செவ்வாய், 31 டிசம்பர், 2013

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்






திருக்கோணேசுவரம் என்கின்ற திருகோணமலை

நன்றி: tamilsguide.com
படங்கள் உதவி இணையதளம்.

திருக்கோணேசுவரம்
திருகோணமலை






காலத்திற்குக் காலம் கடற்கோளினால் பண்டைய ஈழம் அழிந்தபோது, ஈழத்தின் பல பகுதிகள் கடலுள் மூழ்கின. நிலப்பகுதிகள் நீருள் அமிழ்ந்தும், சில பகுதிகள் நில மட்டத்தினின்றும் உயர்ந்தும் காணப்பட்டன. மூன்று முறை கடல்கோள்கள் ஏற்பட்டதாகவும், மூன்றாவது கடல்கோளின் பின் எஞ்சியுள்ளதே தற்போதைய ஈழம் என்பதையும் வரலாறுகள் விளக்கியுள்ளன. வரலாற்றுக்குமுற்பட்ட காலத்திலிருந்தே சிவபூமியாக விளங்கியது ஈழம். ஈழத்தின் பழம் பெருமை வாய்ந்த சிவத்தலங்களுள் திருக்கோணேஸ்வரம் சிறப்புப் பெற்றது. ஈழத்தின் வரலாற்றோடு தொடர்பு கொண்டது. கிழக்கே திருக்கோணேஸ்வரம், வடமேற்கே திருக்கேதீஸ்வரம், வடக்கே நகுலேஸ்வரம், மேற்கே முனீஸ்வரம், தென்கிழக்கே தொண்டீஸ்வரம் எனப் பஞ்ச ஈஸ்வரங்களைக் கொண்ட சிவபூமியாக ஈழம் விளங்கியது.

பஞ்ச ஈஸ்வரங்களுள் ஒன்றான திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ள திருகோணமலை மாவட்டம், பல்வேறு சிறப்புக்களையும் தன்னகத்தே கொண்டதே. திருகோணமலை இயற்கை எழில் கொஞ்சும் பிரதேச மாகக் காணப்படுவதோடு, மிகப்பெரிய இயற்கைத் துறைமுகத்தையும் கொண்டதாக விளங்குகிறது. இக்காரணத்தினால் இப்பிரதேசம் உலகப்புகழ்பெற்ற பிரதேச மாகவும் காணப்படுகின்றது. ஏறக்குறைய ஆயிரத்து எண்பது சதுரமைல் பரப்பினைக் கொண்டதாக இப்பிரதேசம் அமைந்துள்ளது. இப்பிரதேசம் வடக்கே முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களையும், மேற்கே அநுராதபுரம், பொலநறுவை மாவட்டங்களையும், தெற்கே மட்டக்களப்பு மாவட்டத்தையும் கிழக்கே வங்காள விரிகுடாவினையும் கொண்டதாகக் காணப்படுகின்றது. மூன்று புறமும் ஆர்ப்பரிக்கும் கடலின் நடுவே உயர்ந்து நிற்கும் குன்றில் அமைந்துள்ளது, புகழ்பெற்ற திருத்தலமான திருக்கோணேசுவரம். இக்குன்று அமைந்துள்ள பிரதேச த்தைப் பிரடெரிக் கோட்டை என்று அழைப்பர். ஈழத் திருநாட்டிலே காணப்படுகின்ற பாடல்பெற்ற தலங்களுள் ஒன்றாக விளங்குவது திருக்கோணேஸ்வரம். திருக்கோணேஸ்வரத்தின் ஆரம்பத் தோற்றம், அமைவிடம், காலம் இவை பற்றி வரலாறு, ஐதீகக் கதைகள், இலக்கியச் சான்றுகள், புதைபொருள் ஆய்வுகள், மேலைநாட்டார் குறிப்புக்கள், கல்வெட்டுக்கள் ஆகியவற்றின் மூலம் அறியக்கூடியதாயுள்ளது. கி.மு.1300 ஆண்டுகளுக்கு முன் கோணேசர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இத்தகவலைப் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட கோணேசர் கோயில் கற்தூண்களில் உள்ள கல்வெட்டுக்களிலே காணலாம். குவெறொஸ் பாதிரியாரால் எழுதப்பட்ட
The Temporal and Sprititual conquest of Ceylon என்ற நூலிலும் இச்செ ய்தி காணப்படுகின்றது.


கி.பி.1624 இல் போர்த்துக்கேயர் திருகோணமலையைக் கைப்பற்றி, கோணேசர் ஆலயத்தை நிர்மூலமாக்கியபோது, போர்த்துக்கேய படையின் தளபதியாக விளங்கிய கொன்ஸ்ரன்ரைன் டீசா இங்கு கைப்பற்றிய சுவடிகளைப் போர்த்துக்கலிலுள்ள லிஸ்பனுக்கு அனுப்பிவைத்துள்ளான். இவை லிஸ்பனிலுள்ள `அஜுடா' நூல்நி லையத்தில் வைக்கப்பட்டுள்ளது. அச்சுவடிகளில் மனுராசன் என்னும் மன்னன் இலங்கையை ஆண்டான் என்றும், இவன் கி.மு.1300ஆம் ஆண்டு கோணேச கோயிலைக் கட்டினான் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் கைலாச புராணம் என்னும் நூலில் மனுநீ தி கண்ட சோழ மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க, அவரது மகனான குளக்கோட்டு மகாராஜா இக்கோயிலைக் கட்டினாரெனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக `முன்னே குளக்கோட்டன் மூட்டுத் திருப்பணியைப் பின்னே பறங்கி பிரிக்கவே' என்ற கல்வெட்டு வரிகள் சான்றாகக் கூறப்பட்டுள்ளன. ஏற்கெனவே கட்ப்பட்டிருந்த கோயிலைக் குளக்கோட்டு மன்னன் புனருத்தாரணம் செய்ததோடு, பல திருப்பணிகளையும் செய்துள்ளான் என்பதையே பலரும் ஏற்றுக்கொள்கின்றனர். இம்மன்னன் கோணைநாதருக்குத் தெப்பத் திருவிழா நடத்த ஒரு தெப்பக் குளத்தை ஏற்படுத்தி, அதற்குத் தெற்குப் பக்கமாக ஒரு வெள்ளை வில்வ விருட்ச த்தின் கீழ் மண்டபமொன்றைக் கட்டியுள்ளான். தெப்பத் திருவிழாவிற்கு, கோணேசப் பெருமான் ஆலயத்திலிருந்து எழுந்தருளி, இங்கு தங்கிச் செல்வார். பின்னாளில் இம்மண்டபம் கோயிலாக்கப்பட்டு லிங்கம் பிரதிஷ்டை செ ய்யப்பட்டு, வெள்ளை வில்வத்துக்கோணேசர் கோயில் என அழைக்கப்பட்டது. குளக்கோட்டு மன்னனுடைய திருப்பணிகளை விளக்கிக் கூறும் நூல் கோணேசர் கல்வெட்டு. இந்நூலில் குளக்கோட்டு மன்னன் திருக்கோணேஸ்வரம் கோயிலுக்குச் செய்த திருப்பணிகள் பற்றி விளக்கிக் கூறப்பட்டுள்ளது. இச்செ ய்திகள் யாவும் குளக்கோட்டனுக்கும் ஆலயத்திற்குமுள்ள தொடர்பை வலியுறுத்துகின்றன.

இலங்கையை ஆண்டதாகக் கருதப்படும் இராவணன், திருக்கோணேசர் கோயிலோடு கொண்ட தொடர்புகள் ஏராளம். இம்மன்னனுக்கும் கோணேசர் கோயிலுக்குமிடையிலான தொடர்புகளைத் தேவாரம், புராணம், இதிகாசம், வரலாறு ஆகியவற்றின் மூலம் அறியலாம். திருக்கோணேஸ்வரத்திலுள்ள மலையின் கிழக்குப் பக்கத்திலுள்ள இராவணன் வெட்டு என்னும் மலைப்பிளவு ஆலயத்திற்கும், இராவணனுக்குமுள்ள தொடர்பை விளக்குகின்றது.

மகரிஷிகளில் ஒருவராகக் கருதப்படுபவர் அகத்தியர். வரலாற்றாய்வாளர்களின் கணிப்புப்படி இவர் வாழ்ந்த காலம் கி.மு.1000 ஆண்டெனக் கொள்ளப்படுகின்றது. இவர் கோணேஸ்வரப் பெருமானை வழிபட்டார் என இதிகாச , புராண, வரலாற்றுக் குறிப்புக்களில் காணப்படுவதால் இவ்வாலயம் அகத்தியர் காலத்திலேயே இருந்ததெனக் கருதலாம்.

கி.மு.1263ஆம் ஆண்டில் இலங்கையைக் கைப்பற்றிய வீரபாண்டிய மன்னர், வெற்றிச்சின்னமாக இரண்டு `மீன்' இலச்சினைகளை இந்த ஆலயத்தில் பொறித்துச் சென்றுள்ளார். இன்றும் இவ்விரு சின்னங்களும் கோணேசர் கோட்டை நுழைவாயிலில் காணப்படுகின்றன. பாண்டிய மன்னன் ஆட்சிக்காலத்தில், மநுநீதிகண்ட சோழனின் மகனாகிய குளக்கோட்டு மன்னன் கோணேசர் ஆலயத்தைப் புனருத்தாரணம் செய்தானென யாழ்ப்பாண வைபவமாலை என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது. பாண்டிய மன்னர் அநுராதபுரத்திலிருந்தே ஆட்சி செ ய்துள்ளனமை, குளக்கோட்டு மன்னனின் புனருத்தாரண வேலைக்குச் சாதகமாயிருந்திருக்க வேண்டும்.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சமயகுரவராகிய திருஞான சம்பந்தர் தமது பதிகங்களில், கோணேசப்பெருமானையும் கோணமாமலையின் இயற்கை அழகையும், குறிப்பிட்டுள்ளதோடு கோவிலும், பாவநாசத் தீர்த்தமும் இருந்த செய்திகளையும் கூறியுள்ளார். இக்கோயிலைப் பற்றி ஒரு பதிகமே பாடியுள்ளார். இவற்றுள் ஏழாவது பாடல் கிடைக்கப்பெறவில்லை. இவர் இலங்கைக்கு வராது தென்னகத்திலுள்ள இராமேஸ்வரத்தில் இருந்தவாறு, கோணேஸ்வரத்தின் சிறப்பைப் பாடியுள்ளார். தென் இந்தியாவிலே சிறப்புப் பெற்ற கோயில்களின் வரிசையுல் இக்கோயிலும் பாடப்பட்டுள்ளமை இக்கோயில் ஈழத்தில் மட்டுமன்றி இந்தியாவிலும் புகழ் பெற்றிருந்தமையை எடுத்துக்காட்டுகின்றது. இவரது எட்டாவது பாடலில் இராவணனைப் பற்றிய குறிப்புண்டு. கோணேஸ்வரத்திற்கும் இராவணனுக்கும் தொடர்புண்டு என்ற மரபு பலராலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை விட ஏனைய தென்னகத் தலங்களுக்குப் பாடப்பட்ட பொதுப்பண்புகளை கோணேசர் பதிகத்திலும் கையாண்டுள்ளதோடு, கோணைநாதர் அமர்ந்துள்ள மலையின் இயற்கை அழகையும் சேர்த்துப் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவர் அருளியபாடலொன்றில் கோணேஸ்வரத்தின் இயற்கை அழகு சில வரிகளில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.



"...கரைகெழு ச ந்தும் காரகிற் பிளவும்
அளப்பருங் கனமணி வரன்றி
குரைகட லோதம் நி த்திலங் கொழிக்கும்
கோணமா மலையமர்ந் தாரே"



கி.பி. 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் கோணேஸ்வரத்திற்குத் திருப்புகழ் பாடியுள்ளார். "விலைக்கு மேனியில் அணிக்கோவை மேகலை" எனத் தொடங்கும் பாடலில்,


"நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
திருக்கொணாமலை தலத்தாருகோபுர
நிலைக்குள் வாயினில் கிள்பாடுபூதியில் வருவோனே"


எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அப்பரும் சுந்தரரும் அருளிய சேத்திரக் கோவைத் தாண்டகம், ஊர்த்தொகை, திருநாட்டுத் தொகை போன்ற பதிகங்களில், திருக்கோணேஸ்வரம் வைப்புத்தலமாகப் பாடப்பட்டுள்ளது. திருநாவுக்கரசு நாயனால் பாடிய திருநெய்த்தானம் பதிகத்தில்,


"தக்கார் அடியார்க்கு நீயே" என்று ஆரம்பிக்கும் பதிகத்தில்,
"...தெக்கார மாகோணத்தானே..." என்றும்


சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணத்தில்,


"...அந்நகரில் அமர்ந்து அங்கண் இனிது மேவி
யாழி புடைசூழ்ந்தொலிக்கும் மீழந்தன்னில்
மன்னு திருகோணமலைமகிழ்ந்து..."


என்ற வரிகளும் காணப்படுகின்றன.

சுந்தரர் அருளிய ஊர்த்தொகையில்,


"நிறைக்காட்டானே நெஞ்ச த்தானே..."
என்று தொடங்கும் பாடலில்,
"...திருமாந்துறையாய் மா கோணத்தானே..."
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


கி.மு.543இல் நாடு கடத்தப்பட்டு இலங்கை வந்த விஜயன் என்பவனோடும் திருக்கோணேஸ்வரம் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கு வந்த விஜயன் தனது ஆட்சிக்குப் பாதுகாப்பாக கிழக்குத் திசையில் உள்ள தம்பலகாமம் கோணேச கோயிலைப் புதுப்பித்துக் கட்டினானென மயில்வாகனப் புலவர் எழுதிய யாழ்ப்பாண வைபவமாலை கூறியுள்ளது.

கி.பி.மூன்றாம் நூற்றாண்டில் மகாசேனன் என்ற மன்னன் இக்கோயிலை அழித்து அந்த இடத்தில் விகாரையைக் கட்டினான். மகாவம்ச த்தில் திருகோணமலையிலிருந்த பிராமணக் கடவுளுக்கான கோயில் ஒன்றை மகாசேனன் இடித்தான் என்று கூறப்பட்டுள்ளது. இதனை மகாவம்ச த்தின் உரைநூலான வங்சத்தப்பகசினியும் குறிப்பிட்டுள்ளது. மகாசேனன் கட்டிய விகாரையை அழித்து மீண்டும் கோணேசர் ஆலயத்தை இங்கு கட்டியுள்ளனர்.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சைவ மறுமலர்ச்சி ஏற்பட்டு பழைய கோயில்கள் கருங்கற் கோயில்களாகக் கட்டப்பட்டபோது, கோணேசர் கோயிலும் கருங்கற்கோயிலாக மாறியிருக்கலாம் எனவும் எண்ண இடமுண்டு. கி.பி.11ஆம் நூற்றாண்டில் இலங்கையில் சோழராட்சி நடைபெற்றபோது, கோணேச கோயில் பெரிதாகக் கட்டப்பட்டது. இதற்குச் சான்றாகக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. சோழரின் பின் பொலநறுவையை ஆண்ட கஜவாகு மன்னன் கோணை நாயகருக்குப் பல மானியங்களை வழங்கினான் எனக் கோணேசர் கல்வெட்டிலே குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 12 ஆம் நூற்றாண்டின்பின் யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழ் மன்னர்களும் வன்னிச் சிற்றரசர்களும் இக்கோயிலுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

போத்துக்கேயர் கி.பி. 1624 ஆம் ஆண்டு கோணேசர் ஆலயத்தை அழிக்கு முன், இவ்வாலயத்தைப் பற்றிய தரவுகளை எடுத்துள்ளனர். போத்துக்கேய தேசாதிபதியாகிய கொன்ஸ்ரன்ரைன் டீசா நொரங்ஹா என்பவனே இவ்வாலயத்தை அழித்தவன். இக்காலத்தில் எடுக்கப்பட்ட வரைபடங்கள், குறிப்புக்கள், கட்டிடப்படங்கள் ஆகியன கோணேசர் ஆலயத்தைப் பற்றி அறியப் பெரிதும் உதவுகின்றன. இவனுடைய குறிப்புகளில் அழிக்கப்பட்ட ஆலயத்தின் பரப்புத் தரப்பட்டுள்ளது. கோபுரம் அமைந்திருந்த நிலத்தின் நீளம் 600 பாகம். அகலம் 80 பாகம். இந்நிலப்பரப்பு ஒடுங்கிச் சென்று 30 பாகமாகக் காணப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்குறிப்பின்படி அக்காலத்தில், தற்போது ஆலயம் இருக்கும் கோட்டைப்பகுதி முழுவதுமே ஆலயப்பிரதேசமாகக் காணப்பட்டுள்ளது என்பதைப் போர்த்துக்கேயரின் பதிவேடுகளிலிருந்து அறியக்கூடியதாயுள்ளது.

வரலாற்ற ஆய்வாளர்களின் கருத்துப்படி தென்னிந்தியா, கேரளம் ஆகிய இடங்களில் நிலவிய பண்பாடே இலங்கையிலும் காணப்பட்டுள்ளது. இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு, கேரளம் ஆகிய இடங்களில் பரவியிருந்த பண்பாடு பெருங்கற்பண்பாடெனப்பட்டது. தென்னிந்தியக் கோயில்கள் இப்பண்பாட்டுப் பின்னணியிலேயே தோன்றின. தற்கால ஆய்வுகள் மூலம் மேற்கூறிய பெருங்கற்பண்பாட்டு நிலையே ஈழத்திலும் காணப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஆனைக் கோட்டையிலும், திருகோணமலை, அநுராதபுரம், புத்தளம் ஆகிய இடங்களிலும் கிடைத்த தொல்பொருள் ஆய்வுகள் மேற்கூறிய முடிவை உறுதி செய்துள்ளன. இப்பண்பாட்டுப் பின்னணியில் தோன்றிய ஆலயங்களுள் கோணேஸ்வரமும் முக்கியமான ஈஸ்வரன் ஆலயமாகக் கருதப்படுகின்றது.

இன்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்னர், இலங்கையில் எழுத்தாதாரங்கள் இடம்பெறத் தொடங்கின. அதற்கு முன்பிருந்தே சிவ வழிபாடு ஈழமெங்கும் காணப்பட்டுள்ளது.

அந்நியராகிய போர்த்துகேயரால் கி.பி.1624ஆம் ஆண்டு கோணேசர் ஆலயம் இடிக்கப்படுமுன், அங்கு மூன்று பெரும் ஆலயங்கள் காணப்பட்டுள்ளன. அவை, மாதுமை அம்பாளின் பிரமாண்டமான கோயில், ஷ்ரீ நாராயணர் கோயில், மலையுச்சியில் மாதுமை அம்பாள் சமேத கோணேசர் கோயில் என்பவை, மலையிலே காணப்பட்ட சமதரைகளில் அமைந்திருந்தன. மலையடிவாரத்திலிருந்து செல்லும்போது மலையின் வடக்கேயும், தெற்கேயும் தோன்றும் உயர்ந்த பாறைகள் படிப்படியாக உயர்ந்து செல்கின்றது. இப்பாறைகளுக்கு இடைப்பட்ட நிலப்பரப்பு பரந்த சமதரையாகக் காணப்பட்டது. இச்சமதரையின் தென்திசையிலேயே மாதுமை அம்பாளின் பிரமாண்டமான கோயில் கட்டப்பட்டிருந்தது. கற்பக்கிரகத்தில் அம்பாளுடைய சிலாவிக்கிரகமும், ஏனைய பரிவார மூர்த்திகளின் ஆலயங்களும் அமைந்திருந்தன.

இவ்வாலயத்திற்கு வடகிழக்கே பாபநாசதீர்த்தக்கேணி அமைந்திருந்தது. இந்தத் தீர்த்தம் நீள்சதுர வடிவில் அமைந்ததாய் கருங்கற்களாலான படித்துறைகளைக் கொண்டதாகக் கட்டப்பட்டிருந்தது. கடல் மட்டத்துக்கக்கீழ் ஆழமுடையதாகக் காணப்பட்டமையினால் வற்றாத நீருற்றாகக் காணப்பட்டது. கோயிலுக்குச் செல்லும் மக்கள் தீர்த்தமாட இதனைப் பயன்படுத்தியதால் விசேட காலங்களில் சுவாமி தீர்த்தமாட வேறொரு பாபநாசக்கிணறும் அமைக்கப்பட்டிருந்தது. இக்கேணிக்கு வடக்குப் பக்கமாகத் தீர்த்த மண்டபம் காணப்படுகிறது. சுவாமி தீர்த்தமாடிய பின் இம்மண்டபத்தில் எழுந்தருளுவதால், இதனை ஆஸ்தான மண்டபம் என்றழைப்பர். போத்துக்யேர் ஆலயத்தை அழித்தபொழுது தீர்த்தக்கேணி எவ்வாறோ தப்பிவிட்டது. மாதுமையம்பாள் சமேத கோணேசப் பெருமான் தீர்த்தோற்சவ காலத்தில் தீர்த்தமாட இங்கு எழுந்தருளுவது தற்காலத்திலும் நடைபெறுகின்றது.

மாதுமை அம்பாளின் ஆலயம் பரந்து விரிந்த சமதரையிலே காணப்பட்டமையினால், இதனைச் சுற்றித் தேரோடும் வீதியும் காணப்பட்டது. மடங்களும், மாடங்களும் அமைக்கப்பட்டு உள்நாட்டு, வெளிநாட்டுப்பக்தர்கள் பயன்படுத்தும் வகையில் பாபநாசத்தைச் சுற்றி ஐநது கிணறுகளும் கட்டப்பட்டிருந்தன. கோணேசப் பெருமானுடைய இரதோற்சவம் இங்கிருந்தே ஆரம்பமாகும். மலையுச்சயிலிரந்து எழுந்தருளி வந்த கோணேசப்பெருமான், மாதுமை அம்பாள் ஆலயதைச் சுற்றி வந்து, இரதத்தில் எழுந்தருளி மலையடிவாரத்தைத்தாண்டி, தற்காலத்தில் பட்டணமாக மாறியுள்ள பிரதேசங்களை வலம் வந்து, வடதிசைக்கரையோரமாகவுள்ள வீதிவழியாகக் கோணேஸ்வரத்தை அடைவர். மாதுமையம்பாள் எழுந்தருளிய கோயில், மிக உயர்ந்த கோபுரத்தைக் கொண்டதாகக் காணப்பட்டதோடு, கிழக்கு நோக்கிய வாயிலைக் கொண்டிருந்தது. தற்காலத்தில் கச்சேரியும், அரசாங்கப் பணிமனைகளும் உள்ள இடமே, போத்துக்கேயர் அழிக்குமுன் காணப்பட்ட மாதுமையம்பாள் ஆலயம் அமைந்திருந்த இடமாகும்.

மாதுமையம்பாள் ஆலயத்துக்கும், பாவநாச தீர்த்தம் இருந்த இடத்திற்கும் மத்தியில் காணப்படும் பாதையால் ஏறிச்செல்லும்பொழுது, மற்றுமொரு சமதரை காணப்பட்டது. இச்சமதரையில் குளக்கோட்டு மன்னனால் எழுப்பப்பட்ட ஷ்ரீ நாராயணர்கோயில் இருந்துள்ளது. இவ்வாலயம் கிழக்கு நோக்கியதாய் உயர்ந்த கோபுரத்தைக் கொண்டதாகக் காணப்பட்டுள்ளது. இக்கோயில் அமைந்திருந்த சமதரை மாதுமையம்பாள் ஆலயம் அமைந்திரந்த சமதரையை விடச்சிறியது. இச்சமதரையின் கிழக்கு, செங்குத்தான மலைப்பாறைகளைக் கொண்டதாகவும், வடக்கேயும் தெற்கேயும் சரிவான மலைச்சாரல்களை உடையதாகவும், மேற்கே முரட்டுப் பாறைகளைக் கொண்டதாகவும் காணப்பட்டது. கற்பக்கிரகத்தில் ஷ்ரீமகாலெட்சுமி சமேத நாராயணமூர்த்தியின் சிலா விக்கிரகம் பிரதிஷ்டைசெய்யப்பட்டிருந்தது.

காவல்துறையினரின் குடியிருப்பு, கிளிவ் கொட்டேஜ் என்பவற்றோடு இரண்டாவது உலகமாகயுத்த காலத்தில் பொருத்தப்பட்ட விமான எதிர்ப்புப் பீரங்கி அமைந்துள்ள நிலப்பகுதியே நாராயணர் ஆலயம் இருந்த இடமாகும். இவ்வாலயம் இருந்த இடத்திற்குத் தெற்குப் பக்கமாக, பிரித்தானிய ஆட்சியாளர் நிலத்தை அகழ்ந்து நீர்த்தொட்டியொன்றைக் கட்டினார்கள். தற்போதும் இத்தொட்டியுள்ளது. அப்போது ஐந்து அடிஉயரமான ஷ்ரீ நாராயணமூர்த்தி, மகாலெட்சுமி ஆகிய விக்கிரகங்கள் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இத்திருவுருவங்கள் சீர்செய்யப்பட்டு கோணேசர் கோயிலில் வைக்கப்பட்டது. இவ்வாலயம் அமைந்திருந்த சமதரையின் மேற்கே காணப்படும் முரட்டுப்பாறைத் தொடரின் அந்ததத்தில், 1979ஆம் ஆண்டு இலங்கை அரசு இலங்கைத் தரைப்படை வீரர்களின் வழிபாட்டுக்கென ஒரு விகாரையை அமைத்து, புத்தர் சிலையை நிறுவி, கோகர்ணவிகாரை இங்குதான் இருந்ததெனப் பிரச்சாரம் செய்தது. ஆனால் இலங்கை அரசின் புதைபொருளாராய்ச்சித் துறையின் தலைவராயிருந்த திரு. பரணவிதான அவர்கள், தமது ஆராய்ச்சியின்போது வேறொரிடத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்க ஏட்டில், கோகர்ணவிகாரை வேறொர் இடத்தில் இருந்தமைப்பற்றிய உண்மைக் குறிப்புகளை வெளியிட்டபோது அதனை இலங்கை அரசு மறைத்துவிட்டது.

கி.பி. 3 ஆம் நூற்றாண்டில் ஆட்சிசெய்த மகாசேனன், கோணேசர் மலையிலிருந்த ஆலயத்தை அழித்து, அவ்விடத்தில் விகாரையொன்றை நிறுவினான். இதனை மகாவம்சம் "திருகோணமலையிலிருந்த பிராமணக்கடவுளுக்கான கோயிலொன்றை மகாசேனன் இடித்தான்" எனக் குறிப்பிட்டுள்ளது. மகாசேனனால் அழிக்கப்பட்ட ஆலயத்தைச் சைவசமயிகள் மீண்டும் இவ்விடத்தில் நிறுவினர் என்பதை வரலாற்றுக்குறிப்பகுளிற் காணலாம். வரலாறு? இலக்கியம், தொல்பொருள் ஆய்வுகள், மேலைநாட்டார் குறிப்புக்கள் யாவும் கி.முற்பட்ட காலத்திலேயே கோணேஸ்வரம் சுவாமிமலையின் இந்துக்கோயில் இருந்ததென்பதை நீரூபிக்கும்பொழுது, மகாயவை தீவிரவாதியான மகாசேனன், இந்து ஆலயத்தை அழித்துக் கட்டிய விகாரையின் எச்சங்கள் சிலவற்றைக்கொண்டு இவ்விடத்தில் இந்துக்கோயில் இருக்கவில்லை என்று நினைப்பதும் தவறான சிந்தனையாகும்.

மூன்றாவது ஆலயமான மாதுமை அம்பாள் சமேம கோணசப்பெருமாள் எழுந்தருளிய கோயிலே பிரதானமான கோயிலாகக் கருதப்பட்டுள்ளது. ஸ்ரீ நாராயணமூர்த்தி ஆலயமிகுந்த இடத்திலிருந்து வடக்குப் பக்கமாக ஒரு பாதை சென்றது. இப்பாதையின் கிழக்குப் பக்கம் உயர்ந்த சரிவும், மேற்குப் பக்கத் தாழ்ந்த சரிவும் காணப்பட்டது. ஆரம்பகாலத்தில் உச்சியிலிருந்து கோயிலுக்குச் செல்லக் கரடுமுரடான கற்பாதையே காணப்பட்டுள்ளது. மலையின் இயற்கை அமைவிற்கேரப் பாதைகள் உயர்ந்தும், தாழ்ந்தும் காணப்பட்டன. இதனால் இடைக்கிடை கருங்கற்படிகள் அமைக்கப்பட்டிருந்தன. இப்பாலை இராவணன் வெட்டை அடையும்போது, குறுகிய ஆழமான பள்ளத்தைக் கடந்துசெல்ல வேண்டியிருந்தது. குளக்கோட்டு மன்னன் இப்பள்ளத்தை நிரப்பும் திருப்பணியைச் செய்துள்ளான் இராவணன் வெட்டைக் கடந்து சென்றால் மலையுச்சியில் ஒரு சமதரை காணப்படும். இச்சமதரையிலேயே மாதுமையம்பான் சமேத கோணேசர் ஆலயம் காணப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தின் கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த விலைமதிப்பற்ற இரத்தினமணிகளின் பிரகாசம், தூரக் கடனி செல்லும் கடற்பயணிகளுக்கும், மாலுமிகளுக்கும் கலங்கரை விளக்கமாகப் பயன்பட்டுள்ளது. கோணேசமலையில் கட்டப்பட்டிருந்த மூன்று கோயில்களின் கோபுரங்களும் உயர்ந்து காணப்பட்டமையால், தூரக்கடலிற் பயணம் செய்வோரும் கோபுரங்களைத் தெளிவாகக் காணக்கூடியதாய் இருந்துள்ளது. தெட்சணகைலாசம் எனப் போற்றப்பட்ட திருக்கோணேஸ்வரத்தில் மாதுமை அம்பாள் சமேத கோணேசப்பெருமானும், கருவறையில் சிவலிங்கத் திருமேனியும் (பாணலிங்கம்) பிரதி
ஷ்டை செய்யப்பட்டிருந்தது.

போத்துக்கேயரால் இடித்தழிக்கப்படுவதற்கு முன்னிருந்த மூன்று ஆலயங்களின் தொன்மைத்தோற்றம், சிறப்பு என்பன இவ்வாறு காணப்பட்டுள்ளன. பின்னர் காலத்திற்குக்காலம் ஏற்பட்ட அரசியற்காரணங்களால், ஆலயத்தின் நிலப்பகுதியில் அரசகட்டிடங்களும், காவற்படைகளும் நிலைகொண்டுவிட்டன. தற்போது இராவணன்வெட்டிற்கு அண்மையில், உச்சியின் சமதரையிலேயே கோணேசர் ஆலயம் அமைந்துள்ளது.

இக்காலத்தின் தலபுராணமெனக் கருதப்படுவது தெட்சணகயிலாய புராணம். இதன் மூலம் இத்தலத்தின் தோற்றம், ஆதிவரலாறு, சிறப்பு போன்ற பல்வேறு விடயங்களை அறியக்கூடியதாயுள்ளது. இவ்வாலயத்தின் தொன்மையை அறிய உதவுவது கோணேசர் கல்வெட்டு என்ற நூல். இது கோணேசர் சாசனம் எனவும் அழைக்கப்படும். கோணேசர் கோட்டம், கோபுரம், மதில், மணிமண்டபம், பாபநாசத் தீர்த்தம் ஆகியன அமைந்த வரலாற்றுச் செய்திகள் இந்நூலிலும் கூறப்பட்டுள்ளது. கோணேசர்கல்வெட்டு என்ற நூலினைக் கோணேசர் ஆலயச் சட்டப்புத்தகமெனப் போற்றுவர்.

கோணேசர் ஆலயத்தின் நித்திய, நைமித்திய கருமங்கள் குறைவின்றி நடைபெறக் குளக்கோட்டுமன்னன் பல திட்டங்களை வகுத்துள்ளான். இவை எழுத்தப்பட்ட குறிப்புக்கள் யாவும் போத்துக்கேயரால் அழிக்கப்பட்டது.

இவ்வாறான சரித்திரப் பெருமையும், நாயன்மாரால் விதந்தோதப்பட்டதுமான இத்திருத்தலத்தை இலங்கையைக் கைப்பற்றிய அன்னியர்கள் ஒருவர்பின்னொருவராகச் சிதைத்தமிழத்தனர். இலங்கையைப் போத்துக்கேயர் கி.பி. 1505ஆம் ஆண்டு கைப்பற்றினர். திருகோணமலையின் இயற்கை அமைப்பும், கடல்வழிப் பாதைகளுக்கான மையமாகக் காணப்பட்டமையும் இப்பிரதேசத்தில் கவனம்கொள்ளச் செய்தது. மதவெறியும், கொள்ளையிடும் நோக்கமும் இவர்களிடம் காணப்பட்டாலும், திருகோணமலையின் கேந்திர முக்கியத்துவம் இவர்களை ஈர்த்தது என்று கூறுவதே பொருத்தமுடையது.

கி.பி. 1624 - 1627 வரை போத்துக்கேய தளபதியாயிருந்த கொன்ஸ்ரான்ரைன் டிஸா என்பவன் கோணேசர்மலையிலிருந்து கோயில்களை இடித்துத் தரைமட்டமாக்கினான். இவ்வாறு இடிக்கப்பட்ட கற்களைக் கொண்டே கோட்டையைக் கட்டினான். இவன் இக்கோயில்களை இடிக்குமுன் யாவற்றையும் படமாக வரைவித்துள்ளான். இப்படங்களிலொன்று போத்துக்கலிலுள்ள அஜூடா நூலகத்தில் கண்டெடுக்கப்பட்டது. கோயில் கற்களைக் கொண்டு கோட்டையைக் கட்டும்பொழுது, பழைய கல்வெட்டொன்றும் கோட்டை வாசலில் வைத்துக் கட்டப்பட்டுவிட்டது. அதனைப் படமெடுத்துப் போத்துக்கலுக்கு அனுப்பியுள்ளான். ஏனெனில் அக்கல்வெட்டில் 'கோணேசர் ஆலயம் பறங்கிகளால் இடித்தழிக்கப்படும்' என்ற தீர்க்கதரிசனம் காணப்படுகின்றது. இதனால் அனுப்பப்பட்ட குறிப்புக்களின் மூலம் கோணேசர் ஆலயத்தின் ஆரம்பகாலத் தோற்றம், நில அமைவு, பரப்பளவு போன்ற விடயங்களை அறியக்கூடியதாயுள்ளது.

பிரடெரிக் கோட்டை என்றழைக்கப்படும் கோட்டைவாயிலில் வைத்துக் கட்டப்பட்ட கல்லிலே காணப்படும் சாசனம் இவ்வாறு காணப்படுகின்றது.


(மு) ன னெ கு ள
கா ட ட ன மூ ட டு
(தி) ரு ப ப ணி யை
ன னெ ப ற ங கி
(க) க வெ ம ன னா
ன பொ ண னா
(ச) ன யி ய ற (று)
(செ) த வை த
(ண) ணா
க ள



இக்கல்லெழுத்தின் வாசகம் முதன் முதலில் வின்சுலொ அகராதியில் வெளிவந்தது.

இதனை,


முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப்
பிள்ளை மறங்கி பிடிப்பனே - மன்னா கேள்
பூனைக்கண் செங்கண் புகைக் கண்ணன் ஆண்டபின்
மானே வடுகாய் வரும்

எனக் குறிப்பிட்டுள்ளார். திருகோணமலை கிரதமிய வழக்கிலும் இவ்வாறே கூறப்பட்டு வருகின்றது.

திருகோணமலையிலிருந்து போத்துக்கேயர் கொண்டு சென்ற சுவடிகளில் மேற்குறித்த வாசகங்களைக் கண்டதாகக் குவெரோஸ் பாதிரியார் தனது சரித்திரநூலில் குறிப்பிட்டுள்ளாரென, போத்துக்கல்நாட்டில் கேக் என்ற நகரிலிருந்து, அரசசாசனவியலாளர் ஈ.பி.றெய்மார்ஸ் என்பவர் குறிப்பிட்டுள்ளார். குவெரோஸ் பாதிரியார் குறிப்பிடும் கடைசி இருவரிகளும் சற்று மாற்றமுடையனவாகக் காணப்படுகின்றன. இவ்வரிகள் பின்கண்டவாறு காணப்பட்டன.


முன்னே குளக்கோட்டன் மூட்டுத் திருப்பணியை
பின்னே பறங்கி பிரிக்கவே - மன்னவபின்
பொண்ணாத தனையியற்ற வழித்தே வைத்து
எண்ணாரே பின்னர சர்கள்'

இக்கற்காசனத்தினை முதலியார் இராசநாயகம், கொட்றிங்ரன் போன்றோரும், வேறும் பலரும் சில திருத்தங்களுடன் வெளியிட்டுள்ளனர். எது எவ்வாறாயினும் இக்கற்சாசனத்தில், குளக்கோட்டன் என்ற மன்னனால் திருப்பணி செய்யப்பட்ட ஆலயம், பின்னர் பறங்கியரால் அழிக்கப்படும் என்ற குறிப்புக் காணப்பட்டுள்ளது. கோணேசர்கல்வெட்டுக் கூறிச்செல்லும் செய்திகளைக் கண்ணகி வழக்குரை, யாழ்ப்பாண வைபவமாலை போன்ற நூல்களிலும் காணக்கூடியதாயுள்ளது.

கண்ணகி வழக்குரையில்,'-மறையோர்கள் கோணைநாதர்
திருப்பூசை வெகுகாலஞ் செய்யுமந்நாள்
மாந்தளிர்போல் மேனியுடைப் பறங்கி வந்து
மஉறாகோணைப் பதியழிக்க வருமந்நாளில்...'


என்றும்,

யாழ்ப்பாண வைபவமாலையில்,

'....இவ்விராச்சியம் (ஈழம்) முதன்முதல் பறங்கிக்காரர் கையில் அகப்படும். அவர்கள் ஆலயங்களையெல்லாம் இடித்தழிப்பர்...' என்று கூறப்பட்டுள்ளது. பின்னர் நடக்கப் போவதை முன்னே கூறிவைத்த இவர்களது தீர்க்கதரிசனம் வியப்புக்குரியது.

போத்துக்கேயரால் திருக்கோணேஸ்வரம் சீரழிக்கப்பட்டாலும், பக்தர்கள் மனந்தளராது குன்றின் அடிவாரத்தில், குகைவாயில்போல் காணப்படும் இடத்தைக் குறித்துத் தங்கள் வணக்கத்தைச் செலுத்தி வந்தார்கள். ஆண்டுக்கொருமுறை கடலுக்குள் நீண்டிருக்கும் பாறையில் ஒன்றுகூடி, வணங்கிச் சென்றுள்ளனர்.

கி.பி. 1639 இல் ஒல்லாந்தர் என்ற டச்சுக்காரர்கள் திருகோணமலையைக் கைப்பற்றினார்கள். இவர்கள் கோணேசர் ஆலயத்திலும், அதன் சுற்றாடலிலும் பெரிதும் அக்கறை காட்டினார்கள். போத்துக்கேயரால் அழிக்கப்பட்டு எஞ்சியிருந்த தூண்களை இடித்துத் தங்களுடைய கோட்டையைக் கட்டினார்கள். இங்குள்ள இடங்களுக்கு டச்சுப்பெயர்களையும் சூட்டினார்கள். இவர்கள் காலத்திலும் ஆலயத்திற்குச் செல்வதற்கும், வணங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் பக்தர்கள் ஒளித்திருந்து தங்கள் வணக்கத்தைச் செலுத்தி வந்துள்ளார்கள்.

கி.பி. 1795 ஆம் ஆண்டு பிரித்தானியர், திருகோணமலைக் கோட்டையைக் கைப்பற்றினார்கள். இவர்கள் ஆட்சியில் சைவமக்கள் ஆறுதல் பெற்றவர்களாகக் காணப்பட்டார்கள். எல்லோருக்கும் வணக்க உரிமை இருக்க வேண்டும் என்ற பரந்த கொள்கையுடையவர்களாக ஆங்கிலேயர் காணப்பட்டனர். அழிபாடுகளைக்கொண்ட கோயிலுக்கு மக்கள் சென்று தரிசிப்பதை, ஆங்கிலேயர் தடுக்காது மக்கள் மன உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்துள்ளார்கள். கி.பி 1803 ஆம் ஆண்டு, கோயில் இருந்ததாகக் கருதப்படும் சுவாமிமலையில் இந்துக்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இரண்டாவது மகாயுத்தத்தின்போது திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ள பிரடெரிக் கோட்டை, பாதுகாப்பு வலயமாகக் காணப்பட்டதால், வாரத்தில் இரண்டு நாட்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆங்கிலேயர், கோணேஸ்வரம் அமைந்துள்ள பகுதியின் இயற்கை வளங்களையும் பாதுகாத்தனர். கோட்டை வனத்துள் வாழும் மான்கள் பசியாலும், நாகத்தாலும் வாடாது உணவளித்தனர். தண்ணீர்த்தொட்டிகளை அமைந்து அவற்றைக் காப்பாற்றினர்.

கி.பி. 1942 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆந் திகதி, யப்பானியர் குண்டுவீசித் திருகோணமலையைத் தாக்கினர். சீனன்குடாவில் காணப்பட்ட, எண்ணெய்த் தாங்கிகள் தீப்பிடித்து எரிந்தன. ஆனால் திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ள, கோட்டைப்பகுதியில் வீசப்பட்ட குண்டுகள் எதுவும் கோயிலைப் பாதிக்காது கடலுக்குள் விழுந்தன. ஆங்கிலேயர் ஆட்சியில், கோணேஸ்வரம் இழந்த பெருமையையை மீளப்பெற வித்திடப்பட்டது.

இவ்வாறான சூழ்நிலையில், 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆந் திகதி, இலங்கை சுதந்திரம் பெற்றது. போத்துக்கேயர் ஆலயத்தை அழித்தபோது ஆலயத்திலிருந்த விக்கிரகங்களை நாலாபக்கமும் எடுத்துச் சென்று புதைத்திருந்தார்கள். சிதாகாசவெளியை தமது உள்ளத் திருத்திப் பிரார்த்தனை செய்த, மக்களின் பிரார்த்தனை வீண்போகவில்லை. 1950 ஆம் ஆண்டு வரலாற்று நியதிப்படி, இறையருளால் பிள்ளையார், சிவன், பார்வதி, திருவெங்கவடிவ அம்பாள், அ
ஷ்சரதேவர், சந்திரசேகரர் முதலிய திருவுருவங்களோடு, அன்னவாகனம் ஆகியனவும் பூமியிலிருந்து கிணறு வெட்டும்பொழுது வெளிப்பட்டது. சைவப்பெருமக்கள் ஒன்றுகூடி, முன்னர் கோயில் இருந்த இடத்தில் கோயிலைக் கட்டி இத்திருவுருவங்களைப் பிரதிஷ்டை செய்தனர். இதன் பின்னர் 1963 ஆம் ஆண்டு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. 1963 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்றாந் திகதி ஆவர்த்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தேறியது. தெரவு செய்யப்பட்ட ஆலய பரிபாலனசபைத் தலைவராகக் காலஞ்சென்ற டாக்டர் சு.சித்திரவேல் அவர்கள் தலைமை தாங்கினர். 1971 ஆம் ஆண்டு இவர் சிவபதம் அடைந்த பின்னர் இப்பொறுப்பை ஏற்றவர் திரு.மு.கோணாமலை செல்வராசா அவர்கள்.

குளக்கோட்டு மன்னன் காலத்திலிருந்து தெப்பத்திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்று வந்தது. 1973 ஆம் ஆண்டு முதல் மீண்டும் இத்திருவிழா நடைபெறுகின்றது. மக்கள் ஆதரவினால் ஆலயப் புனருத்தாரணப் பணிகள் நிறைவேறி, 1981 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆந் திகதி ஜீர்ணோத்தாரண கும்பாபி
ஷேகம் நடைபெற்றது. மீண்டும் ஆலயத்தில் பல புனருத்தாரணப் பணிகள் செய்யப்பட்டன. ஆலய பரிபாலனசபையுடன், இந்து கலாச்சார அமைச்சு, வடகிழக்கு மாகாண சபை ஆகியன இணைந்து இப்பணியில் ஈடுபட்டு 1993 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆந் திகதி மிகச் சிறப்பான முறையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவற்றின் மூலம் திருவுருவங்கள் அதீத சக்தியைப் பெறுவதோடு நாட்டிற்கும், மக்களுக்கும் அருளை வழங்கும் என்பது ஆன்றோர் கருத்தாகக் காணப்படுகின்றது.

திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் அவர்கள் கூறியுள்ள கருத்து உற்று நோக்கத்தக்கது. 'சில வேளைகளில் கோயில்களில் உள்ள சிலைகள் வெறும் சின்னங்களாகக் கருதப்படுகின்றன. இது ஒரு பூரணமான கருத்தல்ல. ஒவ்வொரு சிலையும் ஒரு பிரத்தியேகமான அபி
ஷேகத்தினால், தெய்வீகத்தன்மை பெறுகின்றது' என்பதற்கிணங்கப் பல தடவைகள் கும்பாபிஷேகம் கண்ட இத்திருக்கோயிலின் அருளுக்கு இணையேது?

2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆந் திகதி, திருக்கோணேஸ்வர வரலாற்றில் புதிய திருப்பம்மிக்க நாளாகக் காண்ப்படுகின்றது. கி.பி 1624 ஆம் ஆண்டு போத்துக்கேயரால் ஆலயத்தின் தேர்கள் அழிக்கப்பட்டபின் இன்றுவரை பழம்பெருமைமிக்க தேரையும், தேர்த் திருவழாவையும் மக்கள் கண்டுகளிக்க முடியவில்லை. ஏறக்குறைய 379 ஆண்டுகளின் பின் மீண்டும் அழகுமிக்க புதிய தேரிலே மாதுமையம்பாள் சமேத கோணேசப்பெருமான் எழுந்தருளி மக்களை ஆட்கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

தற்காலத்தில் இங்கு செல்வதற்கான செப்பனிடப்பட்ட தார்வீதி காணப்படுகின்றது. மலையுச்சியிலுள்ள சமதரைக்கு ஏறுவதற்கு வசதியாகப் படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ள பிரடெரிக்கோட்டை, அதியுயர் பாதுகாப்புவலயமாகக் காணப்படுவதால், ஆலயத்திற்கு அண்மையிலும் பாதுகாப்புப்படைகள் காவல் செய்கின்றனர். கடந்த காலங்களில் நாட்டில் காணப்பட்ட அரசியல் சூழ்நிலை காரணமாக, இப்பகுதிக்குள் செல்வதற்கு விசேட அனுமதிபெற்றே செல்ல வேண்டியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதி இங்கு நித்திய நைமித்திய வழிபாடுகள் சிறப்புற நடைபெறவும், மக்கள் கோணேசப்பெருமானைத் தடையின்றிச் சென்று தரிசிக்கவும் வகை செய்துள்ளது.

திருக்கோணேஸ்வரம் பாடல்பெற்ற தலமாகக் காணப்பட்டு, ஈழம், இந்தியா, மேலை நாட்டார் எனப் பலதிறப்பட்டோராலும் புகழப்பட்டுள்ளது. கீழைத்தேசத்திலுள்ள கிறிஸ்தவரல்லாத மக்களின் உரோமாபுரி என்று குவைரோஸ் அவர்களால் பாராட்டப்பெற்றது. பிரமாண்டத்தின் இடைநாடியென சாந்தோக்கிய உபநிடதம் உரைக்கின்றது. அனுக்கிரகத்தலம் எனத் திருவாதவூரடிகளும், பல்வளமும் நிறைபதியெனக் கந்தபுராணமும் போற்றியுள்ளன. எல்லாரும் எல்லாச் செல்வமும் பெற்று வாழ்ந்த இணையிலாப் பதியென இராமாயணம் இயம்பும். இவ்வாறான புகழ்பெற்ற திருத்தலம் திருக்கோணேஸ்வரம்.

இதன் தொன்மையை அறிய எண்ணி, 1956 ஆம் ஆண்டு திருக்கோணேஸ்வரக் கடலினடியில் ஆராய்ச்சிசெய்த ஆர்தர் சி. கிளார்க், மைக் வில்சன், ரொட்னி ஜோங்கல்ஸ் என்பவர்களின் ஆராய்ச்சிக் குறிப்புகளையும், புகைப்படப்பிரதிகளையும் ஆய்வு செய்தோர், மிகப்பழமை வாய்ந்த ஆலயம் கடலின் அடியில் ஆழ்ந்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர். பிரமாண்டமான மணிகளும், விளக்குகளும், தூண்களும், கோயிற் தளங்களும் கடலினடியில் இருப்பதாக ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளது.

தமிழர்களின் வரலாற்றையம், திருக்கோணேஸ்வரத்தின் தொன்மையையும் மறைக்கவும், மாற்றவும் முயலும் சக்திகளால், கடலினடியில் செய்யப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுகளைக் கொண்ட ஆவணங்கள் மறைக்கப்பட்டு, ஆராய்ச்சிகள் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இந்த ஆவணங்கள் மீட்கப்பட்டு ஆய்வுகள் தொடரப்பட்டால், நாம் கணித்துள்ள காலத்தை விட தொன்மை மிக்கதொரு காலத்தில் தமிழர்களும், அவர்கள் தழுவிய சைவமும் ஈழண்ணில் இருந்துள்ளது என்ற உண்மை புலப்படும்.

தினமும் விழாக்கோலம் பூண்டு, சுதந்திரமாக மக்கள் சென்று வணங்கிய திருக்கோணேஸ்வரத்தின் இன்றைய நிலை என்ன? பாதுகாப்புப் பிரதேசமாகவுள்ள பிரடெரிக்கோட்டையுள் எழுந்தருளியிருக்கும் கோணேசப்பெருமானின் இன்றைய நிலை கல்மனங் கொண்டோரையும் கலங்கச் செய்யும். மலையடிவாரத்திலிருந்து மேலே ஏறிச்செல்லும்பொழுது, வீசுகின்ற காற்றிலே மலர் மணமும், மூலிகைகளின் வாசமும் சேர்ந்து, புத்துணர்வைக் கொடுக்கும். இலந்தை, பாலை, நாவல் எனப் பல்வகைப்பழங்கள் எங்கும் விழுந்து பரவிக்காணப்படும். இம்மரங்கள் தறிக்கப்பட்டுப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மானும், மயிலும், மந்தியும் அங்குமிங்கும் சுதந்திரமாகத் திரியும். இவையெல்லாம் எங்கே ஓடிச்சென்றனவோ தெரியவில்லை. மலை உச்சியிலே சில மந்திகள் காணப்படுகின்றன.

இறைவனைத் தரிசிக்க அதிகாரிகளின் பரிந்துரையின் பேரிலேயே கோட்டைக்குள்ளே செல்ல முடியும். மலையடிவாரத்தின் கடற்கரைப்பகுதி அன்று வெண்மணற்பரப்பாகக் காணப்பட்டது. இன்று அப்பகுதி முள்ளடர்ந்த பற்றைபோல மாறியிருக்கின்றது. மலையடிவாரத்திலுள்ள பாதுகாப்புப் படையினரிடம் கடவுச்சீட்டு, அடையாள அட்டை இவற்றைக் கொடுத்து அவர்கள் தரும் பற்றுச் சீட்டுடனேயே கோட்டைக்குள் சென்று, கோணேசப் பெருமானைத் தரிசிக்கலாம். திருக்கோணேஸ்வரத்தில், வெளிநாடுகளிலிருந்து செல்வோரைத் தவிர, உள்ளூர் மக்களைக் காண்பது அரிதாகவே காணப்படுகின்றது. தினமும் விழாக்கோலம் பூண்டிருந்த புண்ணியபூமியின் அண்மைக்கால நிலைமை இவ்வாறுதான் காணப்படுகின்றது. இந்நிலை மாறி, தொன்மையும், வரலாற்றுப்பெருமையும் மிக்க கோணேசர் ஆலயத்தின் பெருமை மீண்டும் நிலைநிறுத்தப்படுவதோடு இவ்வாலயத்தின் சிறப்புகளை அனைவரும் அறிந்து போற்றிப் பரவுதல் அவசியமாகும்.

திங்கள், 23 டிசம்பர், 2013

சீதா அம்மன் கோவில், சீதா எலியா, நுவரா எலியா, ஸ்ரீலங்கா

சீதா அம்மன் கோவில், சீதா எலியா, நுவரா எலியா, ஸ்ரீலங்கா

சீதா தேவிக்கு என உலகின் ஒரே ஒரு கோவில் சீதா எலியா, நுவரா எலியா, ஸ்ரீலங்காவில்  அமைந்துள்ளது. இங்கேயும் கூட மற்ற பெண் தெய்வங்களுக்கு உள்ளது போல  தனியாக சீதாவுக்கு சன்னதி இல்லை. ராமர் லக்ஷ்மனனுடன் தான் இருக்கிறார்.






இலங்கையின் இந்த பகுதியில் தான் ராவணன் சீதையை கடத்தி வந்து சிறை வைத்திருந்த அசோக வனம் என்பதாக ஒரு நம்பிக்கையில் சமீபத்தில் அந்தக் கோவில் நமது தமிழக கோவில்கள் வடிவில் புனரமைக்கப்பட்டுள்ளது. (திருமதி சந்திரிகா குமாரதுங்கே ஆட்சியில்) அழகான ரம்யமான சூழ்நிலையில்  கோவில் காணக் கண் கோடி வேண்டும். கோவில் என்னமோ சிறியதாகத் தான் இருக்கிறது. ஆனால் சிலுசிலுவென குளிர்ந்த காற்று வீச, அருகில் அழகான ஒரு தெளிவான மலை ஓடை. அழகுதான். சுற்றிலும் அடர்ந்த டி எஸ்டேட். அருமையான இடத்தில் தான் சீதையை ராவணன் சிறை வைத்திருக்கிறான்.

கோவிலை சுற்றி பகுதியை புனித ஸ்தலமாகவும் பக்தர்கள் வந்து தரிசிக்கும் விதமாகவும் மாற்றிட ரொம்ப வருடங்களாக இலங்கை அரசு முயற்சியில் உள்ளதாக கேள்விபட்டேன். அதற்கு புத்த பிட்சுக்கள் எதிர்ப்பும் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் எல்லோருக்கும் இதை சரித்திர புகழ் வாய்ந்த இடம் என்பதில் எந்த மறுப்பும் இல்லை.

ஒரு காலத்தில் இந்தக் கோவிலுக்கருகில் கிடைத்த மூன்று சிலைகளில் ஒன்று சீதை எனவும் அதை பல்லாண்டு காலங்களாக அந்தப் பகுதி மக்கள் இராமாயண சீதையாக வணங்கி வந்திருக்கிறார்கள் என்றும் அதனால் சீதைக்கு ஒரு கோவில் எழுப்பட்டு அதில் புதிதாக ராமர், லக்ஷ்மன், சீதையுடன் கூடிய ஒரு சிலை தெய்வங்களாக படைக்கப் பட்டது என்றும் அறிகிறேன்.

அருகிலேயே ஹனுமானுக்கும் சன்னதி உள்ளது. ஆனால் சிறிது தூரத்திற்கு முன் அனுமானுக்கென்றே ஒரு கோவில் அமைக்கப் பட்டுள்ளது. அது சின்மயா குழுவினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. அங்குதான் ஹனுமான் சீதையை தேடி வரும் போது ஓய்வு எடுத்ததாக ஐதீகம். 

ராமாயண இலங்கை இதுவல்ல என்றும் அது விந்திய மலைக்கு இப்பால் உள்ள ஒரு இடம் என்பதிலும்  தற்போது பல கருத்து வேறுபாடுகள் உள்ளன. ராமாயன நிகழ்ச்சிகள் அங்கே நடைபெற்றதற்கு அவ்வளவு உறுதியான அடையாளங்கள் இலங்கையில் இல்லாததே இதற்கு காரணம். பெரும் காடும் மலைகளும் சூழ்ந்த  அந்த இலங்கையில்  கோட்டைகளும்  மதில்களும் மறைந்திருக்கலாம் அல்லது காலப் போக்கில் அழிந்து  போயிருக்கலாம். 
ஏற்கனவே குளு குளு சுற்றுலாத் தளமான நுவரா எலியாவில் நமது புனித ஸ்தலமும் உள்ளதில் நமக்கு பெருமைதான். ஹிந்துக்கள் மட்டுமின்றி பல வெளிநாட்டினரும் வந்து சாமி கும்பிட்டு படமெடுத்து செல்கிறார்கள்.

நீங்களும் ஒரு முறை சென்று வாருங்களேன்.








திங்கள், 16 டிசம்பர், 2013

ஊர்க்குருவி: கர்ணன்

ஊர்க்குருவி: கர்ணன்: கர்ணன்  மகாபாரதத்தின் முக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்று கர்ணன். கர்ணன் பெரும் வீரன் மட்டுமல்லாமல் ஈகை குணம் கொண்டவனும் கூட. மகாபாரதத்...

கர்ணன்


கர்ணன் 

மகாபாரதத்தின் முக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்று கர்ணன்.
கர்ணன் பெரும் வீரன் மட்டுமல்லாமல் ஈகை குணம் கொண்டவனும் கூட.
மகாபாரதத்தில் வேறு எந்த பாத்திரமும் இவ்வளவு ஈகை குணத்துடன் படைக்கப் படவில்லை.



குந்தி, விருஷ்ணியை ஆண்ட குந்திபோஜ மன்னனுக்கு பிறந்தவள்.

கர்ணன், குந்திக்கும் சூரியக் கடவுளுக்கும் பிறந்தவன். குந்தி இளமையும் அழகும் பொங்கும் வயதில் துர்வாச முனிவருக்கு தொண்டு செய்யும் வாய்ப்பை பெற்றார். அவருக்கு பணிவிடை செய்வதே தனது கடமை என்பதாக மனதில் கொண்டு அவரது அனுக்கிரகம் கிடைக்கப் பெற்றார்.

குந்தியின் சேவையில் மகிழ்ந்து போன முனிவர் துர்வாசர், குந்திக்கு ஒரு வில்லங்கமான ஆனால் பின்னர் மிகவும் உதவப் போகும் ஒரு ஒரு மந்திரத்தை உபதேசித்தார். இதை அவர் பிரயோகித்தால் அவர் நினைத்து ஜெபிக்கும் இறைவன் நேரில் தோன்றி குந்திக்கு தனது அருள் சக்தியால் ஒரு ஆண் மகனை கொடுப்பார் என்று கூறி சென்றார்.

துர்வாச முனிவர் தனது ஞான திருஷ்டியால் பின்னர் இந்தப் பெண் மணக்கப் போகும் பாண்டு மன்னன் குழந்தை செல்வத்தை வழங்க முடியாமல் போகும் என்பது தெரிந்துகொண்டு இந்த வரத்தை கொடுக்கிறார்.

விபரம் அறியாத அந்த இளம் குந்தி விளையாட்டாக சூரிய பகவானை நினைத்து அந்த மந்திரத்தை சொல்ல சூரியன் அவர் முன்னே தோன்றினான்.
பயந்து போன குந்தி சூரியனிடம் தான் செய்த தவற்றை கூறி திரும்பி போய்விட சொல்லி கெஞ்சினாள்.
ஆனால், அந்த மாபெறும் மந்திரத்தை நீ உச்சரித்து விட்டதால் அதை மீறி தான் எதுவும் செய்ய முடியாது எனவும் எனவே ஒரு ஆண் குழந்தையை கொடுத்துவிட்டே தன்னால் திரும்பி செல்ல முடியும் என்றார்.
ஆனாலும், குழந்தை வந்த பின்னும் குந்தி கன்னியாகவே இருப்பாள் என்றும் ஊரார் பேச்சுக்கு ஆளாகமாட்டாள் என்றும் உறுதியளித்து சென்றார்.

இந்நிலையில் குந்தி கவசமும், குண்டலமும் அணிந்த ஒரு அழகான ஆண்  குழந்தையை பெற்றெடுத்தாள்.
சூரியன் அளித்த வாக்குறுதியையும் மீறி தனக்கு அவப்பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக, அக்குழந்தையை இழக்க முற்ப்பட்டாள் குந்தி.
குழந்தையை ஒரு அழகான கூடையில் வைத்து அருகில் பல விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களை வைத்து கங்கை ஆற்றில் விட்டாள்.

அதிரதன் எனும் கௌரவர்களின் தேரோட்டியும் அவனது மனைவி ராதாவும்  இந்தக் குழந்தையை கங்கையில் கண்டெடுத்து வசுசேனா எனப் பெயரிட்டு வளர்த்து வரலானான். கர்ணனுக்கு இதனால் சாரதிபுத்திரன் என்ற ஒரு பெயரும் ராதேயா என்ற ஒரு பெயரும் உண்டு.

பின்னர் குந்திக்கு பாண்டு மன்னருடன் திருமணம் நடந்தது.
பாண்டு மன்னன் ஹஸ்தினாபுரம் எனும் நாட்டை ஆண்டுவந்தவன். விசித்ரவீர்யாவின் மனைவிகளில் ஒருவரான அம்பாலிக்காவுக்கு பிறந்தவன்.
அம்பாலிக்காவின் அக்காவான அம்பிகாவுக்கு பிறந்தவன் துரிதிராஷ்தரன்.

ஒரு முறை பாண்டு மன்னன் குந்தியுடனும், மற்றொரு மனைவியான மாத்ரி உடனும் வேட்டையாட காட்டுக்குள் சென்ற போது ஓய்வுக்காக ரிஷி கின்தமா குடிலில் தங்கியிருந்தான். அப்போது ரிஷியும் அவரது பத்தினியும் மான் உருக் கொண்டு தோட்டத்தில் இணைந்திருந்த வேளையில் மன்னன் தவறுதலாக உண்மையான மான் என  நினைத்து அம்பெய்தி இரு மான்களையும் கொன்றான்.
அதனால் ரிஷி அவனுக்கு இனி அவன் யாருடன் இணைநதாலும் உயிர் போகும் என்று சாபமிட்டு இறந்தார்.

இதனால் மனம் நொந்த பாண்டு மன்னன் ஆட்சியை சகோதரனாகிய குருடன் திருத்ரஷ்டிரனிடம் கொடுத்துவிட்டு இரு மனைவிகளுடன் காட்டில் அஞ்சாதவாசம் கொண்டான்.

குழந்தை இல்லாத பாண்டு தனது மனைவியான குந்தியிடம் இதை பற்றி வருத்தத்துடன் பேசிக்கொண்டிருக்கையில், குந்தி தனக்கு துர்வாச முனிவர்  கொடுத்த வரம் பற்றிக் கூறினாள். மன்னன் வேண்டிக் கேட்டுக் கொண்டதால் அவளும் தர்மபுத்திரன் மூலம் யுதிஷ்ட்ரனையும், வாயு பகவான் மூலம் பீமனையும், இந்த்ரன்     மூலம்  அர்ஜுனனையும்  பெற்றாள். 
அதே மந்திரத்தை மாத்ரியையும் உச்சரிக்கச் செய்து இறைவனின் மருத்துவர்களான அஸ்வின் குமாரர்கள் மூலம் நகுலன், சகாதேவன் என்று இரண்டு குழந்தைகளைப் பெற்றார்கள்.
இந்த ஐந்து பேருமே பாண்டவர்கள் என்றழைக்கப் பட்டார்கள்.

15 ஆண்டுகள் துறவரத்திற்கு பிறகு, குந்தியும்  பிள்ளைகளுமில்லாத  ஒரு  சமயத்தில்,  மாத்ரியுடன் மன்னன் பாண்டு இணைந்த பொழுது சாபத்தினால் அவன் இறந்தான். மாதரியும் உடன் கட்டை ஏறி மரணமடைந்தாள்.

பரசுராமனிடம் கர்ணன் பிரமாஸ்த்ர மந்திரம் கற்க விரும்பினான். ஆனால் பரசுராமனோ பிரமாணர்களுக்கு மட்டுமே கற்றுத் தருவார். ஆகையால், கர்ணன் பிராமணனாக வேஷமிட்டு பரசுராமனை ஏமாற்றி சிஷயனாக சேர்ந்துக் கொண்டான்.
ஒரு நாள் கர்ணன் மடியில் பரசுராமன் தலை வைத்து படுத்து தூங்கிக் கொண்டிருக்கையில், ஒரு வண்டு கர்ணன் தொடையில் கடித்தது. பெரும் வலியுடம் ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. காலை நகர்த்தினால் ஆசான் எழுந்துவிடுவாறே என எண்ணி கர்ணன் கடுமையான வலியை பொறுத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.
எழுந்த பரசுராமன் ரத்தத்தை கண்டு சந்தேகம் கொண்டு நீ யார் என கர்ணனை வினவினான். ஒரு சத்ரியன் மட்டுமே இந்த வலியை தாங்க முடியும். பிராமணனால் முடியாது என்பது அவனுக்கு புரிந்து போனது. உண்மையை சொன்னான் கர்ணன். கடும் கோபடைந்த பரசுராமன், சரியான, தேவையான நேரத்தில் இந்த மந்திரத்தை நீ மறந்து போவாய் என சாபமிட்டார். நீண்ட நேர வேண்டுதலுக்குப் பின் பரசுராமன் அவன் பால் இரக்கம் கொண்டு தனது
பார்கவஸ்த்ரா எனும் எந்திரத்தையும், தனது விஜயா என்னும் அம்பையும் கொடுத்தான்.
பாண்டுவின் அண்ணன் துரிதிராஷ்தரன் மகன்களாகிய துரியோதனனும் அவனது மற்றைய 99 சகோதரர்களும் கர்ணனை சகோதரனாக எண்ணி வாழ்ந்து வந்தார்கள். அவனுக்கு அங்கதேசத்தை  (இன்றைய பகல்பூர்) அளித்து மன்னனாக்கினார்கள். கர்ணன், கர்னல் என்ற ஊரை தோற்றுவித்ததாக பாரதம் சொல்கிறது. 

கௌரவர்கள் என அழைக்கப் பட்ட இவர்கள் பாண்டவர்களுக்கு எதிரிகளாக இருநதனர். அர்ஜுனனுக்கு எதிரியாக கர்ணனை கொம்பு சீவிவிட்டிருந்தார்கள்.

மகாபாரதப் போருக்கு முன் கிருஷ்ணனின் வேண்டுகோளுக்கேற்ப இந்திரன் பிராமணன் வேஷத்தில் கர்ணனை சந்தித்து அவனது உயிரையும் உடலையும் காப்பாற்றும் அவனது கவசத்தையும் குண்டலமும் யாசகம் கேட்டு வந்தான். இவற்றை பெற்றுவிட்டால் அவனை அர்ஜுனன் போரில்  வெல்வது  சுலபம்.  ஆனால் கர்ணனின் தந்தையாகிய சூரியன் கர்ணனை எச்சரித்துவிட்டார். ஆனாலும் கர்ணன் தனது ஈகை குணத்தினால் அவனது தந்தையின் சொற்களை உதாசீனப் படுத்திவிட்டு  இந்திரன் யாசகமாகக் கேட்டதை கொடுத்தான்.
அவனது தானதரும மனத்தைக் கண்ட இந்திரன் நெகிழ்ச்சிக் கொண்டு கர்ணா  உனக்கு என்ன வேண்டுமோ கேள் நான் தருகிறேன் என்றான். வந்திருப்பது இந்திரன் என தெரிந்ததால் கர்ணன் அவனிடம் தன் எதிரிகளை சூறையாட அவனது சக்தி எனும் எந்திரத்தை கேட்டான். இந்திரனும் அவனது தாராள மனதை பாராட்டி எந்திரத்தை கொடுத்து இதை நீ ஒரு முறை மட்டுமே உபயோகிக்க முடியும். முதல் முறை உபயோகித்தவுடன் திரும்ப என்னிடம் வந்துவிடும் எனக் கூறி கொடுத்தான்.

பரசுராமனின் சாபப்படி குருஷேஸ்த்ர போர்க்களத்தில் கர்ணன் பிரமாஸ்தர மந்திரத்தை மறந்தான். அவனது தேர் சக்கரம் மண்ணில் புதைத்து. அர்ஜுனன் அவனை வெற்றிக் கொண்டான்.
மரணப் படுக்கையில் கிடந்த கர்ணனை உய்ய இந்திரனும் சூரியனும் யாசகர்கள் வேஷமிட்டு அவனிடம் பிச்சை கேட்டார்கள். அவன் தன்னிடம் பிச்சையிட ஒன்றுமில்லை என்றான். உன்னிடம் உள்ள தங்க பல்லைக் கொடு என்றார்கள். உண்மையை தெரிந்துக் கொண்ட கர்னன் அருகில் இருந்த ஒரு கல்லால் தனது பொற்பல்லை உடுத்து அவர்களிடம் தானமாக கொடுத்தான்.
இவ்வுலகில் இருந்து விடுபட்டு இறைவனடி போய் சேர்ந்தான்.

வ்ருஷாளியும் சுப்ரியாவும் கர்ணனின் மனைவிகள்.
வ்ருஷாசேனன் , வ்ருஷாகேது, சித்ராசேனன், சத்யசேனன், ஸுஷேனன், ஷத்ருன்ஜெய, திவிபாதன், பானாசேனன், ப்ரசேனன் என ஒன்பது மகன்கள்.
குருக்ஷேத்திர போரில் பானாசேனன் பீமனாலும், சித்ராசேனன், சத்யசேனன், ஸுஷேனன் ஆகியோர் நகுனனாலும், ப்ரசேனன் சத்யாகியினாலும், ஷத்ருன்ஜெய, வ்ருஷாசேனன், திவிபாதன் ஆகியோர் அர்ஜுனனாலும் கொள்ளப் பட்டனர். மிஞ்சியது வ்ருஷாகேது மட்டுமே.

வ்ருஷாளியும் கர்னனுடன் உடன்கட்டை ஏறினாள்.
போருக்குப் பின் கர்ணன் தங்களது சகோதரன் என்று  தெரிந்துக்  கொண்டதால்,  வ்ருஷாகேது பாண்டவர்களால் இந்திரப்ரஸ்த்துக்கு மன்னன் ஆக்கப்பட்டான்.
 
சுபம்.

புதன், 11 டிசம்பர், 2013

இராமாயண கதாநாயகன் ஸ்ரீராமனின் இறுதிக் காலம்.


இராமாயண கதாநாயகன் ஸ்ரீராமனின் இறுதிக் காலம்.

அவர் இந்த பூமியிலிருந்து மறைந்தது.

அவர் இறந்து போனாரா?

விஷ்ணுவின் அவதாரங்கள் இறந்து போனதாக குறிப்பிடப் படுவதில்லை. இந்த பூமியில் அதர்மத்தை ஒழித்து தர்மத்தை ஸ்தாபித்த பின்பு  அனைத்து அவதாரங்களும் வைகுண்டம் மீளுவதாக ஐதீகம்.
ஸ்ரீராமரும் சரயு ஆற்றில் இறங்கி மறைந்து போவதாகவே பத்ம புராணம் தெரிவிக்கிறது.














ஸ்ரீராமரின் குழந்தைகளும் அவரது மற்றைய தம்பிகளின் குழந்தைகளும் ஸ்ரீராமரின் அகண்ட பெரிய நாட்டின் பல பகுதிகளாக பிரித்து ஆண்டுக் கொண்டிருந்தனர்.
ஸ்ரீ ராமர் நாட்டு மக்களின் நன்மைக்காக இறைவனை நோக்கி பல யாகங்களை செய்தார்.
இந்நேரத்தில்தான் சீதையும் பூமா தேவியின் அழைப்பின் பேரில் பூமியில் சென்று மறைந்தார்.

ஒரு நாள்...
 
ஸ்ரீராமரை தேடிக் கொண்டு ஒரு முனிவர் வந்தார்.
அவர் ராமருடன் சிறிது நேரம் தனியாக பேச வேண்டும் எனவும், இடையில் யாரும் தங்களது தனி அறைக்குள் பிரவேசிக்கக் கூடாது எனவும் உத்திரவிட்டார்.
 
அவர்தான் காலதேவர் எனப்படும் காலன்.
 
அதன்படி ராமர் அவரது தம்பி லக்ஷ்மணனை காவலாக வைத்துவிட்டு காலதேவரை பின்தொடர்ந்தார்.
யாராவது அப்படி அத்து மீறி நுழைந்தால் சாவை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.
 
காலதேவர் ராமரை சந்தித்து அவரது அவதாரத்தின் நோக்கங்கள் நிறைவேறிவிட்டதாகவும் அவர், வைகுண்டம் மீளும் காலம் வந்துவிட்டதாகவும்  தான் அதை ஸ்ரீராமருக்கு ஞாபகப் படுத்த வந்ததாகவும் கூறனார்.
 
இப்படியாக ஸ்ரீராமரும் காலதேவரும் பேசிக் கொண்டிருக்கையில் அறைக்கு 
வெளியில் ஸ்ரீ ராமரை தாம்  உடனடியாக பார்க்கவேண்டும் என்று லக்ஷ்மனுடன் மல்லாடிக் கொண்டிருந்தார் நமது கடும் கோபக்கார துர்வாச முனுவர்.

லக்ஷ்மணன் எவ்வளவு மன்றாடியும் அவர் அசரவில்லை. ஸ்ரீராமரை பார்ப்பதில் அடமாக நின்றார் நமது துர்வாச முனிவர்.
உள்ளே தன்னை விடவில்லையானால் முனிவர், லக்ஷ்மணனுக்கு சாபம் அளிப்பேன் என்று சொன்னதால் லக்ஷ்மணன் ஒன்றும் செய்வதறியாமல்
குழப்பம் அடைந்தார்.

உள்ளே போனாலோ ஸ்ரீராமர் சொன்னது போல நமக்கு சாவு நிச்சயம். இவரை உள்ளே விடவில்லை என்றால் சாபம் நிச்சயம் என்ற நிலையில் லக்ஷ்மணனுக்கு இறைவனின் சித்தம் புரிந்தது.

இது காலனின் விளையாட்டு. நாம் இந்த பூவுலகத்திலிருந்து விடை பெற வேண்டிய நேரம் நெருங்கி விட்டது என்பதை முழுமையாக புரிந்துக் கொண்டார்.

காலனின் விருப்பதிற்கேற்ப தன்னிச்சையாக சரயு நதிக்குள் புகுந்து ஆனந்த சேஷ சயனம் எடுத்துக் கொண்டார்.
 
லக்ஷ்மணன் முடிவை தெரிந்துக்கொண்ட ஸ்ரீராமர், தனக்கும் காலன் அழைத்ததை ஏற்றுக் கொண்டு தனது இந்த அவதாரம் முடிந்தது என புரிந்துக் கொண்டு அனைவருக்கும் வணக்கம் சொல்லி லக்ஷ்மணனை தொடர்ந்து சரயு ஆற்றில் இறங்கி மறைந்து போனார்.

ஸ்ரீஹரி விஷ்ணு அனந்த சேஷனத்தில் பள்ளிக் கொண்ட படி அங்கு எல்லோருக்கும் காட்சி தந்து பக்தர்களுக்கு ஆசியளித்தார்.

 

வியாழன், 5 டிசம்பர், 2013

ஊர்க்குருவி: திரௌபதி

ஊர்க்குருவி: திரௌபதி: நன்றி: suryakumardpi.blogspot.com/ இன்றைய கதை கொஞ்சம் விரசம் உள்ளதாக தெரிகிறது. ஆகையால், குழந்தைகளுக்கு சொல்லும் முன் அவர்களுக்கு ஒவ்வாத...

திரௌபதி

நன்றி: suryakumardpi.blogspot.com/

இன்றைய கதை கொஞ்சம் விரசம் உள்ளதாக தெரிகிறது. ஆகையால், குழந்தைகளுக்கு சொல்லும் முன் அவர்களுக்கு ஒவ்வாத பகுதிகளை களைந்துவிட்டு சொல்லவும்.

திரௌபதி

 
 
 
 

 
 


ஆறாவது ஆணிடம் ஆசைப்பட்ட திரௌபதை
அந்த ஆறாவது ஆள் யார்? கர்ணன் தான்.

முதன் முதலில், சுயம்வரம் நடந்த சபையில் வில்லை வளைத்துக் குறியை அடிக்க எழுந்தவன் கர்ணன்தான். அவனைப் பார்த்ததுமே இவன்தான் எனது புருசன் என்று திரப்பதி மனசில் துர்மானமாகிவிட்டது. அவன் அரச குமாரனில்லை தேரோட்டி மகன் என்றிருந்ததால் அவனுக்கு வில்லைத்தொட அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் கர்ணனே அவள் மனசில் இருந்தான் கடைசிவரையிலும், அர்ச்சுனன் எழுந்து பந்தயத்தில் வென்று பாஞ்சாலியைக் கைப்பிடித்து அழைத்து வந்தான் தாய் குந்தியிடம். அம்மா ஒரு கனி கொண்டு வந்திருக்கிறேன் என்றதும் அதை அய்வருமே சேர்ந்து உண்டு அனுபவியுங்கள் என்று சொல்லிவிட்டாள். மாதா சொன்னது மகேசன் சொன்னதாக ஏற்று அய்வருமே அவளை மணந்து கொண்டார்கள். இது திரவ்பதிக்கு இணக்கமில்லை. அதனால் அவள் ஒரு தந்திரம் செய்தாள்.

அரசு குமாரர்கள் அணியும் ஒரு ஜோடு செருப்புகளை யாருக்கும் தெரியாமல் கொண்டு வரச் செய்து வைத்துக் கொண்டாள். விளக்கு வைத்ததும் தனது அறை வாசல்படியருகே அந்தச் செருப்புகளை வைத்துவிடுவாள். அய்வரில் யார் வந்தாலும் மற்றவரில் யாரோ ஒருவர் உள்ளே இருக்கிறார்கள் என்று திரும்பி விடுவார்கள். விடிகாலைப் பொழுதுதில் அந்தச் செருப்புகளை எடுத்து யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்து விடுவாள். இப்படியே தினமும் செய்தாள் இது சரியாக வராது என்று அறிந்து கொஞ்ச நாளைக்கெல்லாம் பஞ்சபாண்டவர்கள் ஆளுக்கொரு பெண்னைப் பார்த்துக் கலியாணம் செய்து கொண்டார்கள். அந்தப் பெண்களிடம் பிறந்தவர்களே உப பாண்டவர்கள் என்று யுத்தம் முடியும் தறுவாயில் பேசப்படுகிறவர்கள்.

கர்ணனையே மனசில் கொண்ட திரப்பதி கடைசிவரை கன்னி கழியாதவளாக வாழ்ந்து தெய்வமானதாகக் கதை.”

----------------------------------------------------------------------------------------------------------------------------------
இப்படி ஒரு கருத்தை இன்று ஃபேஸ்புக்கில் பார்த்தேன். நிறைய மறுக்கிறேன். அதன் எதிர்வினையே, இந்த பதிவு....

ஒரு சமயம் துரோணரின் சீடர்களால் தோற்கடிக்கப்பட்ட துருபதன், சிவனை நோக்கி வேண்டினான். துரோணரை அழிப்பது மட்டுமல்லாமல், குரு வம்சத்தையே அழிக்க வேண்டுகிறான். துரோணரை கொல்ல ஒரு மகனையும், பீஷ்மரை கொல்ல ஒரு மகனையும், குரு வம்சத்தில் பிளவு ஏற்படுத்த ஒரு மகளும் தனக்கு வேண்டும் என்று சிவபெருமானிடம் கேட்கிறான் துருபதன். சிவபெருமானும் துருபதனுக்கு “அப்படியே ஆகட்டும்” சொல்லி விடுகிறார்.

அப்படி குரு வம்சம் பிளவு பட வரமாய் கொடுத்த மகள் தான் திரௌபதி. குரு வம்சத்தில் பிளவை ஏற்படுத்த அர்ஜுனனுக்கு திரௌபதியை மணம் முடித்து, திரௌபதியை குரு வம்சத்தினுள் நுழைக்க துருபதன் முனைப்பாய் இருந்தான். ஆனால் அர்ஜூனன் அரக்கு மாளிகை தீ விபத்தில் இறந்து விட்டதாகவும், ஏற்கனவே குரு வம்சம் அழிந்து விட்டது எனவும் வந்த தகவலினால், துருபதன் திரௌபதியை வேறு ஒருவருக்கு கட்டி கொடுக்க சுயம்வரத்தினை ஏற்பாடு செய்கிறான். அரக்கு மாளிகை தீ விபத்தில் சுத்தமாக கருகி போனாலும், அர்ஜூனன் முதலியோர் தீ விபத்தில் இருந்து தப்பி வனத்திற்கு ஓடி தலைமறைவாய் இருப்பது துருபதனுக்கு தெரியாது.

முற்காலத்தில் எல்லாம் சுயம்வரம் என்பதை பிடித்த ஆண்மகனை பெண் தேர்ந்தெடுக்கும் ஒரு அமைப்பில் தான் இருந்தது. பின் அதில் பெண்களை அடக்குமுறை படுத்தும்விதமாக, வில் வித்தை வைத்து, அதில் யார் வெற்றி பெருகிறானோ, அவனைத் தான் மணம் முடிக்க வேண்டும் என்று ஆனது. மேலும், வில் என்பது அப்போதைய உச்சப்பட்சமான ஆயுதமாக இருந்ததால், வில் வித்தையில் தேர்ந்தவர்களை மிக உயர்ந்தவர்களாக பார்க்க பட்டனர். திரௌபதியின் சுயம்வரத்திலும் அது போல் ஒரு வில் வித்தை நடக்கிறது. அந்த சுயம்வரத்திற்கு பல நாடுகளில் இருந்தும் மன்னர்கள் வருகிறார்கள், அதில் துரியோதனனும், கர்ணனும் அடக்கம். அர்ஜுனன், பீமன், சகாதேவன், யுதிஷ்டரன், நகுலன் ஆகியோர்கள் இறந்து விட்டது போல் உலகில் நடிப்பதால், அவர்கள் அனைவரும் அந்தணர் வேடத்தில் சுயம்வரத்திற்கு வருகின்றனர்.

மேலே சுழலும் ஒரு மீனின் பிம்பம் ஒரு பாத்திரத்தில் உள்ள எண்ணையில் தெரிய, அதன் கண் நோக்கி அம்பை எய்ய வேண்டும். சத்ரியர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக முன் வந்து முயற்சிக்கின்றனர். ஒரு சிலரால் வில்லை தூக்கி பிடிக்கவே முடியவில்லை. சிலர் தூக்கி பிடித்து அம்பெய்தாலும், அது மீனின் கண்ணை தவிர எல்லா இடத்திலும் படுகிறது. அப்போது, கர்ணனை சென்று முயன்று பார்க்குமாறு துரியோதணன் சொல்ல, கர்ணன் இடத்தை விட்டு எழுகிறான்.

திரௌபதி அனைவர் முன்னிலையிலும் எழுந்து நின்று, :ஒரு தேரோட்டியின் மகன் என் கரத்தை பற்ற நான் அனுமதிக்க மாட்டேன்” என்று சொல்லி மறுத்துவிட்டாள். ஒரு ஆணை ஏற்காமல் ஒதுக்க சுயம்வர பெண்ணுக்கு உரிமை உண்டு. இப்படியாக சத்ரியர்கள் அனைவரும் வாய்ப்பை தவற விட்ட நிலையில் அந்தணர்களுக்கு வாய்ப்பு அளிக்க படுகிறது. அர்ஜூணன் எழுகிறான், அம்பை எய்கிறான், திரௌபதியை வெல்கிறான். இங்கு தான் விதியின் நுட்பம் இருக்கிறது. அர்ஜுனன் இறந்து விட்டான் என நினைத்து ஏற்படுத்தப்பட்ட சுயம்வரத்தில் அர்ஜுனனே வந்து திரௌபதியை வெல்கிறான்.

அர்ஜுனன் வீட்டிற்கு வருகிறான். குந்தியிடம், “அம்மா, நான் போட்டியில் வெற்றி பெற்று என்ன கொண்டு வந்திருக்கேன் பார்” என்கிறான்.

“எதுவாக இருந்தாலும் உன் சகோதரர்களுடன் பகிர்ந்து கொள்“ என்று சொல்லி விடுகிறாள், திரும்பி கூட பார்க்காமல்...

“ஆனால், இது ஒரு பெண் அம்மா” என்கிறான் அர்ஜுனன்.

அப்போது தான் திரும்பி பார்க்கிறாள் குந்தி, தன் அனைத்து பிள்ளைகளும் திரௌபதியால் கவர்ந்து இழுக்க பட்டிருப்பதை கவனிக்கிறாள். திரௌபதியால் குடும்ப ஒற்றுமை உடைந்து விட கூடாது என்று, “தர்மம் அனுமதிக்குமானால், நான் என்ன சொன்னேனோ அதன் படி நடந்து கொள்ளுங்கள்” என்கிறாள்.

அப்போது யுதிஷ்டரன், இதை தர்மம் அனுமதிக்கிறது எனவும், முன்னொரு காலத்தில் வாழ்ந்த விதுலா கூட பத்து பிரதேச சகோதரர்களை மணந்து கொண்டு வாழ்ந்ததாக வரலாறு இருப்பதாக சொன்னார். இதனால் திரௌபதி, அர்ஜுனனுக்கு மட்டுமல்லாமல் மீதி நான்கு சகோதரர்களுக்கும் கூட மனைவியாய் இருப்பதை அவளால் தடுக்க முடியவில்லை. அதனால் ஐவருக்குமே திரௌபதி மனைவியாய் வாழ்ந்தாள்.

இதற்கெல்லாம் ஒரு முன் கதை இருக்கிறது.
திரௌபதி, தன் கடந்த கால வாழ்க்கையில், சிவபெருமானிடம் தனக்கு அழகான, அறிவான, யோக்கியமான, பலசாலியான, திறமை வாய்ந்த கணவன் வேண்டும் என்று வேண்டினாளாம். அதற்கு சிவபெருமான், “உனக்கு இந்த ஐந்து குணங்களும் கொண்ட கணவர்கள் கிடைப்பார்கள். ஏனென்றால் கடவுளை தவிர வேறு எந்த நபருக்கும் இந்த ஐந்து குணங்களும் ஒன்றாக அமைந்திருக்காது” என்றாராம்.

இதற்கு முந்தைய பிறவியில், திரௌபதி நளாயினியாக, மௌத்கல்ய முனிவரின் பத்தினியாக இருந்தாள். அவருக்கு அப்போது ஏதோ ஒரு நோய் இருந்தது. இருமி கொண்டும், வதை பட்டு கொண்டும் இருந்தவரை நளாயினி தான் பராமரித்து கொண்டு வந்தாள். அவளுடைய சேவையை கண்ட மௌத்கல்ய முனிவர் அவளுக்கு ஒரு வரம் கேட்க வாய்ப்பளித்தார். தன் காம் இட்சையை தீர்த்து வைக்க வேண்டும் என்று வரம் கேட்டாள். மௌத்கல்ய முனிவர் அதன் படி பல மனித உருவங்களையும், தெய்வ உருவங்களையும் எடுத்து அவளை புணர்ந்தார். நளாயினிக்கு மகிழ்ச்சி என்றாலும் பூரண திருப்தி கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் மௌத்கல்ய முனிவர் இவ்வுலகை துறக்கும் நாள் வரவே, “நீங்கள் போன பின்பு என்னை யார் அனுபவிப்பார்கள்” என்கிறாள். அவளின் தீராத இச்சையை கண்டு வெறுப்புற்ற முனிவர், அடுத்த பிறவியில் பல ஆண்களுக்கு மனைவியாய் இருப்பாய் என்று சாபம் விடுகிறார்.

ஆக, திரௌபதி ஐவரையும் மணப்பது பற்றி அவளின் வாழ்க்கையிலே முன்பே எழுதப்பட்டுவிட்டது.

மேலும், பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியை சமமாக விரும்பினர். இதை கிருஷ்ணன் விரும்பவில்லை. இது அழிவிற்கு வழி என்கிறார், திலோத்தமையின் கதையை பாண்டவர்களுக்கு சொல்கிறார்.

சுண்டன், உபசுண்டன் என்ற இரு அசுர சகோதரர்களை அழிக்க தேவர்கள் நினைக்கின்றனர். அவர்கள் இருவரும் பலம் வாய்ந்தவர்கள் என்பதால் சூழ்ச்சியால் தான் அழிக்க முடியும் என்று திலோத்தமை என்னும் அப்ஸ்ரஸை அனுப்புகின்றனர். அவளை பார்த்தவுடனே இருவரும் அவளை அடைய நினைக்கின்றனர். “இருவரில் யார் பலசாலியோ, அவரை தான் மணப்பேன்” என்கிறாள். இருவரும் அவளுக்காக அடித்து கொண்டு இறந்து விடுகின்றனர்.

இது போல் உங்கள் குடும்பத்திலும் நடக்க கூடாது, என்று கிருஷ்ணன் அறிவுரை கூறுகிறார். அவரின் அறிவுரைப்படி, திரௌபதியுடன் ஆளுக்கு ஒரு வருடம் இருக்க வேண்டும் எனவும், அந்த சமயத்தில் மீதி நால்வரும் ஒதுங்கி இருக்க வேண்டும் எனவும் முடிவாகிறது. ஒதுங்கி இருக்க கூடிய நாட்களில், பாண்டவர்கள் பிறரையும் திருமணம் செய்து கொள்ளலாம், ஆனால் அரண்மனைக்கு கூட்டி வர கூடாது என்று திரௌபதி சொல்கிறாள். முறை தவறி, திரௌபதியின் அறைக்குள் நுழைபவர்கள், ஓராண்டு காணாமல் போய் விட வேண்டும் என்றும் சொல்ல படுகிறது.

எல்லோரும் ஒப்பு கொண்டதற்கேற்ப திரௌபதி ஐவருடனும் ஒவ்வொருவருடனும் ஒவ்வொரு வருடம் என்ற முறையில் இல்லறம் பேணுகிறாள். ஒவ்வொருவருக்கும் ஒரு குழந்தை பெற்று கொடுத்தாள்.

யுதிஷ்டிரனின் மகன் பிரதிவிந்தியன்;
பீமனின் மகன் சத்சோமன்;
அர்ஜுனனின் மகன் கருதகீர்த்தி;
நகுலனின் மகன் ஷடானிகன்;
சகாதேவனின் மகன் சுருதசேனன்;

ஒரு நாள் அர்ஜுனன் தன் வில்லை வீடு முழுதும் தேடி கிடைக்காமல், திரௌபதியின் படுக்கை அறைக்குள் நுழைந்து விடுகிறான். அப்போது யுதிஷ்டிரனோடு திரௌபதி இருப்பதை பார்த்தான். இது முறை தவறிய செயல் என்பதால், அர்ஜுனன் ஓராண்டு வெளியே இருக்க வேண்டியதாய் இருந்தது.

ஒரு பஞ்சாபி கிராம கதையில் இது வேறு மாதிரி வருகிறது. அதுமட்டுமில்லாமல், ஏன் நாய்கள் வெட்டவெளியில் சம்போகம் செய்கிறது என்றும் வருகிறது. பாண்டவர்களில் ஒருவர், திரௌபதியின் அறைக்கு உள்ளே செல்லும் போது வாசலில் செருப்பை விட்டு செல்வார்கள். இதனால், ஒருவர் உள்ளே இருக்கிறார்கள் என்று மற்ற சகோதரர்கள் அறிய வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு ஏற்பாடு. ஆனால் அப்படி ஒரு முறை யுதிஷ்டிரன் விட்டு சென்ற செருப்பை ஒரு நாய் எடுத்து கொண்டு போய் விடுகிறது. இதனால் அர்ஜுனன் தவறுதலாக உள்ளே நுழைந்து விடுகிறான். தனக்கு இப்படி ஒரு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதற்காக எல்லா நாய்களும் வெட்ட வெளியில் சம்போகம் செய்யட்டும் என்று திரௌபதி சாபமிட்டாள் என்று அந்த கதையில் வருகிறது. எப்படியோ, நிகழ்ச்சி இது தான், யுதிஷ்டிரன் சம்போகத்தில் இருக்கும் போது அர்ஜுனன் தவறுதலாக உள்ளே நுழைந்து விடுகிறான். இதனால் தான் அவன் புனித யாத்திரையே மேற் கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த யாத்திரையில் தான் உலுப்பி, சித்ராங்கதை போன்ற எண்ணற்ற பெண்களை அர்ஜுனன் மணக்கின்றான்.

“ஜம்புல் அக்யான்” என்ற மகாராஷ்டிர நாடகத்தில் திரௌபதி உண்மையில் யாரை நேசித்தாள் என்று ஒரு குறிப்பு வருகிறது.

அந்த நாடகத்தின் படி, திரௌபதியும், பாண்டவர்கள் ஐவரும் ஒரு காட்டில் நடந்து போய் கொண்டிருக்கும் போது, திரௌபதிக்கு பசி வந்து விடவே, அங்கிருக்கும் ஒரு நாவல் மரத்தில் கிடக்கும் ஒரே ஒரு நாவல் பழத்தை விஷயம் தெரியாமல் பறித்து விடுகிறாள். மரம் அவளிடம் பேசுகிறது. “அங்கே பார், அங்கு ஒரு முனிவர் தவத்தில் இருக்கிறார் அல்லவா, அவருக்காக இந்த பழத்தை நான் 12 வருடங்களாக பாதுகாத்து வருகிறேன், நீ வந்து பறித்து கெடுத்து விட்டாயே, இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர் தவம் கழித்து வந்து பசியாறவே இதை வைத்து இருந்தேன். இப்போது அவர் பட்டனி கிடப்பார். அந்த பாவம் உன்னை வந்தடையும்” என்று சொல்கிறது.

பயந்த திரௌபதி, அர்ஜுனனிடமும், பீமனிடமும் பழத்தை திரும்பவும் மரத்திலே ஒட்டி விட சொல்லி உதவி கேட்கிறாள். அவர்கள் தங்களால் இயலாது என்று கை விரித்து விடுகிறார்கள்.

அப்போது மரம் சொல்கிறது, “நீ உண்மையிலே பத்தினி பெண்ணாய் இருந்தால், நீ உன் கற்பின் திறத்தாலேயே இதை நீ ஒட்ட வைக்க முடியும்” என்கிறது.

“தான் ஐவருடன் இருந்தாலும், தான் பத்தினி தான்” என்கிறாள்.

“நீ பொய் சொல்கிறாய், நீ யாரோ ஒருவரை அதிகமாக நேசிக்கிறாய்!” என்கிறது.

அவள் மறுக்கிறாள். அது கிருஷ்ணன் தான் என்றும், தான் அவரை நண்பராக தான் நேசிக்கிறேன் எனவும், காதலராக அல்ல, என்று விளக்குகிறாள். மரம் ஏற்க மறுக்கிறது.

ஒரு கட்டத்தில் தான் கர்ணனை தான் உண்மையாக நேசிக்கிறேன் என்று ஒத்து கொண்டாள். ஜாதியை கருத்தில் கொள்ளாமல் கர்ணனையே மணந்திருந்தால், தான் சூதாட்டத்தில் பணய பொருள் ஆகியிருக்க மாட்டேன் எனவும், தான் துகிலுரிக்க பட்டிருக்க மாட்டேன் எனவும், தன்னை வேசி என்று பிறர் சொல்ல வேண்டியிருந்திருக்காது என கதறி அழுகிறாள். பழம் தானாக போய் கிளையில் ஒட்டி கொள்கிறது.

முனிவர் தவம் முடித்து வந்து பழம் தின்று பசி ஆறி, திரௌபதியையும், பாண்டவர்களையும் வாழ்த்துகிறார்.

பாண்டவர்கள் திரௌபதியின் ரகசியத்தின் அறிந்த பின் பெரும் அதிர்ச்சியுறுகின்றனர். அவர்களால் ஏற்று கொள்ளவே முடியாத ஒரு கணமான ஒன்றாய் உண்மை வலிக்கிறது.

அன்று இரவு காட்டில் ஒரு குகை பார்த்து தூங்கி கொண்டிருந்த போது, யுதிஷ்டிரன் எழுந்து சென்று தூங்கி கொண்டிருந்த திரௌபதி பாதங்களை வணங்குவதை அர்ஜுனனும், பீமனும் காண்கின்றனர். அவர்கள் விளக்கம் கேட்டனர். இன்று இரவு தூங்க வேண்டாம் என சொல்லி முழித்திருக்க சொன்னான்.

அன்று இரவு அவர்கள் குகைக்கு வெளியே சிந்தூர சிவப்பில் ஓர் ஆலமரம் எழுவதை கண்டனர். அதன் கீழ் 9 லட்சம் பக்தர்கள், தேவியை தொழுது நின்றனர். அவர்களுக்கு பதில் அளிக்கிறார் போல் திரௌபதி அவர்கள் முன் தோன்றினாள். அவளை ஒரு தங்க சிம்மாசனத்தில் அமர வைத்து மலர்கள் தூவினர்.

அப்போது தான் திரௌபதி சாதாரண பெண் அல்ல என்பதை பாண்டவர்கள் புரிந்து கொள்கின்றனர்.

இது தான் கதை, கதை இப்படியிருக்க எவ்வளவு புளுகல்கள்....?
 
டிஸ்கி:
கற்பனைக் கதை என்றான  பின்பு பலரும் பல விதங்களில் கதைகளை புனைய முற்படுவார்கள். நாம் திரையில் பார்த்த வீரபாண்டிய கட்டபொம்மனும், ராஜராஜ சோழனும் அப்படியே உண்மையில் நடந்த கதையா? கொஞ்சம் உணர்சியூட்டவும் சூடேற்றவும் அவ்வப்போது கதை திரிப்பது போன்றுதான் இதுவும்.
இந்த எதிர் வினையில் இவர் தெரிவித்திருக்கும் கதைக்கு மட்டும் என்ன ஆதாரம் என்பது தெரியவில்லையே?