சீதா அம்மன் கோவில், சீதா எலியா, நுவரா எலியா, ஸ்ரீலங்கா
சீதா தேவிக்கு என உலகின் ஒரே ஒரு கோவில் சீதா எலியா, நுவரா எலியா, ஸ்ரீலங்காவில் அமைந்துள்ளது. இங்கேயும் கூட மற்ற பெண் தெய்வங்களுக்கு உள்ளது போல தனியாக சீதாவுக்கு சன்னதி இல்லை. ராமர் லக்ஷ்மனனுடன் தான் இருக்கிறார்.
இலங்கையின் இந்த பகுதியில் தான் ராவணன் சீதையை கடத்தி வந்து சிறை வைத்திருந்த அசோக வனம் என்பதாக ஒரு நம்பிக்கையில் சமீபத்தில் அந்தக் கோவில் நமது தமிழக கோவில்கள் வடிவில் புனரமைக்கப்பட்டுள்ளது. (திருமதி சந்திரிகா குமாரதுங்கே ஆட்சியில்) அழகான ரம்யமான சூழ்நிலையில் கோவில் காணக் கண் கோடி வேண்டும். கோவில் என்னமோ சிறியதாகத் தான் இருக்கிறது. ஆனால் சிலுசிலுவென குளிர்ந்த காற்று வீச, அருகில் அழகான ஒரு தெளிவான மலை ஓடை. அழகுதான். சுற்றிலும் அடர்ந்த டி எஸ்டேட். அருமையான இடத்தில் தான் சீதையை ராவணன் சிறை வைத்திருக்கிறான்.
கோவிலை சுற்றி பகுதியை புனித ஸ்தலமாகவும் பக்தர்கள் வந்து தரிசிக்கும் விதமாகவும் மாற்றிட ரொம்ப வருடங்களாக இலங்கை அரசு முயற்சியில் உள்ளதாக கேள்விபட்டேன். அதற்கு புத்த பிட்சுக்கள் எதிர்ப்பும் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் எல்லோருக்கும் இதை சரித்திர புகழ் வாய்ந்த இடம் என்பதில் எந்த மறுப்பும் இல்லை.
ஒரு காலத்தில் இந்தக் கோவிலுக்கருகில் கிடைத்த மூன்று சிலைகளில் ஒன்று சீதை எனவும் அதை பல்லாண்டு காலங்களாக அந்தப் பகுதி மக்கள் இராமாயண சீதையாக வணங்கி வந்திருக்கிறார்கள் என்றும் அதனால் சீதைக்கு ஒரு கோவில் எழுப்பட்டு அதில் புதிதாக ராமர், லக்ஷ்மன், சீதையுடன் கூடிய ஒரு சிலை தெய்வங்களாக படைக்கப் பட்டது என்றும் அறிகிறேன்.
அருகிலேயே ஹனுமானுக்கும் சன்னதி உள்ளது. ஆனால் சிறிது தூரத்திற்கு முன் அனுமானுக்கென்றே ஒரு கோவில் அமைக்கப் பட்டுள்ளது. அது சின்மயா குழுவினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. அங்குதான் ஹனுமான் சீதையை தேடி வரும் போது ஓய்வு எடுத்ததாக ஐதீகம்.
ராமாயண இலங்கை இதுவல்ல என்றும் அது விந்திய மலைக்கு இப்பால் உள்ள ஒரு இடம் என்பதிலும் தற்போது பல கருத்து வேறுபாடுகள் உள்ளன. ராமாயன நிகழ்ச்சிகள் அங்கே நடைபெற்றதற்கு அவ்வளவு உறுதியான அடையாளங்கள் இலங்கையில் இல்லாததே இதற்கு காரணம். பெரும் காடும் மலைகளும் சூழ்ந்த அந்த இலங்கையில் கோட்டைகளும் மதில்களும் மறைந்திருக்கலாம் அல்லது காலப் போக்கில் அழிந்து போயிருக்கலாம்.
ஏற்கனவே குளு குளு சுற்றுலாத் தளமான நுவரா எலியாவில் நமது புனித ஸ்தலமும் உள்ளதில் நமக்கு பெருமைதான். ஹிந்துக்கள் மட்டுமின்றி பல வெளிநாட்டினரும் வந்து சாமி கும்பிட்டு படமெடுத்து செல்கிறார்கள்.
நீங்களும் ஒரு முறை சென்று வாருங்களேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக