வெள்ளி, 1 டிசம்பர், 2017

வாகனம் எப்படிக் கிடைத்தது?

காளை வாகனம் எப்படிக் கிடைத்தது?

காளை வாகனம் எப்படிக் கிடைத்தது?
முப்புரத்தை எரிக்க சிவன் புறப்பட்டார். தேவர்களும் அவருக்கு உதவியாக வந்தனர். ஒவ்வொருவரும் தன்னுடைய பலத்தாலதான் சிவன் முப்புரங்களையும் எரிக்கப்போகிறார் என்று ஆணவம் கொண்டனர். இதை அறிந்த சிவ பெருமான் தனது தேரை சிறிது கீழே அழுத்தினார். தேர் ஒடிந்துபோனது. தேவர்கள் பயந்தனர். இனி சிவபெருமான் எப்படி பயணம் செய்வார் என்று கலங்கி நின்றனர். இச் சமயத்தில் திருமால் காளையாக  வந்து அவரைத் தாங்கிச் சென்றார்.
ஆட்டு வாகனம் எப்படி வந்தது?
இந்தப் பூவுலகில் நாரதர் ஒரு வேள்வி செய்தார். அதில் இருந்து முரட்டு ஆட்டுக் கிடா புறப்பட்டது. அதைக் கண்டு தேவர்கள் பயந்தோடினர். நாரதரும் கயிலயை நோக்கி ஒடினார். சிவனுக்குச் செய்தி அனுப்ப முருகனிடம் முறையிட்டனர். முருகனோ தனது படைத்தலைவர் வீரவாகு தேவருக்கு உத்தரவு இட்டார். அவர் ஓடிப் போய் ஆட்டைப் பிடித்துவந்தார். நாரத்ர் முதலியோரின் வேண்டுகோளுக்கிணங்க ஆட்டை தனது வாகனமாக்கினார் முருகப் பெருமான் (ஆதாரம்: கந்தபுராணம்).

பெருச்சாளி வாகனம் எப்படி உண்டானது?
தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் மிகப் பெரிய தொல்லைகள் கொடுத்தவன் கஜமுகாசுரன். அவனை எப்படியாகிலும் ஒழித்துவிடும்படி பிள்ளையாரை வேண்டினான் இந்திரன்.
கணபதியும் அவர்களுடைய வேண்டுக்கோளுக்கிணங்க அவனைச் சம்ஹாரம் செய்யப் புறப்பட்டார்.  கடுமையான சண்டையில் விநாயகப் பெருமான், தனது ஒரு தந்தத்தை ஒடித்து கஜமுகாசுரன் மீது எறிந்தார். கீழே விழுந்து இறந்தவன் போல நடித்த அவன, திடீரெனப் பெருச்சாளி ரூபம் எடுத்து கணேசர் மீது பாய்ந்தான்.  பிள்ளையார் அவன் மீது தாவி ஏறி அமர்ந்தார். இனி எப்போதும் இது போலவே என்னைச் சுமக்கக்கடவாயாக என்றும் ‘ஆசிர்வதித்தார்’.
“கசமுகத்தவுணனைக் கடியானை” (ஆதாரம்: புராணம்)
சிவன் வாகனம் எலி!!
யஜுர் வேதத்தின் மிக முக்கியமான பகுதி ருத்ரம். அதில் சிவனை கணபதி, சேனானி (மக்கள் தலைவன், படைகளின் தலைவன்,) என்று ரிஷிகள் வருணிக்கின்றனர். இதுவே பிற்காலத்தில் கணபதியாகவும், முருகனாகவும் தனி தெய்வங்களாக உருப்பெற்றன என்பது ஆராய்ச்சியாளரின் துணிபு. இதற்கு ஒரு ஆதாரமும் உள்ளது. ருத்ரனின் வாகனம் ஆகு, அதாவது எலி. சதபத பிராமணமும், தைத்ரீய பிராமணமும் ருத்திரனின் வாகனமாக கூறும் எலி, புராண காலத்தில் விநாயகரின் வாகனமாக மாறிவிட்டது. பல கொள்கைகளையும் தத்துவங்களையும் விளக்குவதற்காகக் கூறப்பட்ட கதைகள், உவமைகள் பிற்காலத்தில் பல தெய்வங்களையும் வாகனங்களையும் உருவாக்கிவிட்டன. கடவுளரின் சின்னங்களாக எழுந்த கொடிகள் பிற்காலத்தில் வாகனங்களாக உருப்பெற்றன.
அந்தகக் கவி வீரராகவனார் வாகனப் பாட்டு:
அந்தகக் கவி வீரராகவ முதலியார் தன்னுடைய இல்லாளுடன் கோபித்துக் கொண்டு நண்பர் வீட்டில் போய்ச் சாப்பிட்டார். அவர் கொஞ்சம் கட்டுச் சோற்றைக் கட்டிக் கொடுத்து வழி அனுப்பினார். முதலியார் தன்னுடைய சீடர் ஒருவருடன் வழிபயணத்தைத் தொடர்ந்தார். வழியில் சீடன், கட்டுச் சோற்று மூட்டையை வைத்துவிட்டு, தண்ணிர் எடுக்க அருகிலுள்ள குளத்தில் இறங்கினான். ஒரு நாய் வந்து அந்த சோற்று மூடையைக் கவ்விக் கொண்டு கற்றய்ப் பறந்துவிட்டது. அப்போது அவர் பாடிய பாடல்:

“சீராடையற்ற வயிரவன் வாகனம் சேரவந்து
பாராரும் நான்முகன் வாகனம் தன்னை முன் பற்றிக்கொண்டு
நாராயணனுயர் வாகன மாயிற்று நம்மை முகம்
பாரான் மை வாகனன் வந்தே வயிற்றினிற் பற்றினனே”

வயிரவன் வாகனம்=நாய், நான்முகன் வாகனம்= அன்னம், நாராயணன் வாகனம்= கருடன், மை வாகனன் = அக்னி பகவான். கட்டுச் சோற்று மூட்டையை நாய் தூக்கிக்கொண்டு போனதால் பசித் தீ வயிற்றில் பற்றிக்கொண்டது என்று பொருள்பட பாடினார். அன்னம் என்பது சோற்றையும் அன்னப் பறவையையும் குறிக்கும்.
-நன்றி: Tamil and Vedas

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக