செவ்வாய், 12 நவம்பர், 2019

கனிபாக்கம் விநாயகர் கோவில்












#கனிபாக்கம்_விநாயகர்_கோவில்..
ஆந்திரா, சித்தூரிலிருந்து சுமார் 18கிமீ மேற்கே உள்ளது. சுமாரான சாலை வசதி. கனிப்பாக்கம் தாண்டி வேறே ஊர் இல்லை. அத்தோடு சாலை முடிந்து விடுகிறது.
வெயிற்காலம் மகா கொடுமையாக இருக்கும்.

ஒரு பெரிய வளைவு கனிபாக்கம் விநாயகர் உங்களை வரவேற்கிறது என்று தெலுங்கில் ஒரு போர்டு. உள்ளே போக போக.. நூற்றுக்கணக்கில் ஏசி வசதியுடன் கோயில் நிர்வாகத்தின் தங்குமிடங்கள். லோக்கல் பஸ் ஸ்டான்ட், ஏராளமான தனியார் ஹோட்டல்கள்.
கோயில் கோபுரம் ஓங்கி நின்று கொண்டு இருந்தது. கோயிலை சுற்றி அரை கிமீக்கு வளைத்து அங்கு வாகனங்கள் செலலாமல் இருக்க தடுப்பு வேலிகள். பார்க்கிங் விசாலாமான இடம். பல மாநில வண்டிகள்.
திருப்பதி போவோர் பெரும்பாலோர் அப்படியே இங்கு வந்து போகின்றனர். நிறைய மொட்டைகள். விஷேச நாட்களில் நல்ல கூட்டம் இருக்கக் கூடும்.

வெளியே கோயிலின் லாக்கர் அலுவலகத்தில் கேமரா / மொபைல் ஃபோன் கண்டிப்பாய் வைத்து தான் செல்ல வேண்டும்.

இலவச தரிசனம் அடுத்து கட்டண தரிசனம் 10 ரூ.. "சீக்கிர தரிசனம்" 51ரூ... "அதி சீக்கிர தரிசனம்" 101ரூ.. "நிஜரூப தரிசனம்" 50ரூ... என்னவென்று புரியவில்லை. அப்போ நாம் தரிசனம் செய்தது? நிஜமில்லையோ?

எல்லா தரிசனமும் ஒரு லெவலில் ஒன்றாய் கலந்து வழக்கமான ஜருகண்டி ஜருகண்டிதான்...

வெளியில் நிறைய கோவில் அய்யர்கள். அவர்களிடம் கொடுக்க வேண்டியதை கொடுத்தால் நேரே கருவறைதான். அதே போல போலிஸ். அவர்களும் ஜருகண்டியுடன் நாலு பேரை அழைத்து வந்து கியூ பைபாஸ்...
வழக்கமான கோவில் அட்ராஸிட்டியுடன்..

கோயிலுக்கு நுழைந்தால் ஆகம விதிப்படி!!!! குளிர் சாதன வசதியுடன் மிக அமைதியாக வீற்றிருந்தார் கனிபாக்க விநாயகர்.

11ஆம் நூற்றான்டின் சோழ வம்சமான குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டு பின்பு 1336 விஜய நகர மன்னர்களால் பெரிதுபடுத்தபட்ட கோயில்.

இப்போது கனிப்பாக்கமாக இருக்கும் இந்த ஊருக்கு உண்மையான் பெயர் தமிழ் பெயர் "கனிப்பார்கம்" என்பதாகும். இங்கு வசித்து வந்த மூன்று சகோதரர்கள். ஒருவர் பார்வை இழந்தவர், இன்னொருவர் காது கேட்காதவர், மற்றவர் வாய் பேச முடியாதவர். விவசாயம் செய்து வந்தனர். இவர்கள் நிலத்துக்கு தேவையான தண்ணீரை ஏற்றம் இறைத்து தண்ணீர் பாய்ச்சினர். ஒரு கட்டத்தில் தன் கிணற்று தண்ணீர் வற்றி போனதால் அங்கு உள்ள ஒரு இடத்தில் இரும்பு கடப்பாரையை கொண்டு தரையை தோண்டுகையில் அந்த கடப்பாரை ஒரு கல்லில் மோதி அங்கு ரத்தம் வடிய துவங்கியவுடன் அங்கு உதித்தார் கனிபாக்க விநாயகர்.

1945ஆம் ஆண்டு இந்த கோயிலுக்கு ஸ்ரீமதி லக்ஷ்மனம்மா என்னும் பக்தை இந்த கோயிலுக்கு வெள்ளிக்கவசம் வழங்கினார். இதில் என்ன ஆச்சர்யம் என்றால் அந்த கவசம் 2 அடி உயரம் இன்று கனிப்பாக்க விநாயகர் சுமார் 4 அடிக்கும் மேல் வருடா வருடம் இந்த விநாயகர் வளர்ந்து வருகிறார் எங்கிறார்கள். நம்பினாதான் சோறு என்பது தான் அதிசயம். கோயில் உட்பிரகாரத்தில் இந்த விநாயகருக்கும் இது வரை சாற்றிய அத்தனை பழைய காப்புகளையும் வைத்திருக்கின்றனர் எங்கின்றனர். நாம் பார்க்க முடியாது.

இந்த சுயம்பு, தரையில் இருந்து ஒரே கல்லாகவே இருக்கிறது. செய்து வைத்த சிலை அல்ல. அது போக இது வரை வயிறு பகுதி வரை தான் வெளி வந்துள்ளது. இன்னும் முழுவதுமாக வர வில்லை. ஆனால் வருடா வருடம் 2 இன்ச்சில் இருந்து இப்போது 4 அடிக்கும் மேல் வளர்ந்து வருகிறது என்றனர்.
மிகவும் சக்தி வாய்ந்த கோயில் என்பதை அங்கு அலை மோதும் கூட்டம். அத்தனை திருமண மண்டபங்கள். அத்தனை தங்கும் விடுதிகளை வைத்து சொல்லி விடலாம். ஆந்திரா என்றாலும் தமிழில் தான் அனேக பேர் அங்கு பேசுகின்றனர். பல கோர்ட் தீர்க்க முடியாததை இங்கு வந்து தீர்த்ததாக கூறுகின்றனர்.

அருகில், சிவன் கோவில். வாசலில் பார்க் போல சிவன், வினாயகர், விஷ்ணு என கலர் கலராக சிலைகள். எதிரேயே ஒரு பழைய பெருமாள் கோவில். சீண்டுவாரில்லை.

சனி, 9 நவம்பர், 2019

அர்த்தகிரி_என்னும்_அரகொண்டா_ஆஞ்சனேயர்







#அர்த்தகிரி_என்னும்_அரகொண்டா_ஆஞ்சனேயர்

நாங்கள் கோவிலுக்கு செல்லும் போது மணி காலை 11.30. முன்னதாகவே வழியில் ஒருத்தர் கோவில் மூடியாச்சி என்றார்.

அடக் கடவுளே, இதென்ன சோதனை? உன்னைப் பார்க்க ஓடோடி வந்த எங்களை ஏமாற்றி விடுவாயா ஆஞ்சனேயா என மனமார வேண்ட...

கோவிலினுள் இருந்த டிக்கட் கொடுப்பவர்,
"அஞ்சேல்... காசேதான் கடவுள். ஆளுக்கு நூறு ரூ டிக்கட் வாங்கினால் கடவுளும் மூடிய கதவை திறப்பார்" என்றார்.

டிக்கட் வாங்கி உள்ளே போனால், ஸ்க்ரீனை திறந்தவுடன் அதற்கென்றே இரண்டு அவாள் பூஜைக்கு தயாராக இருந்தனர். பின் பக்கமாக ஒரு வாசல் இருக்கும் போல!!!
அப்புறம் என்ன, தலைக்கு இருபது ரூ தட்சனையுடன் திவ்ய ஆஞ்சனேய தரிசனம்தான்.

கோவிலில் எல்லோருமே தெலுங்கில்தான் பேசுகின்றனர். டிக்கட்டுக்கு பணம் கொடுத்தவுடன் மிகத் தெளிவான தமிழ் பேசப்படுகிறது...!!!

மெயின் ரோட்டிலிருந்து மலைக் கோவிலுக்கு போக சாலை வசதி உள்ளது. 5 நிமிட பயணம். அருகில் வேறே எந்த கடையும் இல்லை.

ஸ்தல வரலாறு:
பிரபலமான  அப்பல்லோ மருத்துவமனைக்கும் ஆன்மீகத்துக்கும் என்ன நேரடி தொடர்பு இருக்க முடியும்? அப்படி ஒரு தொடர்பு இருக்கிறது என்கிறது தமிழக எல்லையில் சித்தூர் மாவட்டத்தில்   உள்ள அரகோண்டாவில் அமைந்துள்ளது அர்த்தகிரி ஆஞ்சநேயர் திருக்கோயில்.

திருக்கோயிலின் ஸ்தல வரலாறு

 திரேதாயுகத்தின்போது ஸ்ரீராமருக்கும் ராவணனுக்கும் போர் நடந்தது. போர் தீவிரம் அடைந்த வேளையில் ராவணனின் மகன் இந்திரஜித் லட்சுமணன் மீது பிரம்மாஸ்திரத்தை பிரயோகித்தான். பிரம்மாஸ்திரத்தின் வலிமையால் மூர்ச்சையாகிக் கீழே விழுந்த இளவல் லட்சுமணனைக் காப்பாற்றும் வழி தெரியாமல் அனைவரும் தவித்தனர். அப்போது அருகே இருந்த ஜாம்பவான் இமய மலைச் சாரலில் உள்ள சஞ்சீவி மலையைக் குறித்தும் அதன் தன்மை குறித்தும் ஆஞ்சநேயரிடம் தெரிவித்தார். அந்த சஞ்சீவி மலையில் உள்ள மருத்துவ குணம் கொண்ட மூலிகைகள் பற்றி விவரித்த ஜாம்பவான்,ஆஞ்சநேயரிடம் உடனே மூலிகையைக் கொண்டு வருமாறு தெரிவித்தார்.

இதையடுத்து ஆஞ்சநேயர்  சஞ்சீவி மலை நோக்கித் தாவிச் சென்றார் . ஆனால், அவரால் சஞ்சீவி பர்வதத்தில் உள்ள மூலிகையை  கண்டறிய முடியவில்லை லட்சுமணனின் உயிரைக் காக்கும் பொருட்டு,அந்தப் பர்வதத்தையே பெயர்த்தெடுத்து போர்க்களமான இலங்கை நோக்கி வானவீதியில் சஞ்சாரம் செய்தார். அவ்வாறு அவர் வந்தபோது அந்த மலையின் ஒரு பகுதி இந்த மலையில் விழுந்தது. இதனாலேயே இந்தப் பகுதிக்கு அரகோண்டா என்று பெயர் வந்தது. ‘அர’ என்றால் துண்டு ‘கோண்டா’ என்றால் மலை அரகோண்டா என்றால் மலையின் ஒரு பாகம் என்று பொருள்.

 சஞ்சீவி மலையின் ஒரு பகுதியான  இந்த அரகோண்டாவுக்கு  அருகில் உள்ளது இந்தத் திருக்கோயில். இந்தக் கோயிலில் ஒரு தடாகத்தை நாம் பார்க்கலாம். இந்தத் தடாகத்தில் சஞ்சீவி பர்வதத்தின் ஒரு பகுதி கீழே விழுந்ததால், இந்தத் தடாகம் முழுவதும் மூலிகை நிரம்பியுள்ளது என்றும் இந்தத் தடாக நீர் நோய்களைத் தீர்க்கும் அருமருந்து என்றும் கூறுகிறார்கள். எனவே பக்தர்கள் தங்கள் தீராத நோய் தீர்க்கும் தீர்த்தமாக இந்தத் தடாக தீர்த்தம் பருக பெருமளவில் வருகிறார்கள்.

அப்பல்லோ மருத்துவமனையின் ஆன்மிகத் தொடர்பு.

அப்பல்லோ குழும மருத்துவமனைகளில் முதல் மருத்துவமனை இங்கிருந்து தான் ஆரம்பமானது . இந்த திருக்கோயிலில்  இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள அப்பலோ மருத்துவமனைக்கு , கோயிலின் தடாக நீர் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்தத் திருக்கோயிலில் ஆஞ்சநேயரைத் தரிசித்து தடாக தீர்த்தத்தை பிரசாதமாக ஏற்றுச் சென்றாலே போதும் தீராத நோயும் தீரும் என்பது பலன் அடைந்தவர்கள் சொல்லும் பலமான நம்பிக்கை.

 சித்தூரில் இருந்து புங்கனூர் செல்லும் வழியில் சுயம்பு விநாயகர் எழுந்தருளியுள்ள கணிப்பாக்கத்தில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோயில் . தமிழகத்தில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்கள் சிலர் சித்தூர் சென்று அங்கிருந்து அர்த்தகிரிக்குச் செல்கிறார்கள்.

வியாழன், 7 நவம்பர், 2019

புலிக்கோண்டு, பெனமனூர், சித்தூர்





















புலிக்கோண்டு, பெனமனூர், சித்தூர்..

சென்னையில் காலை 6 மணிக்கு புறப்பட்டால் காலை 10 மணிக்கு ஆந்திரா சித்தூர் தாண்டி 18 கிமீயில் இருக்கும் புலிக் கோண்டு அல்லது புலிக் கூண்டு அல்லது புலிக் கோண்டா...
இரட்டை மலைகள் சிவலிங்கங்கள் போல. மேலே ஒரு சிவன் கோவில். அடிவாரத்திலும் ஒரு குகைக் கோவில் சிவனுக்கு. தல புராணம் அங்கே யாருக்கும் தெரியவில்லை. தெரிந்தாலும் நமக்கு புரியபோவதில்லை. லோக்கல் பூசாரி. 10ரூ தட்டில் போட்டதுக்கே கருவறையை திறந்துவிட்டுவிட்டார். திருப்தியாக போட்டோ எடுத்துகிட்டாச்சி.
பட்டையான சுயம்பு சிவலிங்கம். அதற்கு முன்பு வழக்கமான ஒரு சின்ன சிவ லிங்கம். இரண்டு சின்ன பாறைகளுக்கு நடுவே சிவன் குடித்தனம். உண்மையில் குகையல்ல. வெளியில் பெரிய கலர் நந்தி. பழைய எண்ணெய் விளக்கு... பிரதோஷங்களில் விஷேசமாம்..
அங்கிருந்து 2,3 கிமீ நடந்து போனால் மலையேற ஆரம்பிக்கலாம். செங்குத்தான மலை.ஏறுவது சிரமமே. 2/3 மணி நேரம் ஆகலாம். நாங்கள் மற்ற கோவில்களை முடித்து அங்கே போகும் போது மணி மதியம் ஒன்று. சாப்பிட வேறே இல்லை. இதில் எங்கே மலையேறுவது?

மலைக்கு போகும் பாதையே கரடு முரடாகத்தான் உள்ளது. மழை பெய்யாத காலத்தில் மலையை நெருங்கி காரில் போகலாம் போலிருக்கிறது. இப்போது பெரும் பாறைகள் நீட்டிக் கொண்டு நிற்கின்றன. அப்படியே கீழிருந்தவாரே போட்டோக்களை அள்ளிக் கொண்டோம். நேற்று நல்ல கால நிலை. வெயிலும் இல்லை மழையுமில்லை. இனிமையாக போயிற்று ஆன்மீக பயணம்.

ஆற்காட்டில் வலதுபுறம் திரும்பி, திருவலம் வழியாக பொன்னை- சித்தூர் சாலையில் சித்தூர், அடுத்து புலிக் கோண்டா போவது சுகமான பயணம். அர்த்தகிரி, கனிப்பாகம் போக சித்தூருக்கு வேறு வழியில் போகனும். ஒரே குண்டும் குழியும், தூசியுமாக...