ஞாயிறு, 28 ஜூலை, 2019

திருக்கருகாவூர்

திருக்கருகாவூர்















கும்பகோணம் - ஆவூர் - மிலட்டூர் வழியாகத் தஞ்சாவூர் செல்லும் சாலையில் உள்ள தலம். இத்தலத்திற்கு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்தும், கும்பகோணத்திலிருந்தும் நகரப் பேருந்துகள் உள்ளன.

மெயின் ரோடில் இறங்கி சுமார் ஒரு கிலோமீட்டர் கோவிலுக்கு நடக்கனும். ஆட்டோக்கள் உள்ளன.

திட்டை எனும் ஸ்தலத்திலிருந்து 8கிமீ தூரத்தில் உள்ளது.

இறைவர் திருப்பெயர்:
கர்ப்பபுரீஸ்வரர், முல்லைவனநாதர், மாதவிவனேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்:
கர்ப்ப ரக்ஷாம்பிகை

தல மரம்:
முல்லை

தீர்த்தம் :
க்ஷீரகுண்டம், சத்திய கூபம், பிரமதீர்த்தம் முதலியன

வழிபட்டோர்:
சம்பந்தர், அப்பர், பிரமன், கௌதமர், சந்திரன் ஆகியோர்.

தல வரலாறு
ஊர்த்தவ மகரிஷியின் சாபத்தால் நித்துவரின் மனைவி வேதிகைக்கு ஏற்பட்ட கருச்சிதைவை இறைவன் மருத்துவம் பார்த்து அவள் கருவைக் காத்ததால் - கருகாவூர் என்று பெயர் பெற்றது.


மாதவி வனம் என்று குறிப்பிடப்படும் இத்தலம் முல்லைக்காடாக விளங்கியது.
இத்தலத்தைத் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு மூன்று அடி நடந்தால் முதலாவது அடியால் பாவ வினைகள் முழுதும் அகலும் என்றும், இரண்டாவது அடியால், அமரர் உலகையும் பெறலாம் என்றும், மூன்றாவது அடியால் சிவசாயுஜ்ஜியம் பெறலாம் என்றும் தலபுராணம் குறிப்பிடுகிறது.

இத்தலத்தை நினைத்தாலும், இதன் பெயரைச்சொன்னாலும் , அதனைக் கண்டாலும், அங்கு வசித்தாலும், இதன் வழியாகப் பிற ஊர்களுக்குச் சென்றாலும் பாவங்கள் நீங்கப்பெற்று, போகங்கள் யாவும் பெற்று, நிறைவாக இறைவன் காலடியை அடைவர் என்கிறது தலபுராணம்.
வடக்கு பிராகாரத்தில் ஸ்தல விருக்ஷமான முல்லை உள்ளது. சபா மண்டபம் குதிரை பூட்டிய ரத வடிவில் உள்ளது.
இங்கு நித்துருவர், கார்க்கியர், சங்குகர்ணன் ஆகியோர் பூஜித்த சிவலிங்கங்கள் உள்ளன.

நிருத்துருவமுனிவரின் பத்தினி வேதிகை, கர்பகாலத்தில் நேர்ந்த அயர்ச்சியால், அங்கு வந்த ஊர்த்துவபாத முனிவரை உபசரிக்க  இயலாமல் போகவே, கோபம் கொண்ட முனிவர், அவளது கர்ப்பம் சிதையுமாறு சபித்தார். அதனால் துயரமுற்ற தம்பதியர்,இறைவனையும் இறைவியையும் சரணடைந்து துதிக்கவே, வேதிகையின் கரு சிதையாமல் அம்பாள் காத்து ரக்ஷித்தபடியால் கர்ப்ப ரக்ஷாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள்.

அகந்தையால் படைப்புத் தொழிலை இழந்த பிரமன் இங்கு வந்து, தன் பெயரால் தீர்த்தம் அமைத்து, இறைவனை வழிபட்டு மீண்டும் படைப்புத் தொழிலைக் கைவரப்பெற்றான்.

கேரள தேசத்தைச் சேர்ந்த சுவர்நாகரன் என்பவன் சாபத்தால் பைசாச வடிவம் கொண்டு பல பிறவிகள் துன்புற்ற பின்னர், கார்க்கிய முனிவரின் அறிவுரைப்படி இத்தலத்திற்கு வந்து, பிரம தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வழிபட்டதால் பழைய வடிவை மீண்டும் பெற்றான்.
கோஹத்தி தோஷம் நீங்க வேண்டி கௌதம முனிவர் இத்தல இறைவனை வழிபட்டு நற்கதி பெற்றார்.

சாபத்தினால் புலி வடிவம் கொண்ட குஜத்வஜன் என்ற மன்னன் கார்த்திகை ஞாயிறுகளில் இறைவனை வழிபட்டுப் பழைய வடிவம் பெற்று, வைகாசியில் பிரம்மோற்சவ விழா நடத்தினான்.
குரு சாபத்தால் பேய் உருவம் பெற்ற சங்கு கர்ணன் என்பவன் முல்லைவன நாதரை மார்கழித் திருவாதிரையன்று வழிபட்டுப் பழைய உருவம் பெற்றான்.
தக்ஷ சாபம் நீங்க வேண்டிச் சந்திரன் வழிபட்டான். இன்றும் பங்குனி மாதப் பௌர்ணமியில் சந்திரனின் கிரணங்கள் இறைவன் மீது படுவதைக் காணலாம்.

சிறப்புகள்
இங்கு தலவிநாயகராக கற்பகவிநாயகர் உள்ளார்.

முல்லைவனம், மாதவிவனம், கர்ப்பபுரி என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள்.

கருச்சிதைவுற்று மகப்பேறின்றி இருப்போர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு மகப்பேறு அடைகின்றனர்.

இத்தலத்தை வழிபடுவோர்க்குக் குறைப்பிரசவம் ஏற்படுவதில்லை. கர்ப்ப வேதனையும் மிகுதியாவதில்லை. கருவுடன் மரணமடைவோரும் இலர். கருவைத் தருவதும், காப்பதுமாகிய அருள் திறன் பொருந்தி அம்பாள் விளங்குகிறாள்.

காவிரியின் தென்கரையிலுள்ள பஞ்ச ஆரண்யங்களுள் இதுவுமொன்று; அவை:- 1. கருகாவூர் - முல்லைவனம்,
2. அவளிவணல்லூர் - பாதிரிவணம்,
3. அரதைப்பெரும்பாழி - வன்னிவனம்,
4. இரும்பூளை - பூளைவனம்,
5. கொள்ளம்புதூர் - வில்வவனம் என்பனவாம். (இவ்வைந்து தலங்களையும் முறையே வைகறை, காலை, நண்பகல், மாலை, அர்த்த சாமம் ஆகிய காலங்களில் வழிபடும் பழக்கமும் வழக்கில் உள்ளது.)

 இக்கோயிலில் ரதவடிவிலான சபாமண்டபமும் அதில் நித்துவ முனிவர் பூசித்த லிங்கமும் உள்ளது.

 மூலவர் சுயம்பு மூர்த்தி; மேற்புறம் பிருதிவிபாகம்; புற்று மண்ணாலாகியது. சுவாமி திருமேனியில் முல்லைக்கொடி (இத்தலம் ஒரு காலத்தில் முல்லை வனமாக இருந்ததால்) சுற்றிய வடு உள்ளது.

 இங்குள்ள நந்தி - உளிபடாத விடங்கமூர்த்தம் என்பர்.
தேவகோஷ்டங்களில் மேற்கில் அர்தநாரீஸ்வரரும், தெற்கில் தட்சிணாமூர்த்தியும் சிறப்பு வாய்ந்த மூர்த்தங்கள்.

இத்தல அம்பாளுக்கு சுத்தமான நெய்யால் தீபமிட்டு, நெய்யால் அம்பாள் திருவடியில் அபிஷேகம் செய்து அந்நெய்யையுண்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.

கருவுற்ற பெண்களுக்குச் சுகப்பிரசவம் உண்டாகும் பொருட்டு, ஸ்ரீ கர்ப்பரக்ஷ£ம்பிகையின் திருவடியில் வைத்து, மந்திரித்து விளக்கெண்ணெய் தரப்படுகிறது. பிரசவ வலியேற்படும் காலத்தில் இதை வயிற்றில் தடவிவர, சுகப்பிரசவமாகும்.

சோழர்கள், மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மன் கால கல்வெட்டுக்கள் உள்ளன.

முதலாம் இராசராசன் கல்வெட்டில் "நித்தவிநோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்துத் திருக்கருகாவூர் " என்று தலம் குறிக்கப்படுகின்றது.

கோவிலுக்கு எதிரில் உள்ளதும்,காமதேனுவின் பாலால் ஏற்பட்டதுமான பால் குளத்தில் சிவராத்திரியன்று தீர்த்தவாரி நடைபெறுகிறது. ஊருக்குத் தென்மேற்கிலுள்ள பிரம தீர்த்தத்தில் நடராஜப்பெருமான் மார்கழித் திருவாதிரையிலும் முள்ளிவாய்,விருத்த காவேரி என்று அழைக்கப்படும் வெட்டாற்றின் படித்துறையில் வைகாசி விசாகத்தில்  தீர்த்தவாரியும்  நடைபெறுகிறது.

வெள்ளி, 26 ஜூலை, 2019

அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில்

அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், குரு பரிகாரதலம், திட்டை, தஞ்சாவூர் மாவட்டம்

தஞ்சாவூர் வட்டத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூருக்கு வட மேற்கே 9 கி.மீ. தூரத்தில் திட்டை அல்லது தென்குடித்திட்டை என அழைக்கப்படும் கிராமத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. தஞ்சை, பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து திருக் கருகாவூர் செல்லும் பஸ்கள் மணிக்கொன்று உண்டு.

திருமணம், குழந்தை வரம் போன்ற நன்மைகள் குருவின் பார்வையினால் கிடைக்கும். அதிலும் தமிழகத்தில் ஏன் இந்தியாவிலேயே குரு பெயர்ச்சிக்கு சிறந்த தலம் என்றால் அது தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோவில்தானாம்.

வசிஷ்டேஸ்வரர் கோவில் மூலவாராவார். தாய் உலகநாயகி அம்மை.

இந்த கோவிலின் தல விருட்சம் முல்லை, வெண் செண்பகம், செவ்வந்தி ஆகும். தல விருட்சம் என்பது அந்தந்த பகுதியில் அதிகம் இருக்கும் மரங்களாகவே இருக்கும். அப்படி இந்த பகுதியில் அதிகம் வளர்ந்து நிற்கும் முல்லை, வெண் செண்பகம், செவ்வந்தி ஆகிய மரங்கள் தல விருட்சங்களாக இருக்கின்றன.

குருப்பெயர்ச்சி நாளில் இங்கு மிகுந்த கூட்டம் வரும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இந்த ஊருக்கு பக்தர்கள் வருகிறார்கள். திருகார்த்திகையும், மஹாசிவராத்ரியும் இங்கு கொண்டாடப்படும் மற்ற விழாக்கள் ஆகும்.

இந்த கோவிலில் ஒரு சிறப்பு இருக்கிறது. வருடத்தில் ஆறு நாட்கள் மட்டும் சூரியன் மூலவரின் மீது பட்டு சிறப்பு காட்டுகிறார். அதாவது ஆவணி மாதம் 15,16,17 ஆகிய நாட்களிலும், பங்குனி மாதம் 25,26,27 ஆகிய நாட்களிலும் இந்த சூரியன் தன் ஒளியை மூலவரின் மீது பாய்ச்சுகிறது.

மூலஸ்தானத்தில் மேற்புறமிருந்து தண்ணீர் மூலவருக்கு மேல சரியாக சொட்டுகிறது. இது இந்த கோவில் கட்டியதிலிருந்து நிகழ்கிறதாம். அதிலும் சரியா 20 நிமிடங்களுக்கு ஒரு முறை என இத்தனை வருடங்களாக சொட்டிக்கொண்டிருப்பது அதிசயமாகவே பார்க்கப்படுகிறது.

"பொதுவான" பக்தர்கள் கருவறையிலிருந்து சுமார் இருபதடிகள் தள்ளி நின்றுதான் ஸ்வாமியை தரிசிக்கவே முடியும். இந்த அழகில் எங்கே இதையெல்லாம் பார்ப்பது? கோவில் அர்ச்சகரும் இதிலெல்லாம் ஆர்வம் காட்டுவதில்லை. ஒரு அர்ச்சகர் ஓரமாக உட்கார்ந்து மொபைலில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார்.

சிவனின் தேவாரப்பாடல்கள் பாடப்பெற்ற 274 கோவில்களில் இதுவும் ஒன்று. இந்த கோவிலில் நடைபெறும் நித்யாபிஷேகம் வேற எந்த கோவிலிலும் நடைபெறாத ஒன்று.

திருமண தோஷம் இருக்கும் பெண்களுக்கு இந்த கோவிலுக்கு சென்று வந்தால் விரைவில் திருமணம் நடக்கும். வயது தாமதித்துக்கொண்டே இருந்தால், இந்த கோவிலுக்கு சென்று வரலாம். விரைவில் திருமண யோகமும், குழந்தை யோகமும் கிடைக்கும். வியாழன் பார்வை இருந்தால் தொழில் முன்னேற்றம் காணலாம் என்றும் கூறப்படுகிறது. இங்குள்ள மங்காம்பிகையை வழிபடுங்கள் எங்கிறார்கள்.

குரு பகவானுக்கு தமிழகத்தில் நிறைய கோவில்கள் இருந்தாலும், வசிஷ்டேஸ்வர் குருவை ராஜகுருவாக பார்க்கும் ஒரே தலம் இதுதான்.

மற்ற குரு ஸ்தலங்களில் தெட்சிணாமூர்த்திக்கே குருபெயர்ச்சி நடத்தப்படுகிறது இத்தலத்தில் மட்டும்தான் குருவுக்கு பெயர்ச்சி விழா கொண்டாடப்படுகிறது

தலம், தீர்த்தம், மூர்த்தம்... விசேஷங்கள்!

பல பெருமைகளைத் தாங்கி நிற்கிறது தென்குடித்திட்டை திருத்தலம். வசிஷ்டர் இங்கு வந்து ஆஸ்ரமம் அமைத்து, இறைவனை வழிபட்டு, தவமிருந்த புண்ணிய பூமி இது. எனவே இந்தத் தலம் வசிஷ்டாஸ்ரமம் எனும் பெயரைப் பெற்றது.

வசிஷ்ட முனிவர், க்ருதயுகத்தில் பலாஸவனம் எனப் பெயர் சூட்டியுள்ளார், இந்தத் தலத்துக்கு! ஸ்ரீபைரவர், திரேதா யுகத்தில்... இந்தத் தலத்தின் மகிமையை உணர்த்தும் வகையில், சம்யாகவனம் என்று இந்தத் தலத்தைப் போற்றிச் சொல்லியிருக்கிறார்.

துவாபர யுகத்தில், வில்வவனமாகத் திகழ்ந்த இந்தத் தலத்தை வில்வவனம் என்றே அழைத்துள்ளார் சேஷ பகவான்.

அதேபோல், தீர்த்தங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகப் போற்றப்படுகிறது. தென்குடித் திட்டை தலத்தில், பசு தீர்த்தம், சூல தீர்த்தம், சக்கர தீர்த்தம் ஆகியவை உள்ளன. பசு தீர்த்தத்தின் ஒரு துளி நீரானது, நம் சகல பாவங்களையும் போக்கிவிடும் வல்லமை கொண்டது என்கிறது ஸ்தல புராணம்.

சூல தீர்த்தமானது, சிவ பக்தியில் நம்மை திளைக்கச் செய்து, சிவனாரின் திருப்பாதத்தில் நம்மை ஆட்கொள்ளச் செய்யும் வல்லமை கொண்டது.

திருமால், தன் திருக்கரத்தில் உள்ள ஸ்ரீசக்கரத்தைக் கொண்டு உருவாக்கியதே சக்கர தீர்த்தம். அதற்கு இணையாக இருந்து சர்வ வல்லமைகளையும் தரவல்லது, தீயசக்திகளை அழித்து சகல யோகங்களும் தரக்கூடியது இந்த சக்கர தீர்த்தம் என்று போற்றுகிறார்கள் ஞானிகள்.

அடுத்து... மூர்த்தம்! புராணங்களிலும் புராதனக் குறிப்புகளிலும் கல்வெட்டுகளிலும் ஸ்வாமிக்கு இருக்கிற ஏகப்பட்ட திருநாமங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஸ்ரீதட்சிண குடீத்வீப க்ஷேத்திரேஸ்வரர் என்று திருநாமம் ஈசனுக்கு. அதாவது தென்குடித் திட்டை தலத்தின் ஈஸ்வரன் என்று அழைக்கப்படுகிறார் சிவனார்.

சுயம்பு மூர்த்தம் என்பதால், தானே தோன்றியவர் என்பதால், ஸ்ரீஸ்வயம்பூதேஸ்வரர் எனும் திருநாமமும் ஈசனுக்கு உண்டு. வசிஷ்ட மகரிஷி தவமிருந்து வழிபட்டதால், ஸ்ரீவசிஷ்டேஸ்வரர் என்றும் பசுக்கள் வணங்கி வழிபட்ட தலம் என்பதால் பசுபதீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார் சிவபெருமான்.

தவிர, ஸ்ரீஅனந்தீஸ்வரர், ஸ்ரீதேனுபுரீஸ்வரர், ஸ்ரீரதபுரீஸ்வரர், ஸ்ரீநாகநாதர், ஸ்ரீநாகேஸ்வரர் எனும் பெயர்களும் திட்டை சிவனாருக்கு உண்டு என்கின்றன குறிப்புகள்.

மகரம் ஆடுங்கொடி மன்மத வேள்தனை நிகரல் ஆகா நெருப்பு எழ விழித்தான் இடம் பகரவாள் நித்திலம் பன்மக ரத்தொடும் சிகர மாளிகை தொகும் தென்குடித் திட்டையே! என்று பாடுகிறார் திருஞானசம்பந்தர்.

அதாவது, மீன் கொடியை வைத்திருப்பவன் மன்மதன். அவனை தன் பார்வையால் சுட்டெரித்தவன் குடிகொண்டிருக்கும் தலம் என்று தென்குடித்திட்டையைச் சொல்கிறார்.