செவ்வாய், 31 டிசம்பர், 2013

திருக்கோணேசுவரம் என்கின்ற திருகோணமலை

நன்றி: tamilsguide.com
படங்கள் உதவி இணையதளம்.

திருக்கோணேசுவரம்
திருகோணமலை






காலத்திற்குக் காலம் கடற்கோளினால் பண்டைய ஈழம் அழிந்தபோது, ஈழத்தின் பல பகுதிகள் கடலுள் மூழ்கின. நிலப்பகுதிகள் நீருள் அமிழ்ந்தும், சில பகுதிகள் நில மட்டத்தினின்றும் உயர்ந்தும் காணப்பட்டன. மூன்று முறை கடல்கோள்கள் ஏற்பட்டதாகவும், மூன்றாவது கடல்கோளின் பின் எஞ்சியுள்ளதே தற்போதைய ஈழம் என்பதையும் வரலாறுகள் விளக்கியுள்ளன. வரலாற்றுக்குமுற்பட்ட காலத்திலிருந்தே சிவபூமியாக விளங்கியது ஈழம். ஈழத்தின் பழம் பெருமை வாய்ந்த சிவத்தலங்களுள் திருக்கோணேஸ்வரம் சிறப்புப் பெற்றது. ஈழத்தின் வரலாற்றோடு தொடர்பு கொண்டது. கிழக்கே திருக்கோணேஸ்வரம், வடமேற்கே திருக்கேதீஸ்வரம், வடக்கே நகுலேஸ்வரம், மேற்கே முனீஸ்வரம், தென்கிழக்கே தொண்டீஸ்வரம் எனப் பஞ்ச ஈஸ்வரங்களைக் கொண்ட சிவபூமியாக ஈழம் விளங்கியது.

பஞ்ச ஈஸ்வரங்களுள் ஒன்றான திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ள திருகோணமலை மாவட்டம், பல்வேறு சிறப்புக்களையும் தன்னகத்தே கொண்டதே. திருகோணமலை இயற்கை எழில் கொஞ்சும் பிரதேச மாகக் காணப்படுவதோடு, மிகப்பெரிய இயற்கைத் துறைமுகத்தையும் கொண்டதாக விளங்குகிறது. இக்காரணத்தினால் இப்பிரதேசம் உலகப்புகழ்பெற்ற பிரதேச மாகவும் காணப்படுகின்றது. ஏறக்குறைய ஆயிரத்து எண்பது சதுரமைல் பரப்பினைக் கொண்டதாக இப்பிரதேசம் அமைந்துள்ளது. இப்பிரதேசம் வடக்கே முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களையும், மேற்கே அநுராதபுரம், பொலநறுவை மாவட்டங்களையும், தெற்கே மட்டக்களப்பு மாவட்டத்தையும் கிழக்கே வங்காள விரிகுடாவினையும் கொண்டதாகக் காணப்படுகின்றது. மூன்று புறமும் ஆர்ப்பரிக்கும் கடலின் நடுவே உயர்ந்து நிற்கும் குன்றில் அமைந்துள்ளது, புகழ்பெற்ற திருத்தலமான திருக்கோணேசுவரம். இக்குன்று அமைந்துள்ள பிரதேச த்தைப் பிரடெரிக் கோட்டை என்று அழைப்பர். ஈழத் திருநாட்டிலே காணப்படுகின்ற பாடல்பெற்ற தலங்களுள் ஒன்றாக விளங்குவது திருக்கோணேஸ்வரம். திருக்கோணேஸ்வரத்தின் ஆரம்பத் தோற்றம், அமைவிடம், காலம் இவை பற்றி வரலாறு, ஐதீகக் கதைகள், இலக்கியச் சான்றுகள், புதைபொருள் ஆய்வுகள், மேலைநாட்டார் குறிப்புக்கள், கல்வெட்டுக்கள் ஆகியவற்றின் மூலம் அறியக்கூடியதாயுள்ளது. கி.மு.1300 ஆண்டுகளுக்கு முன் கோணேசர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இத்தகவலைப் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட கோணேசர் கோயில் கற்தூண்களில் உள்ள கல்வெட்டுக்களிலே காணலாம். குவெறொஸ் பாதிரியாரால் எழுதப்பட்ட
The Temporal and Sprititual conquest of Ceylon என்ற நூலிலும் இச்செ ய்தி காணப்படுகின்றது.


கி.பி.1624 இல் போர்த்துக்கேயர் திருகோணமலையைக் கைப்பற்றி, கோணேசர் ஆலயத்தை நிர்மூலமாக்கியபோது, போர்த்துக்கேய படையின் தளபதியாக விளங்கிய கொன்ஸ்ரன்ரைன் டீசா இங்கு கைப்பற்றிய சுவடிகளைப் போர்த்துக்கலிலுள்ள லிஸ்பனுக்கு அனுப்பிவைத்துள்ளான். இவை லிஸ்பனிலுள்ள `அஜுடா' நூல்நி லையத்தில் வைக்கப்பட்டுள்ளது. அச்சுவடிகளில் மனுராசன் என்னும் மன்னன் இலங்கையை ஆண்டான் என்றும், இவன் கி.மு.1300ஆம் ஆண்டு கோணேச கோயிலைக் கட்டினான் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் கைலாச புராணம் என்னும் நூலில் மனுநீ தி கண்ட சோழ மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க, அவரது மகனான குளக்கோட்டு மகாராஜா இக்கோயிலைக் கட்டினாரெனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக `முன்னே குளக்கோட்டன் மூட்டுத் திருப்பணியைப் பின்னே பறங்கி பிரிக்கவே' என்ற கல்வெட்டு வரிகள் சான்றாகக் கூறப்பட்டுள்ளன. ஏற்கெனவே கட்ப்பட்டிருந்த கோயிலைக் குளக்கோட்டு மன்னன் புனருத்தாரணம் செய்ததோடு, பல திருப்பணிகளையும் செய்துள்ளான் என்பதையே பலரும் ஏற்றுக்கொள்கின்றனர். இம்மன்னன் கோணைநாதருக்குத் தெப்பத் திருவிழா நடத்த ஒரு தெப்பக் குளத்தை ஏற்படுத்தி, அதற்குத் தெற்குப் பக்கமாக ஒரு வெள்ளை வில்வ விருட்ச த்தின் கீழ் மண்டபமொன்றைக் கட்டியுள்ளான். தெப்பத் திருவிழாவிற்கு, கோணேசப் பெருமான் ஆலயத்திலிருந்து எழுந்தருளி, இங்கு தங்கிச் செல்வார். பின்னாளில் இம்மண்டபம் கோயிலாக்கப்பட்டு லிங்கம் பிரதிஷ்டை செ ய்யப்பட்டு, வெள்ளை வில்வத்துக்கோணேசர் கோயில் என அழைக்கப்பட்டது. குளக்கோட்டு மன்னனுடைய திருப்பணிகளை விளக்கிக் கூறும் நூல் கோணேசர் கல்வெட்டு. இந்நூலில் குளக்கோட்டு மன்னன் திருக்கோணேஸ்வரம் கோயிலுக்குச் செய்த திருப்பணிகள் பற்றி விளக்கிக் கூறப்பட்டுள்ளது. இச்செ ய்திகள் யாவும் குளக்கோட்டனுக்கும் ஆலயத்திற்குமுள்ள தொடர்பை வலியுறுத்துகின்றன.

இலங்கையை ஆண்டதாகக் கருதப்படும் இராவணன், திருக்கோணேசர் கோயிலோடு கொண்ட தொடர்புகள் ஏராளம். இம்மன்னனுக்கும் கோணேசர் கோயிலுக்குமிடையிலான தொடர்புகளைத் தேவாரம், புராணம், இதிகாசம், வரலாறு ஆகியவற்றின் மூலம் அறியலாம். திருக்கோணேஸ்வரத்திலுள்ள மலையின் கிழக்குப் பக்கத்திலுள்ள இராவணன் வெட்டு என்னும் மலைப்பிளவு ஆலயத்திற்கும், இராவணனுக்குமுள்ள தொடர்பை விளக்குகின்றது.

மகரிஷிகளில் ஒருவராகக் கருதப்படுபவர் அகத்தியர். வரலாற்றாய்வாளர்களின் கணிப்புப்படி இவர் வாழ்ந்த காலம் கி.மு.1000 ஆண்டெனக் கொள்ளப்படுகின்றது. இவர் கோணேஸ்வரப் பெருமானை வழிபட்டார் என இதிகாச , புராண, வரலாற்றுக் குறிப்புக்களில் காணப்படுவதால் இவ்வாலயம் அகத்தியர் காலத்திலேயே இருந்ததெனக் கருதலாம்.

கி.மு.1263ஆம் ஆண்டில் இலங்கையைக் கைப்பற்றிய வீரபாண்டிய மன்னர், வெற்றிச்சின்னமாக இரண்டு `மீன்' இலச்சினைகளை இந்த ஆலயத்தில் பொறித்துச் சென்றுள்ளார். இன்றும் இவ்விரு சின்னங்களும் கோணேசர் கோட்டை நுழைவாயிலில் காணப்படுகின்றன. பாண்டிய மன்னன் ஆட்சிக்காலத்தில், மநுநீதிகண்ட சோழனின் மகனாகிய குளக்கோட்டு மன்னன் கோணேசர் ஆலயத்தைப் புனருத்தாரணம் செய்தானென யாழ்ப்பாண வைபவமாலை என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது. பாண்டிய மன்னர் அநுராதபுரத்திலிருந்தே ஆட்சி செ ய்துள்ளனமை, குளக்கோட்டு மன்னனின் புனருத்தாரண வேலைக்குச் சாதகமாயிருந்திருக்க வேண்டும்.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சமயகுரவராகிய திருஞான சம்பந்தர் தமது பதிகங்களில், கோணேசப்பெருமானையும் கோணமாமலையின் இயற்கை அழகையும், குறிப்பிட்டுள்ளதோடு கோவிலும், பாவநாசத் தீர்த்தமும் இருந்த செய்திகளையும் கூறியுள்ளார். இக்கோயிலைப் பற்றி ஒரு பதிகமே பாடியுள்ளார். இவற்றுள் ஏழாவது பாடல் கிடைக்கப்பெறவில்லை. இவர் இலங்கைக்கு வராது தென்னகத்திலுள்ள இராமேஸ்வரத்தில் இருந்தவாறு, கோணேஸ்வரத்தின் சிறப்பைப் பாடியுள்ளார். தென் இந்தியாவிலே சிறப்புப் பெற்ற கோயில்களின் வரிசையுல் இக்கோயிலும் பாடப்பட்டுள்ளமை இக்கோயில் ஈழத்தில் மட்டுமன்றி இந்தியாவிலும் புகழ் பெற்றிருந்தமையை எடுத்துக்காட்டுகின்றது. இவரது எட்டாவது பாடலில் இராவணனைப் பற்றிய குறிப்புண்டு. கோணேஸ்வரத்திற்கும் இராவணனுக்கும் தொடர்புண்டு என்ற மரபு பலராலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை விட ஏனைய தென்னகத் தலங்களுக்குப் பாடப்பட்ட பொதுப்பண்புகளை கோணேசர் பதிகத்திலும் கையாண்டுள்ளதோடு, கோணைநாதர் அமர்ந்துள்ள மலையின் இயற்கை அழகையும் சேர்த்துப் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவர் அருளியபாடலொன்றில் கோணேஸ்வரத்தின் இயற்கை அழகு சில வரிகளில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.



"...கரைகெழு ச ந்தும் காரகிற் பிளவும்
அளப்பருங் கனமணி வரன்றி
குரைகட லோதம் நி த்திலங் கொழிக்கும்
கோணமா மலையமர்ந் தாரே"



கி.பி. 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் கோணேஸ்வரத்திற்குத் திருப்புகழ் பாடியுள்ளார். "விலைக்கு மேனியில் அணிக்கோவை மேகலை" எனத் தொடங்கும் பாடலில்,


"நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
திருக்கொணாமலை தலத்தாருகோபுர
நிலைக்குள் வாயினில் கிள்பாடுபூதியில் வருவோனே"


எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அப்பரும் சுந்தரரும் அருளிய சேத்திரக் கோவைத் தாண்டகம், ஊர்த்தொகை, திருநாட்டுத் தொகை போன்ற பதிகங்களில், திருக்கோணேஸ்வரம் வைப்புத்தலமாகப் பாடப்பட்டுள்ளது. திருநாவுக்கரசு நாயனால் பாடிய திருநெய்த்தானம் பதிகத்தில்,


"தக்கார் அடியார்க்கு நீயே" என்று ஆரம்பிக்கும் பதிகத்தில்,
"...தெக்கார மாகோணத்தானே..." என்றும்


சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணத்தில்,


"...அந்நகரில் அமர்ந்து அங்கண் இனிது மேவி
யாழி புடைசூழ்ந்தொலிக்கும் மீழந்தன்னில்
மன்னு திருகோணமலைமகிழ்ந்து..."


என்ற வரிகளும் காணப்படுகின்றன.

சுந்தரர் அருளிய ஊர்த்தொகையில்,


"நிறைக்காட்டானே நெஞ்ச த்தானே..."
என்று தொடங்கும் பாடலில்,
"...திருமாந்துறையாய் மா கோணத்தானே..."
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


கி.மு.543இல் நாடு கடத்தப்பட்டு இலங்கை வந்த விஜயன் என்பவனோடும் திருக்கோணேஸ்வரம் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கு வந்த விஜயன் தனது ஆட்சிக்குப் பாதுகாப்பாக கிழக்குத் திசையில் உள்ள தம்பலகாமம் கோணேச கோயிலைப் புதுப்பித்துக் கட்டினானென மயில்வாகனப் புலவர் எழுதிய யாழ்ப்பாண வைபவமாலை கூறியுள்ளது.

கி.பி.மூன்றாம் நூற்றாண்டில் மகாசேனன் என்ற மன்னன் இக்கோயிலை அழித்து அந்த இடத்தில் விகாரையைக் கட்டினான். மகாவம்ச த்தில் திருகோணமலையிலிருந்த பிராமணக் கடவுளுக்கான கோயில் ஒன்றை மகாசேனன் இடித்தான் என்று கூறப்பட்டுள்ளது. இதனை மகாவம்ச த்தின் உரைநூலான வங்சத்தப்பகசினியும் குறிப்பிட்டுள்ளது. மகாசேனன் கட்டிய விகாரையை அழித்து மீண்டும் கோணேசர் ஆலயத்தை இங்கு கட்டியுள்ளனர்.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சைவ மறுமலர்ச்சி ஏற்பட்டு பழைய கோயில்கள் கருங்கற் கோயில்களாகக் கட்டப்பட்டபோது, கோணேசர் கோயிலும் கருங்கற்கோயிலாக மாறியிருக்கலாம் எனவும் எண்ண இடமுண்டு. கி.பி.11ஆம் நூற்றாண்டில் இலங்கையில் சோழராட்சி நடைபெற்றபோது, கோணேச கோயில் பெரிதாகக் கட்டப்பட்டது. இதற்குச் சான்றாகக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. சோழரின் பின் பொலநறுவையை ஆண்ட கஜவாகு மன்னன் கோணை நாயகருக்குப் பல மானியங்களை வழங்கினான் எனக் கோணேசர் கல்வெட்டிலே குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 12 ஆம் நூற்றாண்டின்பின் யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழ் மன்னர்களும் வன்னிச் சிற்றரசர்களும் இக்கோயிலுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

போத்துக்கேயர் கி.பி. 1624 ஆம் ஆண்டு கோணேசர் ஆலயத்தை அழிக்கு முன், இவ்வாலயத்தைப் பற்றிய தரவுகளை எடுத்துள்ளனர். போத்துக்கேய தேசாதிபதியாகிய கொன்ஸ்ரன்ரைன் டீசா நொரங்ஹா என்பவனே இவ்வாலயத்தை அழித்தவன். இக்காலத்தில் எடுக்கப்பட்ட வரைபடங்கள், குறிப்புக்கள், கட்டிடப்படங்கள் ஆகியன கோணேசர் ஆலயத்தைப் பற்றி அறியப் பெரிதும் உதவுகின்றன. இவனுடைய குறிப்புகளில் அழிக்கப்பட்ட ஆலயத்தின் பரப்புத் தரப்பட்டுள்ளது. கோபுரம் அமைந்திருந்த நிலத்தின் நீளம் 600 பாகம். அகலம் 80 பாகம். இந்நிலப்பரப்பு ஒடுங்கிச் சென்று 30 பாகமாகக் காணப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்குறிப்பின்படி அக்காலத்தில், தற்போது ஆலயம் இருக்கும் கோட்டைப்பகுதி முழுவதுமே ஆலயப்பிரதேசமாகக் காணப்பட்டுள்ளது என்பதைப் போர்த்துக்கேயரின் பதிவேடுகளிலிருந்து அறியக்கூடியதாயுள்ளது.

வரலாற்ற ஆய்வாளர்களின் கருத்துப்படி தென்னிந்தியா, கேரளம் ஆகிய இடங்களில் நிலவிய பண்பாடே இலங்கையிலும் காணப்பட்டுள்ளது. இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு, கேரளம் ஆகிய இடங்களில் பரவியிருந்த பண்பாடு பெருங்கற்பண்பாடெனப்பட்டது. தென்னிந்தியக் கோயில்கள் இப்பண்பாட்டுப் பின்னணியிலேயே தோன்றின. தற்கால ஆய்வுகள் மூலம் மேற்கூறிய பெருங்கற்பண்பாட்டு நிலையே ஈழத்திலும் காணப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஆனைக் கோட்டையிலும், திருகோணமலை, அநுராதபுரம், புத்தளம் ஆகிய இடங்களிலும் கிடைத்த தொல்பொருள் ஆய்வுகள் மேற்கூறிய முடிவை உறுதி செய்துள்ளன. இப்பண்பாட்டுப் பின்னணியில் தோன்றிய ஆலயங்களுள் கோணேஸ்வரமும் முக்கியமான ஈஸ்வரன் ஆலயமாகக் கருதப்படுகின்றது.

இன்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்னர், இலங்கையில் எழுத்தாதாரங்கள் இடம்பெறத் தொடங்கின. அதற்கு முன்பிருந்தே சிவ வழிபாடு ஈழமெங்கும் காணப்பட்டுள்ளது.

அந்நியராகிய போர்த்துகேயரால் கி.பி.1624ஆம் ஆண்டு கோணேசர் ஆலயம் இடிக்கப்படுமுன், அங்கு மூன்று பெரும் ஆலயங்கள் காணப்பட்டுள்ளன. அவை, மாதுமை அம்பாளின் பிரமாண்டமான கோயில், ஷ்ரீ நாராயணர் கோயில், மலையுச்சியில் மாதுமை அம்பாள் சமேத கோணேசர் கோயில் என்பவை, மலையிலே காணப்பட்ட சமதரைகளில் அமைந்திருந்தன. மலையடிவாரத்திலிருந்து செல்லும்போது மலையின் வடக்கேயும், தெற்கேயும் தோன்றும் உயர்ந்த பாறைகள் படிப்படியாக உயர்ந்து செல்கின்றது. இப்பாறைகளுக்கு இடைப்பட்ட நிலப்பரப்பு பரந்த சமதரையாகக் காணப்பட்டது. இச்சமதரையின் தென்திசையிலேயே மாதுமை அம்பாளின் பிரமாண்டமான கோயில் கட்டப்பட்டிருந்தது. கற்பக்கிரகத்தில் அம்பாளுடைய சிலாவிக்கிரகமும், ஏனைய பரிவார மூர்த்திகளின் ஆலயங்களும் அமைந்திருந்தன.

இவ்வாலயத்திற்கு வடகிழக்கே பாபநாசதீர்த்தக்கேணி அமைந்திருந்தது. இந்தத் தீர்த்தம் நீள்சதுர வடிவில் அமைந்ததாய் கருங்கற்களாலான படித்துறைகளைக் கொண்டதாகக் கட்டப்பட்டிருந்தது. கடல் மட்டத்துக்கக்கீழ் ஆழமுடையதாகக் காணப்பட்டமையினால் வற்றாத நீருற்றாகக் காணப்பட்டது. கோயிலுக்குச் செல்லும் மக்கள் தீர்த்தமாட இதனைப் பயன்படுத்தியதால் விசேட காலங்களில் சுவாமி தீர்த்தமாட வேறொரு பாபநாசக்கிணறும் அமைக்கப்பட்டிருந்தது. இக்கேணிக்கு வடக்குப் பக்கமாகத் தீர்த்த மண்டபம் காணப்படுகிறது. சுவாமி தீர்த்தமாடிய பின் இம்மண்டபத்தில் எழுந்தருளுவதால், இதனை ஆஸ்தான மண்டபம் என்றழைப்பர். போத்துக்யேர் ஆலயத்தை அழித்தபொழுது தீர்த்தக்கேணி எவ்வாறோ தப்பிவிட்டது. மாதுமையம்பாள் சமேத கோணேசப் பெருமான் தீர்த்தோற்சவ காலத்தில் தீர்த்தமாட இங்கு எழுந்தருளுவது தற்காலத்திலும் நடைபெறுகின்றது.

மாதுமை அம்பாளின் ஆலயம் பரந்து விரிந்த சமதரையிலே காணப்பட்டமையினால், இதனைச் சுற்றித் தேரோடும் வீதியும் காணப்பட்டது. மடங்களும், மாடங்களும் அமைக்கப்பட்டு உள்நாட்டு, வெளிநாட்டுப்பக்தர்கள் பயன்படுத்தும் வகையில் பாபநாசத்தைச் சுற்றி ஐநது கிணறுகளும் கட்டப்பட்டிருந்தன. கோணேசப் பெருமானுடைய இரதோற்சவம் இங்கிருந்தே ஆரம்பமாகும். மலையுச்சயிலிரந்து எழுந்தருளி வந்த கோணேசப்பெருமான், மாதுமை அம்பாள் ஆலயதைச் சுற்றி வந்து, இரதத்தில் எழுந்தருளி மலையடிவாரத்தைத்தாண்டி, தற்காலத்தில் பட்டணமாக மாறியுள்ள பிரதேசங்களை வலம் வந்து, வடதிசைக்கரையோரமாகவுள்ள வீதிவழியாகக் கோணேஸ்வரத்தை அடைவர். மாதுமையம்பாள் எழுந்தருளிய கோயில், மிக உயர்ந்த கோபுரத்தைக் கொண்டதாகக் காணப்பட்டதோடு, கிழக்கு நோக்கிய வாயிலைக் கொண்டிருந்தது. தற்காலத்தில் கச்சேரியும், அரசாங்கப் பணிமனைகளும் உள்ள இடமே, போத்துக்கேயர் அழிக்குமுன் காணப்பட்ட மாதுமையம்பாள் ஆலயம் அமைந்திருந்த இடமாகும்.

மாதுமையம்பாள் ஆலயத்துக்கும், பாவநாச தீர்த்தம் இருந்த இடத்திற்கும் மத்தியில் காணப்படும் பாதையால் ஏறிச்செல்லும்பொழுது, மற்றுமொரு சமதரை காணப்பட்டது. இச்சமதரையில் குளக்கோட்டு மன்னனால் எழுப்பப்பட்ட ஷ்ரீ நாராயணர்கோயில் இருந்துள்ளது. இவ்வாலயம் கிழக்கு நோக்கியதாய் உயர்ந்த கோபுரத்தைக் கொண்டதாகக் காணப்பட்டுள்ளது. இக்கோயில் அமைந்திருந்த சமதரை மாதுமையம்பாள் ஆலயம் அமைந்திரந்த சமதரையை விடச்சிறியது. இச்சமதரையின் கிழக்கு, செங்குத்தான மலைப்பாறைகளைக் கொண்டதாகவும், வடக்கேயும் தெற்கேயும் சரிவான மலைச்சாரல்களை உடையதாகவும், மேற்கே முரட்டுப் பாறைகளைக் கொண்டதாகவும் காணப்பட்டது. கற்பக்கிரகத்தில் ஷ்ரீமகாலெட்சுமி சமேத நாராயணமூர்த்தியின் சிலா விக்கிரகம் பிரதிஷ்டைசெய்யப்பட்டிருந்தது.

காவல்துறையினரின் குடியிருப்பு, கிளிவ் கொட்டேஜ் என்பவற்றோடு இரண்டாவது உலகமாகயுத்த காலத்தில் பொருத்தப்பட்ட விமான எதிர்ப்புப் பீரங்கி அமைந்துள்ள நிலப்பகுதியே நாராயணர் ஆலயம் இருந்த இடமாகும். இவ்வாலயம் இருந்த இடத்திற்குத் தெற்குப் பக்கமாக, பிரித்தானிய ஆட்சியாளர் நிலத்தை அகழ்ந்து நீர்த்தொட்டியொன்றைக் கட்டினார்கள். தற்போதும் இத்தொட்டியுள்ளது. அப்போது ஐந்து அடிஉயரமான ஷ்ரீ நாராயணமூர்த்தி, மகாலெட்சுமி ஆகிய விக்கிரகங்கள் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இத்திருவுருவங்கள் சீர்செய்யப்பட்டு கோணேசர் கோயிலில் வைக்கப்பட்டது. இவ்வாலயம் அமைந்திருந்த சமதரையின் மேற்கே காணப்படும் முரட்டுப்பாறைத் தொடரின் அந்ததத்தில், 1979ஆம் ஆண்டு இலங்கை அரசு இலங்கைத் தரைப்படை வீரர்களின் வழிபாட்டுக்கென ஒரு விகாரையை அமைத்து, புத்தர் சிலையை நிறுவி, கோகர்ணவிகாரை இங்குதான் இருந்ததெனப் பிரச்சாரம் செய்தது. ஆனால் இலங்கை அரசின் புதைபொருளாராய்ச்சித் துறையின் தலைவராயிருந்த திரு. பரணவிதான அவர்கள், தமது ஆராய்ச்சியின்போது வேறொரிடத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்க ஏட்டில், கோகர்ணவிகாரை வேறொர் இடத்தில் இருந்தமைப்பற்றிய உண்மைக் குறிப்புகளை வெளியிட்டபோது அதனை இலங்கை அரசு மறைத்துவிட்டது.

கி.பி. 3 ஆம் நூற்றாண்டில் ஆட்சிசெய்த மகாசேனன், கோணேசர் மலையிலிருந்த ஆலயத்தை அழித்து, அவ்விடத்தில் விகாரையொன்றை நிறுவினான். இதனை மகாவம்சம் "திருகோணமலையிலிருந்த பிராமணக்கடவுளுக்கான கோயிலொன்றை மகாசேனன் இடித்தான்" எனக் குறிப்பிட்டுள்ளது. மகாசேனனால் அழிக்கப்பட்ட ஆலயத்தைச் சைவசமயிகள் மீண்டும் இவ்விடத்தில் நிறுவினர் என்பதை வரலாற்றுக்குறிப்பகுளிற் காணலாம். வரலாறு? இலக்கியம், தொல்பொருள் ஆய்வுகள், மேலைநாட்டார் குறிப்புக்கள் யாவும் கி.முற்பட்ட காலத்திலேயே கோணேஸ்வரம் சுவாமிமலையின் இந்துக்கோயில் இருந்ததென்பதை நீரூபிக்கும்பொழுது, மகாயவை தீவிரவாதியான மகாசேனன், இந்து ஆலயத்தை அழித்துக் கட்டிய விகாரையின் எச்சங்கள் சிலவற்றைக்கொண்டு இவ்விடத்தில் இந்துக்கோயில் இருக்கவில்லை என்று நினைப்பதும் தவறான சிந்தனையாகும்.

மூன்றாவது ஆலயமான மாதுமை அம்பாள் சமேம கோணசப்பெருமாள் எழுந்தருளிய கோயிலே பிரதானமான கோயிலாகக் கருதப்பட்டுள்ளது. ஸ்ரீ நாராயணமூர்த்தி ஆலயமிகுந்த இடத்திலிருந்து வடக்குப் பக்கமாக ஒரு பாதை சென்றது. இப்பாதையின் கிழக்குப் பக்கம் உயர்ந்த சரிவும், மேற்குப் பக்கத் தாழ்ந்த சரிவும் காணப்பட்டது. ஆரம்பகாலத்தில் உச்சியிலிருந்து கோயிலுக்குச் செல்லக் கரடுமுரடான கற்பாதையே காணப்பட்டுள்ளது. மலையின் இயற்கை அமைவிற்கேரப் பாதைகள் உயர்ந்தும், தாழ்ந்தும் காணப்பட்டன. இதனால் இடைக்கிடை கருங்கற்படிகள் அமைக்கப்பட்டிருந்தன. இப்பாலை இராவணன் வெட்டை அடையும்போது, குறுகிய ஆழமான பள்ளத்தைக் கடந்துசெல்ல வேண்டியிருந்தது. குளக்கோட்டு மன்னன் இப்பள்ளத்தை நிரப்பும் திருப்பணியைச் செய்துள்ளான் இராவணன் வெட்டைக் கடந்து சென்றால் மலையுச்சியில் ஒரு சமதரை காணப்படும். இச்சமதரையிலேயே மாதுமையம்பான் சமேத கோணேசர் ஆலயம் காணப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தின் கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த விலைமதிப்பற்ற இரத்தினமணிகளின் பிரகாசம், தூரக் கடனி செல்லும் கடற்பயணிகளுக்கும், மாலுமிகளுக்கும் கலங்கரை விளக்கமாகப் பயன்பட்டுள்ளது. கோணேசமலையில் கட்டப்பட்டிருந்த மூன்று கோயில்களின் கோபுரங்களும் உயர்ந்து காணப்பட்டமையால், தூரக்கடலிற் பயணம் செய்வோரும் கோபுரங்களைத் தெளிவாகக் காணக்கூடியதாய் இருந்துள்ளது. தெட்சணகைலாசம் எனப் போற்றப்பட்ட திருக்கோணேஸ்வரத்தில் மாதுமை அம்பாள் சமேத கோணேசப்பெருமானும், கருவறையில் சிவலிங்கத் திருமேனியும் (பாணலிங்கம்) பிரதி
ஷ்டை செய்யப்பட்டிருந்தது.

போத்துக்கேயரால் இடித்தழிக்கப்படுவதற்கு முன்னிருந்த மூன்று ஆலயங்களின் தொன்மைத்தோற்றம், சிறப்பு என்பன இவ்வாறு காணப்பட்டுள்ளன. பின்னர் காலத்திற்குக்காலம் ஏற்பட்ட அரசியற்காரணங்களால், ஆலயத்தின் நிலப்பகுதியில் அரசகட்டிடங்களும், காவற்படைகளும் நிலைகொண்டுவிட்டன. தற்போது இராவணன்வெட்டிற்கு அண்மையில், உச்சியின் சமதரையிலேயே கோணேசர் ஆலயம் அமைந்துள்ளது.

இக்காலத்தின் தலபுராணமெனக் கருதப்படுவது தெட்சணகயிலாய புராணம். இதன் மூலம் இத்தலத்தின் தோற்றம், ஆதிவரலாறு, சிறப்பு போன்ற பல்வேறு விடயங்களை அறியக்கூடியதாயுள்ளது. இவ்வாலயத்தின் தொன்மையை அறிய உதவுவது கோணேசர் கல்வெட்டு என்ற நூல். இது கோணேசர் சாசனம் எனவும் அழைக்கப்படும். கோணேசர் கோட்டம், கோபுரம், மதில், மணிமண்டபம், பாபநாசத் தீர்த்தம் ஆகியன அமைந்த வரலாற்றுச் செய்திகள் இந்நூலிலும் கூறப்பட்டுள்ளது. கோணேசர்கல்வெட்டு என்ற நூலினைக் கோணேசர் ஆலயச் சட்டப்புத்தகமெனப் போற்றுவர்.

கோணேசர் ஆலயத்தின் நித்திய, நைமித்திய கருமங்கள் குறைவின்றி நடைபெறக் குளக்கோட்டுமன்னன் பல திட்டங்களை வகுத்துள்ளான். இவை எழுத்தப்பட்ட குறிப்புக்கள் யாவும் போத்துக்கேயரால் அழிக்கப்பட்டது.

இவ்வாறான சரித்திரப் பெருமையும், நாயன்மாரால் விதந்தோதப்பட்டதுமான இத்திருத்தலத்தை இலங்கையைக் கைப்பற்றிய அன்னியர்கள் ஒருவர்பின்னொருவராகச் சிதைத்தமிழத்தனர். இலங்கையைப் போத்துக்கேயர் கி.பி. 1505ஆம் ஆண்டு கைப்பற்றினர். திருகோணமலையின் இயற்கை அமைப்பும், கடல்வழிப் பாதைகளுக்கான மையமாகக் காணப்பட்டமையும் இப்பிரதேசத்தில் கவனம்கொள்ளச் செய்தது. மதவெறியும், கொள்ளையிடும் நோக்கமும் இவர்களிடம் காணப்பட்டாலும், திருகோணமலையின் கேந்திர முக்கியத்துவம் இவர்களை ஈர்த்தது என்று கூறுவதே பொருத்தமுடையது.

கி.பி. 1624 - 1627 வரை போத்துக்கேய தளபதியாயிருந்த கொன்ஸ்ரான்ரைன் டிஸா என்பவன் கோணேசர்மலையிலிருந்து கோயில்களை இடித்துத் தரைமட்டமாக்கினான். இவ்வாறு இடிக்கப்பட்ட கற்களைக் கொண்டே கோட்டையைக் கட்டினான். இவன் இக்கோயில்களை இடிக்குமுன் யாவற்றையும் படமாக வரைவித்துள்ளான். இப்படங்களிலொன்று போத்துக்கலிலுள்ள அஜூடா நூலகத்தில் கண்டெடுக்கப்பட்டது. கோயில் கற்களைக் கொண்டு கோட்டையைக் கட்டும்பொழுது, பழைய கல்வெட்டொன்றும் கோட்டை வாசலில் வைத்துக் கட்டப்பட்டுவிட்டது. அதனைப் படமெடுத்துப் போத்துக்கலுக்கு அனுப்பியுள்ளான். ஏனெனில் அக்கல்வெட்டில் 'கோணேசர் ஆலயம் பறங்கிகளால் இடித்தழிக்கப்படும்' என்ற தீர்க்கதரிசனம் காணப்படுகின்றது. இதனால் அனுப்பப்பட்ட குறிப்புக்களின் மூலம் கோணேசர் ஆலயத்தின் ஆரம்பகாலத் தோற்றம், நில அமைவு, பரப்பளவு போன்ற விடயங்களை அறியக்கூடியதாயுள்ளது.

பிரடெரிக் கோட்டை என்றழைக்கப்படும் கோட்டைவாயிலில் வைத்துக் கட்டப்பட்ட கல்லிலே காணப்படும் சாசனம் இவ்வாறு காணப்படுகின்றது.


(மு) ன னெ கு ள
கா ட ட ன மூ ட டு
(தி) ரு ப ப ணி யை
ன னெ ப ற ங கி
(க) க வெ ம ன னா
ன பொ ண னா
(ச) ன யி ய ற (று)
(செ) த வை த
(ண) ணா
க ள



இக்கல்லெழுத்தின் வாசகம் முதன் முதலில் வின்சுலொ அகராதியில் வெளிவந்தது.

இதனை,


முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப்
பிள்ளை மறங்கி பிடிப்பனே - மன்னா கேள்
பூனைக்கண் செங்கண் புகைக் கண்ணன் ஆண்டபின்
மானே வடுகாய் வரும்

எனக் குறிப்பிட்டுள்ளார். திருகோணமலை கிரதமிய வழக்கிலும் இவ்வாறே கூறப்பட்டு வருகின்றது.

திருகோணமலையிலிருந்து போத்துக்கேயர் கொண்டு சென்ற சுவடிகளில் மேற்குறித்த வாசகங்களைக் கண்டதாகக் குவெரோஸ் பாதிரியார் தனது சரித்திரநூலில் குறிப்பிட்டுள்ளாரென, போத்துக்கல்நாட்டில் கேக் என்ற நகரிலிருந்து, அரசசாசனவியலாளர் ஈ.பி.றெய்மார்ஸ் என்பவர் குறிப்பிட்டுள்ளார். குவெரோஸ் பாதிரியார் குறிப்பிடும் கடைசி இருவரிகளும் சற்று மாற்றமுடையனவாகக் காணப்படுகின்றன. இவ்வரிகள் பின்கண்டவாறு காணப்பட்டன.


முன்னே குளக்கோட்டன் மூட்டுத் திருப்பணியை
பின்னே பறங்கி பிரிக்கவே - மன்னவபின்
பொண்ணாத தனையியற்ற வழித்தே வைத்து
எண்ணாரே பின்னர சர்கள்'

இக்கற்காசனத்தினை முதலியார் இராசநாயகம், கொட்றிங்ரன் போன்றோரும், வேறும் பலரும் சில திருத்தங்களுடன் வெளியிட்டுள்ளனர். எது எவ்வாறாயினும் இக்கற்சாசனத்தில், குளக்கோட்டன் என்ற மன்னனால் திருப்பணி செய்யப்பட்ட ஆலயம், பின்னர் பறங்கியரால் அழிக்கப்படும் என்ற குறிப்புக் காணப்பட்டுள்ளது. கோணேசர்கல்வெட்டுக் கூறிச்செல்லும் செய்திகளைக் கண்ணகி வழக்குரை, யாழ்ப்பாண வைபவமாலை போன்ற நூல்களிலும் காணக்கூடியதாயுள்ளது.

கண்ணகி வழக்குரையில்,'-மறையோர்கள் கோணைநாதர்
திருப்பூசை வெகுகாலஞ் செய்யுமந்நாள்
மாந்தளிர்போல் மேனியுடைப் பறங்கி வந்து
மஉறாகோணைப் பதியழிக்க வருமந்நாளில்...'


என்றும்,

யாழ்ப்பாண வைபவமாலையில்,

'....இவ்விராச்சியம் (ஈழம்) முதன்முதல் பறங்கிக்காரர் கையில் அகப்படும். அவர்கள் ஆலயங்களையெல்லாம் இடித்தழிப்பர்...' என்று கூறப்பட்டுள்ளது. பின்னர் நடக்கப் போவதை முன்னே கூறிவைத்த இவர்களது தீர்க்கதரிசனம் வியப்புக்குரியது.

போத்துக்கேயரால் திருக்கோணேஸ்வரம் சீரழிக்கப்பட்டாலும், பக்தர்கள் மனந்தளராது குன்றின் அடிவாரத்தில், குகைவாயில்போல் காணப்படும் இடத்தைக் குறித்துத் தங்கள் வணக்கத்தைச் செலுத்தி வந்தார்கள். ஆண்டுக்கொருமுறை கடலுக்குள் நீண்டிருக்கும் பாறையில் ஒன்றுகூடி, வணங்கிச் சென்றுள்ளனர்.

கி.பி. 1639 இல் ஒல்லாந்தர் என்ற டச்சுக்காரர்கள் திருகோணமலையைக் கைப்பற்றினார்கள். இவர்கள் கோணேசர் ஆலயத்திலும், அதன் சுற்றாடலிலும் பெரிதும் அக்கறை காட்டினார்கள். போத்துக்கேயரால் அழிக்கப்பட்டு எஞ்சியிருந்த தூண்களை இடித்துத் தங்களுடைய கோட்டையைக் கட்டினார்கள். இங்குள்ள இடங்களுக்கு டச்சுப்பெயர்களையும் சூட்டினார்கள். இவர்கள் காலத்திலும் ஆலயத்திற்குச் செல்வதற்கும், வணங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் பக்தர்கள் ஒளித்திருந்து தங்கள் வணக்கத்தைச் செலுத்தி வந்துள்ளார்கள்.

கி.பி. 1795 ஆம் ஆண்டு பிரித்தானியர், திருகோணமலைக் கோட்டையைக் கைப்பற்றினார்கள். இவர்கள் ஆட்சியில் சைவமக்கள் ஆறுதல் பெற்றவர்களாகக் காணப்பட்டார்கள். எல்லோருக்கும் வணக்க உரிமை இருக்க வேண்டும் என்ற பரந்த கொள்கையுடையவர்களாக ஆங்கிலேயர் காணப்பட்டனர். அழிபாடுகளைக்கொண்ட கோயிலுக்கு மக்கள் சென்று தரிசிப்பதை, ஆங்கிலேயர் தடுக்காது மக்கள் மன உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்துள்ளார்கள். கி.பி 1803 ஆம் ஆண்டு, கோயில் இருந்ததாகக் கருதப்படும் சுவாமிமலையில் இந்துக்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இரண்டாவது மகாயுத்தத்தின்போது திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ள பிரடெரிக் கோட்டை, பாதுகாப்பு வலயமாகக் காணப்பட்டதால், வாரத்தில் இரண்டு நாட்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆங்கிலேயர், கோணேஸ்வரம் அமைந்துள்ள பகுதியின் இயற்கை வளங்களையும் பாதுகாத்தனர். கோட்டை வனத்துள் வாழும் மான்கள் பசியாலும், நாகத்தாலும் வாடாது உணவளித்தனர். தண்ணீர்த்தொட்டிகளை அமைந்து அவற்றைக் காப்பாற்றினர்.

கி.பி. 1942 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆந் திகதி, யப்பானியர் குண்டுவீசித் திருகோணமலையைத் தாக்கினர். சீனன்குடாவில் காணப்பட்ட, எண்ணெய்த் தாங்கிகள் தீப்பிடித்து எரிந்தன. ஆனால் திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ள, கோட்டைப்பகுதியில் வீசப்பட்ட குண்டுகள் எதுவும் கோயிலைப் பாதிக்காது கடலுக்குள் விழுந்தன. ஆங்கிலேயர் ஆட்சியில், கோணேஸ்வரம் இழந்த பெருமையையை மீளப்பெற வித்திடப்பட்டது.

இவ்வாறான சூழ்நிலையில், 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆந் திகதி, இலங்கை சுதந்திரம் பெற்றது. போத்துக்கேயர் ஆலயத்தை அழித்தபோது ஆலயத்திலிருந்த விக்கிரகங்களை நாலாபக்கமும் எடுத்துச் சென்று புதைத்திருந்தார்கள். சிதாகாசவெளியை தமது உள்ளத் திருத்திப் பிரார்த்தனை செய்த, மக்களின் பிரார்த்தனை வீண்போகவில்லை. 1950 ஆம் ஆண்டு வரலாற்று நியதிப்படி, இறையருளால் பிள்ளையார், சிவன், பார்வதி, திருவெங்கவடிவ அம்பாள், அ
ஷ்சரதேவர், சந்திரசேகரர் முதலிய திருவுருவங்களோடு, அன்னவாகனம் ஆகியனவும் பூமியிலிருந்து கிணறு வெட்டும்பொழுது வெளிப்பட்டது. சைவப்பெருமக்கள் ஒன்றுகூடி, முன்னர் கோயில் இருந்த இடத்தில் கோயிலைக் கட்டி இத்திருவுருவங்களைப் பிரதிஷ்டை செய்தனர். இதன் பின்னர் 1963 ஆம் ஆண்டு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. 1963 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்றாந் திகதி ஆவர்த்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தேறியது. தெரவு செய்யப்பட்ட ஆலய பரிபாலனசபைத் தலைவராகக் காலஞ்சென்ற டாக்டர் சு.சித்திரவேல் அவர்கள் தலைமை தாங்கினர். 1971 ஆம் ஆண்டு இவர் சிவபதம் அடைந்த பின்னர் இப்பொறுப்பை ஏற்றவர் திரு.மு.கோணாமலை செல்வராசா அவர்கள்.

குளக்கோட்டு மன்னன் காலத்திலிருந்து தெப்பத்திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்று வந்தது. 1973 ஆம் ஆண்டு முதல் மீண்டும் இத்திருவிழா நடைபெறுகின்றது. மக்கள் ஆதரவினால் ஆலயப் புனருத்தாரணப் பணிகள் நிறைவேறி, 1981 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆந் திகதி ஜீர்ணோத்தாரண கும்பாபி
ஷேகம் நடைபெற்றது. மீண்டும் ஆலயத்தில் பல புனருத்தாரணப் பணிகள் செய்யப்பட்டன. ஆலய பரிபாலனசபையுடன், இந்து கலாச்சார அமைச்சு, வடகிழக்கு மாகாண சபை ஆகியன இணைந்து இப்பணியில் ஈடுபட்டு 1993 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆந் திகதி மிகச் சிறப்பான முறையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவற்றின் மூலம் திருவுருவங்கள் அதீத சக்தியைப் பெறுவதோடு நாட்டிற்கும், மக்களுக்கும் அருளை வழங்கும் என்பது ஆன்றோர் கருத்தாகக் காணப்படுகின்றது.

திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் அவர்கள் கூறியுள்ள கருத்து உற்று நோக்கத்தக்கது. 'சில வேளைகளில் கோயில்களில் உள்ள சிலைகள் வெறும் சின்னங்களாகக் கருதப்படுகின்றன. இது ஒரு பூரணமான கருத்தல்ல. ஒவ்வொரு சிலையும் ஒரு பிரத்தியேகமான அபி
ஷேகத்தினால், தெய்வீகத்தன்மை பெறுகின்றது' என்பதற்கிணங்கப் பல தடவைகள் கும்பாபிஷேகம் கண்ட இத்திருக்கோயிலின் அருளுக்கு இணையேது?

2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆந் திகதி, திருக்கோணேஸ்வர வரலாற்றில் புதிய திருப்பம்மிக்க நாளாகக் காண்ப்படுகின்றது. கி.பி 1624 ஆம் ஆண்டு போத்துக்கேயரால் ஆலயத்தின் தேர்கள் அழிக்கப்பட்டபின் இன்றுவரை பழம்பெருமைமிக்க தேரையும், தேர்த் திருவழாவையும் மக்கள் கண்டுகளிக்க முடியவில்லை. ஏறக்குறைய 379 ஆண்டுகளின் பின் மீண்டும் அழகுமிக்க புதிய தேரிலே மாதுமையம்பாள் சமேத கோணேசப்பெருமான் எழுந்தருளி மக்களை ஆட்கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

தற்காலத்தில் இங்கு செல்வதற்கான செப்பனிடப்பட்ட தார்வீதி காணப்படுகின்றது. மலையுச்சியிலுள்ள சமதரைக்கு ஏறுவதற்கு வசதியாகப் படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ள பிரடெரிக்கோட்டை, அதியுயர் பாதுகாப்புவலயமாகக் காணப்படுவதால், ஆலயத்திற்கு அண்மையிலும் பாதுகாப்புப்படைகள் காவல் செய்கின்றனர். கடந்த காலங்களில் நாட்டில் காணப்பட்ட அரசியல் சூழ்நிலை காரணமாக, இப்பகுதிக்குள் செல்வதற்கு விசேட அனுமதிபெற்றே செல்ல வேண்டியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதி இங்கு நித்திய நைமித்திய வழிபாடுகள் சிறப்புற நடைபெறவும், மக்கள் கோணேசப்பெருமானைத் தடையின்றிச் சென்று தரிசிக்கவும் வகை செய்துள்ளது.

திருக்கோணேஸ்வரம் பாடல்பெற்ற தலமாகக் காணப்பட்டு, ஈழம், இந்தியா, மேலை நாட்டார் எனப் பலதிறப்பட்டோராலும் புகழப்பட்டுள்ளது. கீழைத்தேசத்திலுள்ள கிறிஸ்தவரல்லாத மக்களின் உரோமாபுரி என்று குவைரோஸ் அவர்களால் பாராட்டப்பெற்றது. பிரமாண்டத்தின் இடைநாடியென சாந்தோக்கிய உபநிடதம் உரைக்கின்றது. அனுக்கிரகத்தலம் எனத் திருவாதவூரடிகளும், பல்வளமும் நிறைபதியெனக் கந்தபுராணமும் போற்றியுள்ளன. எல்லாரும் எல்லாச் செல்வமும் பெற்று வாழ்ந்த இணையிலாப் பதியென இராமாயணம் இயம்பும். இவ்வாறான புகழ்பெற்ற திருத்தலம் திருக்கோணேஸ்வரம்.

இதன் தொன்மையை அறிய எண்ணி, 1956 ஆம் ஆண்டு திருக்கோணேஸ்வரக் கடலினடியில் ஆராய்ச்சிசெய்த ஆர்தர் சி. கிளார்க், மைக் வில்சன், ரொட்னி ஜோங்கல்ஸ் என்பவர்களின் ஆராய்ச்சிக் குறிப்புகளையும், புகைப்படப்பிரதிகளையும் ஆய்வு செய்தோர், மிகப்பழமை வாய்ந்த ஆலயம் கடலின் அடியில் ஆழ்ந்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர். பிரமாண்டமான மணிகளும், விளக்குகளும், தூண்களும், கோயிற் தளங்களும் கடலினடியில் இருப்பதாக ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளது.

தமிழர்களின் வரலாற்றையம், திருக்கோணேஸ்வரத்தின் தொன்மையையும் மறைக்கவும், மாற்றவும் முயலும் சக்திகளால், கடலினடியில் செய்யப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுகளைக் கொண்ட ஆவணங்கள் மறைக்கப்பட்டு, ஆராய்ச்சிகள் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இந்த ஆவணங்கள் மீட்கப்பட்டு ஆய்வுகள் தொடரப்பட்டால், நாம் கணித்துள்ள காலத்தை விட தொன்மை மிக்கதொரு காலத்தில் தமிழர்களும், அவர்கள் தழுவிய சைவமும் ஈழண்ணில் இருந்துள்ளது என்ற உண்மை புலப்படும்.

தினமும் விழாக்கோலம் பூண்டு, சுதந்திரமாக மக்கள் சென்று வணங்கிய திருக்கோணேஸ்வரத்தின் இன்றைய நிலை என்ன? பாதுகாப்புப் பிரதேசமாகவுள்ள பிரடெரிக்கோட்டையுள் எழுந்தருளியிருக்கும் கோணேசப்பெருமானின் இன்றைய நிலை கல்மனங் கொண்டோரையும் கலங்கச் செய்யும். மலையடிவாரத்திலிருந்து மேலே ஏறிச்செல்லும்பொழுது, வீசுகின்ற காற்றிலே மலர் மணமும், மூலிகைகளின் வாசமும் சேர்ந்து, புத்துணர்வைக் கொடுக்கும். இலந்தை, பாலை, நாவல் எனப் பல்வகைப்பழங்கள் எங்கும் விழுந்து பரவிக்காணப்படும். இம்மரங்கள் தறிக்கப்பட்டுப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மானும், மயிலும், மந்தியும் அங்குமிங்கும் சுதந்திரமாகத் திரியும். இவையெல்லாம் எங்கே ஓடிச்சென்றனவோ தெரியவில்லை. மலை உச்சியிலே சில மந்திகள் காணப்படுகின்றன.

இறைவனைத் தரிசிக்க அதிகாரிகளின் பரிந்துரையின் பேரிலேயே கோட்டைக்குள்ளே செல்ல முடியும். மலையடிவாரத்தின் கடற்கரைப்பகுதி அன்று வெண்மணற்பரப்பாகக் காணப்பட்டது. இன்று அப்பகுதி முள்ளடர்ந்த பற்றைபோல மாறியிருக்கின்றது. மலையடிவாரத்திலுள்ள பாதுகாப்புப் படையினரிடம் கடவுச்சீட்டு, அடையாள அட்டை இவற்றைக் கொடுத்து அவர்கள் தரும் பற்றுச் சீட்டுடனேயே கோட்டைக்குள் சென்று, கோணேசப் பெருமானைத் தரிசிக்கலாம். திருக்கோணேஸ்வரத்தில், வெளிநாடுகளிலிருந்து செல்வோரைத் தவிர, உள்ளூர் மக்களைக் காண்பது அரிதாகவே காணப்படுகின்றது. தினமும் விழாக்கோலம் பூண்டிருந்த புண்ணியபூமியின் அண்மைக்கால நிலைமை இவ்வாறுதான் காணப்படுகின்றது. இந்நிலை மாறி, தொன்மையும், வரலாற்றுப்பெருமையும் மிக்க கோணேசர் ஆலயத்தின் பெருமை மீண்டும் நிலைநிறுத்தப்படுவதோடு இவ்வாலயத்தின் சிறப்புகளை அனைவரும் அறிந்து போற்றிப் பரவுதல் அவசியமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக