திங்கள், 12 ஆகஸ்ட், 2019

அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், திட்டை

அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், குரு பரிகாரதலம், திட்டை







, தஞ்சாவூர் மாவட்டம்

தஞ்சாவூர் வட்டத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூருக்கு வட மேற்கே 9 கி.மீ. தூரத்தில் திட்டை அல்லது தென்குடித்திட்டை என அழைக்கப்படும் கிராமத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. தஞ்சை, பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து திருக் கருகாவூர் செல்லும் பஸ்கள் மணிக்கொன்று உண்டு.

திருமணம், குழந்தை வரம் போன்ற நன்மைகள் குருவின் பார்வையினால் கிடைக்கும். அதிலும் தமிழகத்தில் ஏன் இந்தியாவிலேயே குரு பெயர்ச்சிக்கு சிறந்த தலம் என்றால் அது தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோவில்தானாம்.

வசிஷ்டேஸ்வரர் கோவில் மூலவாராவார். தாய் உலகநாயகி அம்மை.

இந்த கோவிலின் தல விருட்சம் முல்லை, வெண் செண்பகம், செவ்வந்தி ஆகும். தல விருட்சம் என்பது அந்தந்த பகுதியில் அதிகம் இருக்கும் மரங்களாகவே இருக்கும். அப்படி இந்த பகுதியில் அதிகம் வளர்ந்து நிற்கும் முல்லை, வெண் செண்பகம், செவ்வந்தி ஆகிய மரங்கள் தல விருட்சங்களாக இருக்கின்றன.

குருப்பெயர்ச்சி நாளில் இங்கு மிகுந்த கூட்டம் வரும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இந்த ஊருக்கு பக்தர்கள் வருகிறார்கள். திருகார்த்திகையும், மஹாசிவராத்ரியும் இங்கு கொண்டாடப்படும் மற்ற விழாக்கள் ஆகும்.

இந்த கோவிலில் ஒரு சிறப்பு இருக்கிறது. வருடத்தில் ஆறு நாட்கள் மட்டும் சூரியன் மூலவரின் மீது பட்டு சிறப்பு காட்டுகிறார். அதாவது ஆவணி மாதம் 15,16,17 ஆகிய நாட்களிலும், பங்குனி மாதம் 25,26,27 ஆகிய நாட்களிலும் இந்த சூரியன் தன் ஒளியை மூலவரின் மீது பாய்ச்சுகிறது.

மூலஸ்தானத்தில் மேற்புறமிருந்து தண்ணீர் மூலவருக்கு மேல சரியாக சொட்டுகிறது. இது இந்த கோவில் கட்டியதிலிருந்து நிகழ்கிறதாம். அதிலும் சரியா 20 நிமிடங்களுக்கு ஒரு முறை என இத்தனை வருடங்களாக சொட்டிக்கொண்டிருப்பது அதிசயமாகவே பார்க்கப்படுகிறது.

"பொதுவான" பக்தர்கள் கருவறையிலிருந்து சுமார் இருபதடிகள் தள்ளி நின்றுதான் ஸ்வாமியை தரிசிக்கவே முடியும். இந்த அழகில் எங்கே இதையெல்லாம் பார்ப்பது? கோவில் அர்ச்சகரும் இதிலெல்லாம் ஆர்வம் காட்டுவதில்லை. ஒரு அர்ச்சகர் ஓரமாக உட்கார்ந்து மொபைலில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார்.

சிவனின் தேவாரப்பாடல்கள் பாடப்பெற்ற 274 கோவில்களில் இதுவும் ஒன்று. இந்த கோவிலில் நடைபெறும் நித்யாபிஷேகம் வேற எந்த கோவிலிலும் நடைபெறாத ஒன்று.

திருமண தோஷம் இருக்கும் பெண்களுக்கு இந்த கோவிலுக்கு சென்று வந்தால் விரைவில் திருமணம் நடக்கும். வயது தாமதித்துக்கொண்டே இருந்தால், இந்த கோவிலுக்கு சென்று வரலாம். விரைவில் திருமண யோகமும், குழந்தை யோகமும் கிடைக்கும். வியாழன் பார்வை இருந்தால் தொழில் முன்னேற்றம் காணலாம் என்றும் கூறப்படுகிறது. இங்குள்ள மங்காம்பிகையை வழிபடுங்கள் எங்கிறார்கள்.

குரு பகவானுக்கு தமிழகத்தில் நிறைய கோவில்கள் இருந்தாலும், வசிஷ்டேஸ்வர் குருவை ராஜகுருவாக பார்க்கும் ஒரே தலம் இதுதான்.

மற்ற குரு ஸ்தலங்களில் தெட்சிணாமூர்த்திக்கே குருபெயர்ச்சி நடத்தப்படுகிறது இத்தலத்தில் மட்டும்தான் குருவுக்கு பெயர்ச்சி விழா கொண்டாடப்படுகிறது

தலம், தீர்த்தம், மூர்த்தம்... விசேஷங்கள்!

பல பெருமைகளைத் தாங்கி நிற்கிறது தென்குடித்திட்டை திருத்தலம். வசிஷ்டர் இங்கு வந்து ஆஸ்ரமம் அமைத்து, இறைவனை வழிபட்டு, தவமிருந்த புண்ணிய பூமி இது. எனவே இந்தத் தலம் வசிஷ்டாஸ்ரமம் எனும் பெயரைப் பெற்றது.

வசிஷ்ட முனிவர், க்ருதயுகத்தில் பலாஸவனம் எனப் பெயர் சூட்டியுள்ளார், இந்தத் தலத்துக்கு! ஸ்ரீபைரவர், திரேதா யுகத்தில்... இந்தத் தலத்தின் மகிமையை உணர்த்தும் வகையில், சம்யாகவனம் என்று இந்தத் தலத்தைப் போற்றிச் சொல்லியிருக்கிறார்.

துவாபர யுகத்தில், வில்வவனமாகத் திகழ்ந்த இந்தத் தலத்தை வில்வவனம் என்றே அழைத்துள்ளார் சேஷ பகவான்.

அதேபோல், தீர்த்தங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகப் போற்றப்படுகிறது. தென்குடித் திட்டை தலத்தில், பசு தீர்த்தம், சூல தீர்த்தம், சக்கர தீர்த்தம் ஆகியவை உள்ளன. பசு தீர்த்தத்தின் ஒரு துளி நீரானது, நம் சகல பாவங்களையும் போக்கிவிடும் வல்லமை கொண்டது என்கிறது ஸ்தல புராணம்.

சூல தீர்த்தமானது, சிவ பக்தியில் நம்மை திளைக்கச் செய்து, சிவனாரின் திருப்பாதத்தில் நம்மை ஆட்கொள்ளச் செய்யும் வல்லமை கொண்டது.

திருமால், தன் திருக்கரத்தில் உள்ள ஸ்ரீசக்கரத்தைக் கொண்டு உருவாக்கியதே சக்கர தீர்த்தம். அதற்கு இணையாக இருந்து சர்வ வல்லமைகளையும் தரவல்லது, தீயசக்திகளை அழித்து சகல யோகங்களும் தரக்கூடியது இந்த சக்கர தீர்த்தம் என்று போற்றுகிறார்கள் ஞானிகள்.

அடுத்து... மூர்த்தம்! புராணங்களிலும் புராதனக் குறிப்புகளிலும் கல்வெட்டுகளிலும் ஸ்வாமிக்கு இருக்கிற ஏகப்பட்ட திருநாமங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஸ்ரீதட்சிண குடீத்வீப க்ஷேத்திரேஸ்வரர் என்று திருநாமம் ஈசனுக்கு. அதாவது தென்குடித் திட்டை தலத்தின் ஈஸ்வரன் என்று அழைக்கப்படுகிறார் சிவனார்.

சுயம்பு மூர்த்தம் என்பதால், தானே தோன்றியவர் என்பதால், ஸ்ரீஸ்வயம்பூதேஸ்வரர் எனும் திருநாமமும் ஈசனுக்கு உண்டு. வசிஷ்ட மகரிஷி தவமிருந்து வழிபட்டதால், ஸ்ரீவசிஷ்டேஸ்வரர் என்றும் பசுக்கள் வணங்கி வழிபட்ட தலம் என்பதால் பசுபதீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார் சிவபெருமான்.

தவிர, ஸ்ரீஅனந்தீஸ்வரர், ஸ்ரீதேனுபுரீஸ்வரர், ஸ்ரீரதபுரீஸ்வரர், ஸ்ரீநாகநாதர், ஸ்ரீநாகேஸ்வரர் எனும் பெயர்களும் திட்டை சிவனாருக்கு உண்டு என்கின்றன குறிப்புகள்.

மகரம் ஆடுங்கொடி மன்மத வேள்தனை நிகரல் ஆகா நெருப்பு எழ விழித்தான் இடம் பகரவாள் நித்திலம் பன்மக ரத்தொடும் சிகர மாளிகை தொகும் தென்குடித் திட்டையே! என்று பாடுகிறார் திருஞானசம்பந்தர்.

அதாவது, மீன் கொடியை வைத்திருப்பவன் மன்மதன். அவனை தன் பார்வையால் சுட்டெரித்தவன் குடிகொண்டிருக்கும் தலம் என்று தென்குடித்திட்டையைச் சொல்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக