வியாழன், 28 நவம்பர், 2013

கஜேந்திர மோக்ஷம்


கஜேந்திர மோக்ஷம்

108 திவ்ய தேசங்களில் ஒன்று தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் என்ற ஊரில் அமைந்திருக்கும் கஜேந்த்ர வரதர் கோவில். விஷ்ணு பகவான் புஜங்க சயனத்தில் எழுந்தருளியிருக்கும் இருக்கும் காட்சி.
கபிஸ்தலம், திருக் கண்ணமங்கை, திருக் கண்ணபுரம், திருக் கோவிலூர் மற்றும் திருக் கண்ணக்குடி ஆகிய கோவில்கள் பஞ்ச கிருஷ்ண ஷேத்ரங்களாக விளங்குகின்றன.


 
 
கபிஸ்தலம் கஜேந்திர வரதர் கோயில் 
 
 பகவத் கீதையில் சொல்லப் படும் இந்த கஜேந்திர மோட்சம் என்ற நிகழ்வு இங்கே இடம்பெற்றதாக நம்பிக்கை.    விஷ்ணுவின் அதி பக்தனான பாண்டிய மன்னன் இந்த்ரதுயும்ணன்  ஒரு முறை விஷ்ணு பூசையில்  தீவிரமாக இருக்கையில், அகஸ்த்திய மாமுனி தனது அடிகளார்களுடன் அங்கு வந்தார். அப்போது பூசையில் இருந்த மன்னன் பூசையை விட்டு எழ முடியாமல் அவனது தலையை அசைத்து வரவேண்டும் சுவாமி என்றிருக்கிறான். மேற்கொண்டு அவரை முறையான வகையில் உபசரிக்கவில்லை எனக் கோபம் கொண்ட மாமுனி அவனை ஒரு யானையாக போகக் கடவது என சபித்தார்.பாண்டிய மன்னன் இந்த்ரதுயும்ணன்  கண்ணீர் மழ்கி மன்னிப்புக் கேட்டதால், அவர் மனமிரங்கி அவனுக்கு மகாவிஷ்ணுவினால் பாவ விமோசனம் வழங்கப்படும் என்றார்.அவனும் ஒரு யானையாக இப்புவியில் உருவேடுத்தான்.   இந்தச் சமயத்தில், ஹுஹு எனும் காந்தர்வன்  ஆற்றில்  குளித்துக் கொண்டிருக்கும்  தேவாலா முனிகளின் கால்களை இழுத்ததால், அவர் சினமடைந்து நீ ஒரு முதலையாக உருவாகக் கடவது என சாபமிட்டார்.அவன் மன்னிப்பு கேட்ட பின் சாப விமோசனமாக விஷ்ணு அவனை தனது சக்கரத்தால் கொன்று மோசம் அழைத்துக் கொள்வார் என்றார்.  இப்படியாக இந்த்ரதுயும்ணன் இம்மண்ணில் பலம் பொருந்திய ஒரு யானையாக அவதரித்து காட்டை திறம்பட ஆண்டுவந்தான். இப்போதும் அவன் தனது விஷ்ணு பக்தி குறையாமல் தினமும் அவருக்கு அங்கிருந்த ஒரு அல்லி  குளத்தில் பூக்களை கொய்து பூசை செய்து வந்தான்.அப்போது ஒரு நாள் குளத்தில் இறங்கி பூப் பறிக்கையில், அங்கிருந்த ஒரு பெரும் முதலை அவனது காலைக் கவ்விகொண்டது. யானை  எவ்வளவோ முயற்சித்தும் அதனிடமிருந்து விடுபடமுடியவில்லை.யானையின் உறவுகள் அவனது மற்றைய மூன்று கால்களை ஒருபக்கம் பிடித்து இழுக்க முதலை தண்ணீரிலிருந்து அவனது ஒரு காலை இழுக்க பெரும் போராட்டத்தில் ஈடுபட்டான் மன்னன். இந்த போராட்டம்  பல நாட்கள் நடந்து வந்தது.  உடல் களைத்து போன யானை இனி முயற்சித்து பயனில்லை பகவான் விஷ்ணுவிடம் சரணடைந்து அபயம் கேட்க வேண்டியதுதான் என முடிவு செய்தான். ஆதி மூலமே என அபயக் குரல் கொடுத்தான். பாற்கடலில் ஆதிசேஷன் மேல் மகாலக்ஷ்மியின் அரவணைப்பில் கிடந்த பகவான், யானையின் அபயக் குரல் கேட்டவுடன் எழுந்து கருடாழ்வார் வாகனத்தில் விரைந்து வந்து தனது  விஷ்ணு சக்கரத்தை ஏவி முதலையின் கழுத்தை துண்டாடி ஹு ஹுவை  மோட்சம் கொண்டு சென்றார். அது போல சாப விமோசனம் பெற்ற மன்னனும் மோட்சம் அடைந்தான்.இறைவன் திருவடி  சரணம் எனப் பற்றியவர்கள் இவ்வுலக துன்பங்களில் இருந்து விடுபட்டு மோட்சம் அடைவார்கள் என்பது இந்தக் கதையின் நீதி.பக்தர்களின் பாபங்களை போக்கும் இந்த்ரதுயும்ணன் பாப விமோசகன் என அழைக்கப் பட்டான்.

ஹனுமான் இங்கே வந்து இறைவனை வழிபடும் போது ராமன் அங்கே அவனுக்கு தரிசனம் கொடுத்ததாக வரலாறு. கபி என்றால் குரங்கு என்றொரு பொருள் உள்ளதாகையால் அந்த ஸ்தலம் கபிஸ்தலம் என அழைக்கப் படுகிறது.
 
 
 


மீண்டும் அடுத்த வாரம் ஒரு சம்பவத்தோடு சந்திப்போம்.























 



 
 

திங்கள், 25 நவம்பர், 2013

ஊர்க்குருவி: ஒட்டகமும் நரியும்

ஊர்க்குருவி: ஒட்டகமும் நரியும்: ஒட்டகமும் நரியும் கீழ் சொன்ன கதையை பீஷ்மர் யுதீஷ்ரர்ருக்கு சொன்னதாக புராணம் சொல்கிறது. சும்மா இருப்பது என்பதன் கேட்டினை விளக்கும் கதை. ...

ஒட்டகமும் நரியும்


ஒட்டகமும் நரியும்

கீழ் சொன்ன கதையை பீஷ்மர் யுதீஷ்ரர்ருக்கு சொன்னதாக புராணம் சொல்கிறது. சும்மா இருப்பது என்பதன் கேட்டினை விளக்கும் கதை.




திரௌபதை பாண்டவர்களுடன்.
ராஜா ரவிவர்மன் ஓவியம்



சத்ய  யுகத்தின் போது ஒரு ஒட்டகம் வாழ்ந்து வந்தது. அது அதன் முன் ஜென்ம, பூர்வாசிரம பலா  பலன்களை அறிந்த, எல்லாம் தெரிந்த ஒரு ஒட்டகம் ஆகும்.

அந்த ஒட்டகம் ஒரு முறை பிரம்மாவை நோக்கி ஆகம விதிப் படி காட்டில் கடும் தவம் செய்ய ஆரம்பித்தது. அதன் கடும் தவத்தையும் பக்தியையும் உணர்ந்த பிரம்மா அதன் தவத்தை மெச்சி, வேண்டும் வரத்தை வழங்குவதாக  சொன்னார்.

ஒட்டகம் கேட்ட வரம்.

100 யோஜனை (கிட்டத்தட்ட 1000 மைல்) தூரத்தில் உள்ள உணவையும் நான் சிரமப் படாமல் பறித்து உண்ணும் அளவிற்கு எனது கழுத்து நீண்டதாக இருக்க வேண்டும்.

வரம் அளிக்கப் பட்டது.

அத்தோடு ஒட்டகமும் எழுந்து சிரமப் பட்டு, கஷ்டப் பட்டெல்லாம் உணவை உண்ணாமல் எந்த முயற்சியும் இல்லாமல் படுத்துக் கிடந்த இடத்திலிருந்தே கழுத்தை நீட்டி அதற்குத் தேவையான உணவை உலகில் எங்கிருந்தாலும் திண்று விட்டு உறங்கிக் கொண்டிருந்தது.

ஒரு நாள், அப்படி 100 யோஜனை தூரத்தில் உள்ள ஒரு மரத்திலிருந்து இலை கனிகளை உணவாக கொண்டிருந்த வேளையில் திடீரென ஒரு பெரிய சூறாவளி வீச தொடங்கியது.
மரம் பேயாட்டம் ஆடியதில் ஒட்டகத்தினால் நிம்மதியாக உணவை உண்ணமுடியவில்லை. ஆகையால், சூறாவளி ஓயும் வரை ஓய்வுகொள்ளலாம் என நினைத்து அதன் கழுத்தையும் தலையையும் அருகில் இருந்த ஒரு மலையின் குகையில் நுழைத்து ஓய்வெடுத்துக் கொண்டது.
அங்கே நிலவிய கடும் மழையும் கடும் குளிரும் அப்போது அங்கு நடுங்கி திரிந்துக் கொண்டிருந்த ஒரு நரியையும் அதன்  மனைவியையும் அருகே தெரிந்த அந்த மழைக் குகைக்கு கொண்டு சென்றது.
பசி மயக்கத்தில் இருந்த அந்த நரிகளுக்கு  ஒட்டகத்தின் கழுத்தையும் தலையையும் பார்த்தவுடன் நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்தது.
உடனடியாக அந்த கழுத்தின் மீது பாய்ந்து பரபரப்பாக கிழித்து உண்ணத் தொடங்கின.
தனது கழுத்து ஏதோ மிருகங்களால் உன்னப் படுவதை உணர்ந்த ஒட்டகம், தனது கழுத்தை சுருக்கிக் கொள்ள எவ்வளவோ முயற்சித்தும் முடியாமல் போய் நரிகளுக்கு இறையாகி  உயிர் விட்டது.
நரிகளும் நிம்மதியாக உணவை உண்டு முடித்து நன்றாக ஓய்வெடுத்துக் கொண்டு சூறாவளி ஓய்ந்த பின் மழைக் குகையை விட்டு வெளியில் வந்து 
சுகமாக வாழ்ந்தன.



.




வியாழன், 21 நவம்பர், 2013

ஊர்க்குருவி: ஸ்ரீராகவேந்திரர்

ஊர்க்குருவி: ஸ்ரீராகவேந்திரர்: ...

ஸ்ரீராகவேந்திரர்

நானும் எனது மனைவியும் 1991 இல் ஸ்ரீராகவேந்த்ரரின் நேரடி ஆசிர்வாதம் அனுபவித்தவர்கள். அதற்காக நாங்கள் எல்லா வளமும்  பெற்று பெரு வாழ்வு வாழ்கிறோம் என்பதல்ல இதற்கு அர்த்தம். இருப்பதைக் கொண்டு மேலும் வளம் பெறுவது அவராலேயே என்பது எங்கள் எண்ணம். எங்கள் மூலம் ஒரு 10 பேர் அவரை நாடியிருக்கலாம். அவரை பாடத் தெரியாததால் அவரைப் பற்றிய, அவரின் மந்த்ராலயம் பற்றிய விஷயதோடு இந்த பதிவை ஆரம்பிக்க ஸ்ரீராகவேந்திரர் அனுகூலமளிப்பார் என்று நம்பியே இன்று பதிவிடுகிறேன்.

இங்கே படங்கள் ஒரு ஆங்கில தளத்தில் நான் பெற்று வழங்கியது.
அந்த அனாமதேயனுக்கு நன்றி.

பல முறை நாங்கள் மந்திராலயம் சென்று ஸ்ரீராகவேந்த்ரரை வணங்கியிருந்தாலும் இது போன்று ஒரு பதிவில் அவரைப் பற்றி எழுதவேண்டும் எனத் தோன்றியது இந்த பதிவை நான் எழுதவேண்டும் என்று நான் முடிவு செய்த பின்தான். இப்போழுதுதான் அதற்கும் வாய்ப்பு வந்தது.

மந்த்ராலயம் பலருக்கு இப்போது புதிய இடம் இல்லை. இது நான் 1991இல் முதலில் சென்று பார்த்த போது இருந்ததை விட இப்போதெல்லாம் பக்தர் கூட்டம் அதிகமாக இருப்பதை பார்த்தாலே தெரிகிறது.
ஸ்ரீராகவேந்த்ரரின் சமாதி, பிருந்தாவனம் எனப்படும் இந்தக் கோயில், ஆந்த்ராவில் கர்னூலிலிருந்து 90 கிலோமீட்டர் தூரத்தில் துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது.


ஸ்ரீராகவேந்த்ரரின் சமாதி, பிருந்தாவனம் எனப்படும் கோயில்


பஞ்சமுகி ஆஞ்சநேயர்  கோயில்



கோயிலுக்கு செல்லும் சாலை 

மனச்சாலம்மா அம்மன் கோயில் 




கோவிலின் உள்ளே இறைவனின் தரிசனம்  போது ஆண்கள் மேற்சட்டையணிந்து போக முடியாது.
இறைவனுக்கு நாள் முழுவதும் பல விதமான சேவைகள் ஆராதனைகள் நடத்தப் படுகின்றது.
ஒவ்வொரு முறையும் கோவிலின் பீடாதிபதி வந்துதான் சேவைகளை நடத்திக் கொடுக்கிறார்.
ஒரு சிறந்த அன்னதானக் கூடமும் இருக்கின்றது.

இந்த பிருந்தாவனத்தின் அருகில் மனச்சாலம்மா என்று ஒரு அம்மன் கோயில் உள்ளது.

பஞ்சமுகி ஆஞ்சநேயர்  கோயில்.

பிருந்தாவனத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் பஞ்சமுகி ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது.
ஸ்ரீமான் ஸ்ரீ ராகேந்த்ரர் சாமிகள் இங்கே 12 வருட காலம் கடும் தவமிருந்து ஹனுமானின் பஞ்ச முக தரிசனம் கண்டதாக வரலாறு.
வராக, கருட, ஆஞ்சநேய, நரசிம்ஹா மற்றும் ஹயக்ரீவா அவதாரங்களே இந்த ஐந்து முகங்கள்.
ஆஞ்சநேயர் இங்கே சுயம்பு வடிவமாக எழுந்தருளியிருக்கிறார்.  

நவ பிருந்தாவனம்.
கர்நாடக  மாநிலத்தில், ஹம்பி (Hambi), ஹோஸ்பெட் (Hospet), அருகில் இருக்கும் மற்றொரு புனித ஸ்தலம். ஸ்ரீ ராகவேந்த்ரரின் அனுஷ்ட்ட தெய்வமான ஹனுமான் ஆழ்வார் பிறந்த புண்ணிய பூமி இது. ராமாயணத்தில் இடம்பெற்ற கிஷ்கிந்தா எனும் வானர பூமி. (பின் நாட்களில் இவர்களைப் பற்றி பார்போம்).
துங்கபத்ரா நதியை படகில் கடந்தால் இங்கு ஸ்ரீ ராகவேந்த்ரரின் குருக்கள் 9 பேரின் பிருந்தாவனம் அமைந்துள்ளது.
வாலியை ராமன் வதம் செய்த இடம் இதுவென சொல்வார்கள்.
இன்றைக்கு இத்துடன் முடித்துக் கொள்கிறேன். மீண்டும் விரைவில் சந்திப்போம்.
பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே