திங்கள், 16 டிசம்பர், 2013

கர்ணன்


கர்ணன் 

மகாபாரதத்தின் முக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்று கர்ணன்.
கர்ணன் பெரும் வீரன் மட்டுமல்லாமல் ஈகை குணம் கொண்டவனும் கூட.
மகாபாரதத்தில் வேறு எந்த பாத்திரமும் இவ்வளவு ஈகை குணத்துடன் படைக்கப் படவில்லை.



குந்தி, விருஷ்ணியை ஆண்ட குந்திபோஜ மன்னனுக்கு பிறந்தவள்.

கர்ணன், குந்திக்கும் சூரியக் கடவுளுக்கும் பிறந்தவன். குந்தி இளமையும் அழகும் பொங்கும் வயதில் துர்வாச முனிவருக்கு தொண்டு செய்யும் வாய்ப்பை பெற்றார். அவருக்கு பணிவிடை செய்வதே தனது கடமை என்பதாக மனதில் கொண்டு அவரது அனுக்கிரகம் கிடைக்கப் பெற்றார்.

குந்தியின் சேவையில் மகிழ்ந்து போன முனிவர் துர்வாசர், குந்திக்கு ஒரு வில்லங்கமான ஆனால் பின்னர் மிகவும் உதவப் போகும் ஒரு ஒரு மந்திரத்தை உபதேசித்தார். இதை அவர் பிரயோகித்தால் அவர் நினைத்து ஜெபிக்கும் இறைவன் நேரில் தோன்றி குந்திக்கு தனது அருள் சக்தியால் ஒரு ஆண் மகனை கொடுப்பார் என்று கூறி சென்றார்.

துர்வாச முனிவர் தனது ஞான திருஷ்டியால் பின்னர் இந்தப் பெண் மணக்கப் போகும் பாண்டு மன்னன் குழந்தை செல்வத்தை வழங்க முடியாமல் போகும் என்பது தெரிந்துகொண்டு இந்த வரத்தை கொடுக்கிறார்.

விபரம் அறியாத அந்த இளம் குந்தி விளையாட்டாக சூரிய பகவானை நினைத்து அந்த மந்திரத்தை சொல்ல சூரியன் அவர் முன்னே தோன்றினான்.
பயந்து போன குந்தி சூரியனிடம் தான் செய்த தவற்றை கூறி திரும்பி போய்விட சொல்லி கெஞ்சினாள்.
ஆனால், அந்த மாபெறும் மந்திரத்தை நீ உச்சரித்து விட்டதால் அதை மீறி தான் எதுவும் செய்ய முடியாது எனவும் எனவே ஒரு ஆண் குழந்தையை கொடுத்துவிட்டே தன்னால் திரும்பி செல்ல முடியும் என்றார்.
ஆனாலும், குழந்தை வந்த பின்னும் குந்தி கன்னியாகவே இருப்பாள் என்றும் ஊரார் பேச்சுக்கு ஆளாகமாட்டாள் என்றும் உறுதியளித்து சென்றார்.

இந்நிலையில் குந்தி கவசமும், குண்டலமும் அணிந்த ஒரு அழகான ஆண்  குழந்தையை பெற்றெடுத்தாள்.
சூரியன் அளித்த வாக்குறுதியையும் மீறி தனக்கு அவப்பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக, அக்குழந்தையை இழக்க முற்ப்பட்டாள் குந்தி.
குழந்தையை ஒரு அழகான கூடையில் வைத்து அருகில் பல விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களை வைத்து கங்கை ஆற்றில் விட்டாள்.

அதிரதன் எனும் கௌரவர்களின் தேரோட்டியும் அவனது மனைவி ராதாவும்  இந்தக் குழந்தையை கங்கையில் கண்டெடுத்து வசுசேனா எனப் பெயரிட்டு வளர்த்து வரலானான். கர்ணனுக்கு இதனால் சாரதிபுத்திரன் என்ற ஒரு பெயரும் ராதேயா என்ற ஒரு பெயரும் உண்டு.

பின்னர் குந்திக்கு பாண்டு மன்னருடன் திருமணம் நடந்தது.
பாண்டு மன்னன் ஹஸ்தினாபுரம் எனும் நாட்டை ஆண்டுவந்தவன். விசித்ரவீர்யாவின் மனைவிகளில் ஒருவரான அம்பாலிக்காவுக்கு பிறந்தவன்.
அம்பாலிக்காவின் அக்காவான அம்பிகாவுக்கு பிறந்தவன் துரிதிராஷ்தரன்.

ஒரு முறை பாண்டு மன்னன் குந்தியுடனும், மற்றொரு மனைவியான மாத்ரி உடனும் வேட்டையாட காட்டுக்குள் சென்ற போது ஓய்வுக்காக ரிஷி கின்தமா குடிலில் தங்கியிருந்தான். அப்போது ரிஷியும் அவரது பத்தினியும் மான் உருக் கொண்டு தோட்டத்தில் இணைந்திருந்த வேளையில் மன்னன் தவறுதலாக உண்மையான மான் என  நினைத்து அம்பெய்தி இரு மான்களையும் கொன்றான்.
அதனால் ரிஷி அவனுக்கு இனி அவன் யாருடன் இணைநதாலும் உயிர் போகும் என்று சாபமிட்டு இறந்தார்.

இதனால் மனம் நொந்த பாண்டு மன்னன் ஆட்சியை சகோதரனாகிய குருடன் திருத்ரஷ்டிரனிடம் கொடுத்துவிட்டு இரு மனைவிகளுடன் காட்டில் அஞ்சாதவாசம் கொண்டான்.

குழந்தை இல்லாத பாண்டு தனது மனைவியான குந்தியிடம் இதை பற்றி வருத்தத்துடன் பேசிக்கொண்டிருக்கையில், குந்தி தனக்கு துர்வாச முனிவர்  கொடுத்த வரம் பற்றிக் கூறினாள். மன்னன் வேண்டிக் கேட்டுக் கொண்டதால் அவளும் தர்மபுத்திரன் மூலம் யுதிஷ்ட்ரனையும், வாயு பகவான் மூலம் பீமனையும், இந்த்ரன்     மூலம்  அர்ஜுனனையும்  பெற்றாள். 
அதே மந்திரத்தை மாத்ரியையும் உச்சரிக்கச் செய்து இறைவனின் மருத்துவர்களான அஸ்வின் குமாரர்கள் மூலம் நகுலன், சகாதேவன் என்று இரண்டு குழந்தைகளைப் பெற்றார்கள்.
இந்த ஐந்து பேருமே பாண்டவர்கள் என்றழைக்கப் பட்டார்கள்.

15 ஆண்டுகள் துறவரத்திற்கு பிறகு, குந்தியும்  பிள்ளைகளுமில்லாத  ஒரு  சமயத்தில்,  மாத்ரியுடன் மன்னன் பாண்டு இணைந்த பொழுது சாபத்தினால் அவன் இறந்தான். மாதரியும் உடன் கட்டை ஏறி மரணமடைந்தாள்.

பரசுராமனிடம் கர்ணன் பிரமாஸ்த்ர மந்திரம் கற்க விரும்பினான். ஆனால் பரசுராமனோ பிரமாணர்களுக்கு மட்டுமே கற்றுத் தருவார். ஆகையால், கர்ணன் பிராமணனாக வேஷமிட்டு பரசுராமனை ஏமாற்றி சிஷயனாக சேர்ந்துக் கொண்டான்.
ஒரு நாள் கர்ணன் மடியில் பரசுராமன் தலை வைத்து படுத்து தூங்கிக் கொண்டிருக்கையில், ஒரு வண்டு கர்ணன் தொடையில் கடித்தது. பெரும் வலியுடம் ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. காலை நகர்த்தினால் ஆசான் எழுந்துவிடுவாறே என எண்ணி கர்ணன் கடுமையான வலியை பொறுத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.
எழுந்த பரசுராமன் ரத்தத்தை கண்டு சந்தேகம் கொண்டு நீ யார் என கர்ணனை வினவினான். ஒரு சத்ரியன் மட்டுமே இந்த வலியை தாங்க முடியும். பிராமணனால் முடியாது என்பது அவனுக்கு புரிந்து போனது. உண்மையை சொன்னான் கர்ணன். கடும் கோபடைந்த பரசுராமன், சரியான, தேவையான நேரத்தில் இந்த மந்திரத்தை நீ மறந்து போவாய் என சாபமிட்டார். நீண்ட நேர வேண்டுதலுக்குப் பின் பரசுராமன் அவன் பால் இரக்கம் கொண்டு தனது
பார்கவஸ்த்ரா எனும் எந்திரத்தையும், தனது விஜயா என்னும் அம்பையும் கொடுத்தான்.
பாண்டுவின் அண்ணன் துரிதிராஷ்தரன் மகன்களாகிய துரியோதனனும் அவனது மற்றைய 99 சகோதரர்களும் கர்ணனை சகோதரனாக எண்ணி வாழ்ந்து வந்தார்கள். அவனுக்கு அங்கதேசத்தை  (இன்றைய பகல்பூர்) அளித்து மன்னனாக்கினார்கள். கர்ணன், கர்னல் என்ற ஊரை தோற்றுவித்ததாக பாரதம் சொல்கிறது. 

கௌரவர்கள் என அழைக்கப் பட்ட இவர்கள் பாண்டவர்களுக்கு எதிரிகளாக இருநதனர். அர்ஜுனனுக்கு எதிரியாக கர்ணனை கொம்பு சீவிவிட்டிருந்தார்கள்.

மகாபாரதப் போருக்கு முன் கிருஷ்ணனின் வேண்டுகோளுக்கேற்ப இந்திரன் பிராமணன் வேஷத்தில் கர்ணனை சந்தித்து அவனது உயிரையும் உடலையும் காப்பாற்றும் அவனது கவசத்தையும் குண்டலமும் யாசகம் கேட்டு வந்தான். இவற்றை பெற்றுவிட்டால் அவனை அர்ஜுனன் போரில்  வெல்வது  சுலபம்.  ஆனால் கர்ணனின் தந்தையாகிய சூரியன் கர்ணனை எச்சரித்துவிட்டார். ஆனாலும் கர்ணன் தனது ஈகை குணத்தினால் அவனது தந்தையின் சொற்களை உதாசீனப் படுத்திவிட்டு  இந்திரன் யாசகமாகக் கேட்டதை கொடுத்தான்.
அவனது தானதரும மனத்தைக் கண்ட இந்திரன் நெகிழ்ச்சிக் கொண்டு கர்ணா  உனக்கு என்ன வேண்டுமோ கேள் நான் தருகிறேன் என்றான். வந்திருப்பது இந்திரன் என தெரிந்ததால் கர்ணன் அவனிடம் தன் எதிரிகளை சூறையாட அவனது சக்தி எனும் எந்திரத்தை கேட்டான். இந்திரனும் அவனது தாராள மனதை பாராட்டி எந்திரத்தை கொடுத்து இதை நீ ஒரு முறை மட்டுமே உபயோகிக்க முடியும். முதல் முறை உபயோகித்தவுடன் திரும்ப என்னிடம் வந்துவிடும் எனக் கூறி கொடுத்தான்.

பரசுராமனின் சாபப்படி குருஷேஸ்த்ர போர்க்களத்தில் கர்ணன் பிரமாஸ்தர மந்திரத்தை மறந்தான். அவனது தேர் சக்கரம் மண்ணில் புதைத்து. அர்ஜுனன் அவனை வெற்றிக் கொண்டான்.
மரணப் படுக்கையில் கிடந்த கர்ணனை உய்ய இந்திரனும் சூரியனும் யாசகர்கள் வேஷமிட்டு அவனிடம் பிச்சை கேட்டார்கள். அவன் தன்னிடம் பிச்சையிட ஒன்றுமில்லை என்றான். உன்னிடம் உள்ள தங்க பல்லைக் கொடு என்றார்கள். உண்மையை தெரிந்துக் கொண்ட கர்னன் அருகில் இருந்த ஒரு கல்லால் தனது பொற்பல்லை உடுத்து அவர்களிடம் தானமாக கொடுத்தான்.
இவ்வுலகில் இருந்து விடுபட்டு இறைவனடி போய் சேர்ந்தான்.

வ்ருஷாளியும் சுப்ரியாவும் கர்ணனின் மனைவிகள்.
வ்ருஷாசேனன் , வ்ருஷாகேது, சித்ராசேனன், சத்யசேனன், ஸுஷேனன், ஷத்ருன்ஜெய, திவிபாதன், பானாசேனன், ப்ரசேனன் என ஒன்பது மகன்கள்.
குருக்ஷேத்திர போரில் பானாசேனன் பீமனாலும், சித்ராசேனன், சத்யசேனன், ஸுஷேனன் ஆகியோர் நகுனனாலும், ப்ரசேனன் சத்யாகியினாலும், ஷத்ருன்ஜெய, வ்ருஷாசேனன், திவிபாதன் ஆகியோர் அர்ஜுனனாலும் கொள்ளப் பட்டனர். மிஞ்சியது வ்ருஷாகேது மட்டுமே.

வ்ருஷாளியும் கர்னனுடன் உடன்கட்டை ஏறினாள்.
போருக்குப் பின் கர்ணன் தங்களது சகோதரன் என்று  தெரிந்துக்  கொண்டதால்,  வ்ருஷாகேது பாண்டவர்களால் இந்திரப்ரஸ்த்துக்கு மன்னன் ஆக்கப்பட்டான்.
 
சுபம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக