

திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில்























.

பண்ருட்டியின் மிக அருகில் உள்ள ஒரு கலை சிறப்பு மிக்க கோவில்.

பிரமாண்டமான லிங்கம். வழக்கமான உருளையாக இல்லாமல் பட்டை பட்டையாக 16 பட்டைகளை லிங்கத்தில் தாங்கி பிரகாசிக்கும் சிவன்.

திருநெல்வேலி அருகில் உள்ள, களக்காடு சிவன் கோவில் போல மிக பெரிய பரப்பளவில் அமைந்துள்ளது.

கட்டிடக் கலையிலும், சிற்பக் கலையிலும் தங்கள் கை வண்ணத்தை பிரமாதமாக வெளிபடுத்தி உள்ளனர். நம் வாழ் நாளில் கண்டிப்பாக காண வேண்டிய கோவில்களில் இதுவும் ஒன்று.

தல வரலாறு :

சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட எட்டு தலங்களில் முக்கியமான தலம் திருவதிகை. அட்ட வீரட்டானத் தலங்களில் ஒன்றாகத் திகழும் . திருவதிகையில் தான் சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்தார்.

வித்யுந்மாலி, தாருகாட்சன், கம்லாட்சன் என்ற மூன்று அசுரர்கள் பொன்,வெள்ளி,

இரும்பு ஆகியவற்றால் மூன்று கோட்டைகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர்.

இந்த கோட்டைகளுக்கு விமானம் போல் நினைத்த இடங்களுக்குச் செல்ல வசதியாக சிறகுகளும் இருந்தன. இந்த முப்புரங்களையும் வைத்துக் கொண்டு இந்த அசுரர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர்.

தேவர்கள் அசுரர்கள் தொல்லை பொறுக்கமுடியாமல் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

மூன்று அசுரர்களையும் அழிக்க சிவபெருமான் பூமியைத் தேராக்கி நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி

பிரம்மாவை சாரதியாக்கி சூரிய சந்திரர்களை சக்கரங்களாக்கி மற்ற எல்லா உலகப் படைப்புகளையும் போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாகி புறப்பட்டார்.

அச்சமயம் ஒவ்வொரு உறுப்பும் தன்னால் தான் முப்புரங்களையும் சிவபெருமான் வெல்லப் போகிறார் என்று நினைத்து கர்வம் கொள்ளத் தொடங்கின.

தன் பங்கு இல்லாமல் இப்படையில் எந்த ஒரு பயனும் இல்லை என்று அவர்களுக்குப் புரிய வைக்க நினைத்து சிவபெருமான் வில், அம்பு என எதையும் பயன்படுத்தாமல் அசுரர்களை பார்த்து சிரித்தார்.

அசுரர்கள் மூவரும் சாம்பலாயினர். தங்களின் உதவி இல்லாமல் ,அசுரர்களை அழித்ததை கண்ட தேவர்கள் தலைகுனிந்தனர். இச்சம்பவம் நடந்த இடம் தான் திருவதிகை.

இத்திருக்கோவிலின் கர்ப்ப கிரக விமானத்தை பார்த்து இராஜ இராஜ சோழன் பிற்காலத்தில்
தஞ்சை பெரிய கோவிலை கட்டினார் எங்கிறார்கள்.

சைவத்துக்குத், திருத்தொண்டுக்கு உறைப்பான திருநாவுக்கரசரை வழங்கியருளிய பெருமைமிகு தலமிதுவே.இவர் முதன்முதலில் தேவாரப்பாடல் பாட ஆரம்பித்த
தலம்.

அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று. திரிபுரத்தை எரித்த வீரச் செயல் நிகழ்ந்த தலம்.

ஞானசம்பந்தருக்கு இறைவன் திருநடனம் காட்டிய தலம்.

அப்பரின் தமக்கையார் திலகவதியார் தங்கியிருந்து திருத்தொண்டு செய்து வந்த திருத்தலம்.

திலகவதியார் தன் தம்பியாகிய (அப்பர்) மருள்நீக்கியாரை நல்வழிப்படுத்துமாறு இறைவனை வேண்ட, இறைவன் “சூலை தந்து ஆட்கொள்வோம்” என்று பதிலுறைத்த பதி.

இந்திரன், பிரம்மன், திருமால், பாண்டவர்கள், சப்தரிஷிகள், வாயு, வருணன், யமன் முதலானோர். இறைவன் தேரில் வந்ததால் இத்திருக்கோயிலின் அமைப்பும் தேர் வடிவில் உள்ளது.

இப்பகுதியில் புத்தமதம் சிறப்பாக ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றாண்டு காலகட்டத்தில் இருந்தது என்பதை இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

இத்திருக்கோயில் வளாகத்தில் உள்ள புத்தர் சிலை கோயிலுக்கு வரும் சிவபக்தர்களால் இன்றளவும் வழிபடப்படுகிறது.

இந்த புத்தர் சிலை அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளது. தமிழகத்தில் அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலைகளே அதிகமாக உள்ளன.

நின்ற நிலையிலான புத்தர் சிலைகள் மிகக்குறைந்த அளவில் உள்ளன. புன்னகை தவழும் முகம், புன்னகை சிந்தும் உதடுகள், சற்றே மூடிய நிலையிலான கண்கள், நீண்டு வளர்ந்த காதுகள் போன்ற கூறுகளுடன் மேலாடையுடன் இச்சிலை உள்ளது.

இந்த கோவில் கோபுரமும் நிழல் தரையில் படாது எங்கிறார்கள்.

பல்லவ மாமன்னன் மகேந்திரவர்மன் இக்கோயிலுக்குத் திருப்பணி செய்த பிறகு, அவனுக்கு பிறகு ஆட்சி புரிந்த, பரமேஸ்வரவர்ம பல்லவன் கருங்கற்கள் அமைப்பினால் கருவறையைக் கட்டி, செங்கல் சுண்ணாம்புச் சுதையால் விமானத்தை எழுப்பி அதில் அழகிய சிற்பங்களை அமைத்த பெருமை உடையவன். கி.பி 720-725-க்குள் கருவறையும், விமானமும் கட்டப்பட்டு விட்டன. பல சிறிய கோயில்களைக் கொண்ட இந்த கருவறை விமானம் 100 ச.மீ. பரப்பளவின் மீது 10.2 மீட்டர் நீளமும், 9.8 மீ. அகலமும் கொண்ட கருங்கற்களால் ஆன அதிட்டானத்தின் மீது உள்ள விமானம் 100 அடி உயரம் கொண்டது. அடிப்பாகத்தில் இருந்து உச்சிவரை சுதைச் சிற்பங்களைக் கொண்டது. இதுபோல் வேறு எங்கும் காண முடியாது.

சனி, 3 ஆகஸ்ட், 2019

ஆதி திருவரங்கம் ஸ்ரீ ரங்கநாதர்

ஆதி திருவரங்கம் ஸ்ரீ ரங்கநாதர்












சுவாமி : ரங்கநாத பெருமாள்.

அம்பாள் : ரங்கவள்ளி தாயார்.

தீர்த்தம் : சந்திரபுஷ்கரணி , தென் பெண்ணைநதி.

தலவிருட்சம் : புன்னாக மரம்.

விமானம் : சந்தோமய விமானம்.

திருக்கோவிலுரிலிருந்து திருவண்ணாமலை போகும் வழியில் மணலூர்பேட்டையில் இடது பக்கம் திரும்பி 11 கிமீ போனால் கோவில். கோவிலுக்கு வயது 1000 வருடங்களுக்கு குறையாமல் இருக்கும் என்பது கோவில் மதில் சுவரை பார்த்தாலே புரிந்து போகும். சில ஆர்வக் கோளாறுகள், 75000 வருடங்கள் என்று பதிந்துள்ளன. அதில் என்ன பெருமையோ?
நிற்க, இந்தக் கோவில் திருச்சி ஸ்ரீ ரங்கம் கோவிலை விட பழையது. ரெங்கநாதரும் அதைவிட பெரிது.  நிம்மதியாக, திருப்தியாக சன்னதிக்கு அருகில் நின்று தரிசனம் செய்த சம்பவம் இன்னமும் உடல் சிலிர்க்க வைக்குது. ஜருகண்டி, ஜருகண்டின்னு தமிழிலில் சொல்லி தள்ளி விட ஆள் இல்லை. கோவில் சிறப்பு தெரிந்த உள்ளூர் மற்றும் சுற்று வட்டார மக்கள் மட்டுமே வருகை தருகிறார்கள்.

 ஆதிஷேஷன் தலைமாட்டிலும், லெக்‌ஷ்மியின் மடியில் தலை வைத்து, காலடியில் பூமா தேவியும்.... அருமையான காட்சி. இவ்வளவு தெளிவாக பள்ளிக் கொண்ட காட்சியை பார்த்தது இதுதான் முதல் முறை.

(நாங்கள் ஸ்ரீரங்கத்திலேயே பார்த்திருக்கோம் என்பவர்கள் கொஞ்சம் தள்ளியே நிற்கவும். கலர் நன்றாக தெரிகிறது. நான் என்னைப் போல சாதாரன மனிதர்களை சொல்லியிருக்கிறேன்)

ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதப் பெருமாளே நாட்டில் பெரிய பெருமாள் சிலை என நாம் எண்ணிவிடுகிறோம். ஆனால், அது உண்மையில்லை. தமிழகத்திலேயே மிக மிகப் பெரிய பெருமாளின் சிலை ஆதிதிருவங்கத்தில் தான் உள்ளது.

திராவிட கட்டிடக் கலையின் மூலம் இடைக்கால சோழர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படும் இத்தலத்தின் ஒரு பகுதியாக விஜயநகர அரசாங்கம் மூலம் ஐந்து ஏக்கர் பரப்பளவில் வரலாற்றுச் சிறப்புமிக்க தானிய சேமிப்பு கொள்கலனும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

திவ்ய தேசம் 108 கோவில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.  இவைகள்  அனைத்தையும் விட சிறப்பானது மற்றும் பழமையானது ஆதி திருவரங்கம்.  ஏன் என்றால்  ஆதி திருவரங்கம் திருமாலின் முதல் அவதாரத்தில் நிர்மாணிக்கப்படுகிறது.  ஆதி திருவரங்கம்  அடுத்து ஸ்ரீரங்கம் என்ற சொல் இங்கு அணைத்து பகுதிகளிலும் பேசப்பட்டு வருகிறது.

அசுரகுல வம்சத்தில் தோன்றி ஆட்சிபுரிந்து வந்த சோமுகன் என்னும் அசுரன்  மிகவும் கடுமையான தவங்களை செய்து பல வரங்களையும் அழியாத ஆயுளையும் பெற்றான்.   அசுர குலத்துக்கே உரிய ஆவணமும், அரக்கத்தனமும் அவனுக்கு இருந்தது.  பூவுலகையும்,  தேவலோகங்களையும் தனது ஆட்சிக்குள் கொண்டு வர வேண்டும்.   முனிவர்களும், தேவர்களும்  தனக்கு சேவை செய்ய வேண்டும் என்று எண்ணினான்.  அவ்வாறே பூவுலகம், தேவலோகம்  எல்லாவற்றையும் வென்று முனிவர்களையும் தேவர்களையும் தனது அடிமைகளாக்கி தனக்கு  சேவை செய்யுமாறு பணித்தான்.
மும்மூர்த்திகளில் பிரம்மாவை சிறைபிடித்து வேத சாஸ்திரங்களை அவரிடமிருந்து கவர்ந்து  சென்று விட்டான்.  பிரம்மாவும், தேவர்களும், முனிவர்களும் திருப்பாற்கடல் சென்று ஸ்ரீமன்  நாராயணனை வணங்கி சோமுகனை வதம் செய்து தங்களை காத்தருளுமாறு வேண்டினார்.   நாராயணனும் சோமுகனை வதம் செய்ய சென்றார்.  இருவருக்கும் மிகப்பெரிய அளவில் போர்  நடந்தது.  சோமுகன் தனது எல்லா மாயாஜாலங்களையும் காட்டி போர் புரிந்து சோர்ந்து விட்டான்.   இனி இருந்தால் நாராயணன் அழித்து விடுவான் என எண்ணி கடலுக்கு அடியில் சென்று பதுங்கி  விட்டான்.
ஸ்ரீமன் நாராயணன் அழியா வரம் பெற்ற சோமுகனை மத்ஸ்ய அவதாரமெடுத்து கடலுக்கு அடியில்  சென்று வதம் செய்து வேத சாஸ்திரங்களை மீட்டு வந்தார்.  மீட்டு வந்த வேத சாஸ்திரங்களை  உத்தரங்கம் எனும் இந்த இடத்தில் மீண்டும் பிரம்மாவுக்கு உபதேசம் செய்தார்.   தேவர்களும்,  முனிவர்களும் மனம் மகிழ்ந்து ஸ்ரீமன் நாராயணனை வணங்கினார்கள்.

கோயில் நடை, காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும் என்பது மகா சிறப்பு.