திங்கள், 25 டிசம்பர், 2017

வைத்தியநாத சுவாமி கோவில் : மடவார் விளாகம்

படிக்காசு அருளிய பரமன்!

வைத்தியநாத சுவாமி கோவில் :

திரு வில்லிப்புத்தூரின் தென்பகுதி மடவார் விளாகம் எனப்படும். இங்கு ஒரு காலத்தில் பெண்கள் மட்டுமே வாழ்ந்ததால் இப்பெயர் பெற்றது. மடவார் விளாகத்தில சிவன் கோவில் இருக்கிறது. இக்கோவிலில் கிருஷ்ணதேவராயர் காலத்துச் சிற்பங்கள் காணப் படுகின்றன. திருமலைநாயக்கரால் இக்கோவில் திருப்பணி செய்யப்பெற்றது. திருமலை நாயக்கரின் மிகப்பெரிய உருவசிலை இக்கோவிலில் உள்ளது.

மதுரையிலிருந்து ராஜபாளையம் செல்லும் சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திரையரங்கிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் உள்ளது இத்திருக்கோயில்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் - மடவார் வளாகத்தில் அமைந்திருக்கிறது அருள்மிகு வைத்தியநாதஸ்வாமி திருக்கோயில். அங்கு எம்பெருமான் சிவன், வைத்தியநாத ஸ்வாமியாகவும் அம்பாள் சிவகாமியாகவும் காட்சியளிக்கிறார்கள்.
முன்னொரு காலத்தில், சிவபக்தையான கர்ப்பிணி ஏழைப் பெண் ஒருத்தி, தன்னை பிரசவத்திற்கு வந்து அழைத்துச் செல்ல தாயை வரச்சொல்லுமாறு, வழிப்போக்கர்களிடம்  தகவல் சொல்லியனுப்பினாள். ஆனால், நிறை மாதம் எட்டியும் அப்பெண்ணின் பிரசவம் பார்க்க தாய் வந்து சேரவில்லை. உடனே தன் கணவரிடம் தகவல் தெரிவித்து விட்டு, அந்த கர்ப்பிணிப் பெண் தன் சொந்த ஊருக்கு தனியாகவே புறப்பட்டாள்.
சிறிது தொலைவில் இருந்த சுயம்பு வன்னி வனநாதர் கோயில் அருகே சென்றபோது, அப்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே சிவபெருமான் அப்பெண்ணின் தாயின் வடிவில் வந்து, பிரசவம் பார்த்து விட்டு, அப்பெண்ணின் தாகம் தீர்க்க நிலத்தைக் கீறி, மருத்துவ குணம் வாய்ந்த நீரினைத் தந்தாராம். அதனால் சுயம்பு மூர்த்தரான வன்னி வனநாதரின் திருநாமம் - வைத்தியநாதஸ்வாமி என உருமாறியதாம்.
  
படிக்காசு வைத்த ஈஸ்வரன்:
இத்திருக்கோயிலில் பூஜைகள் செய்து வந்த, ஏழை அர்ச்சகரான நம்பியாருக்கு உதவ எண்ணிய வைத்தியநாதர், அவரின் கனவில் தோன்றி, “தினமும் என் கோயில் வாயிற்படியில் உனக்காக பொற்காசுகள் இருக்கும். அதைப் பயன்படுத்தி அனுதினமும் எனக்கு பூஜை செய்எனக் கூறி அருளினார்மறுநாள் கண்விழித்துப் பார்க்கையில் இறைவன் சொன்னதுபோல வாயிற்படியில் பொற்காசு இருப்பதைக் கண்டு மெய்சிலிர்த்தார் நம்பியார். இதுபோன்று மொத்தம் 24 திருவிளையாடல்களை இத்தலத்தில் அரங்கேற்றியிருக்கிறார் எம்பெருமான் வைத்தியநாதஸ்வாமி.

இத்திருத்தலத்தில் துர்வாச முனிவர் சாபம் தீர வேண்டியபோது சாபவிமோசனம் தந்தது, அகஸ்தியரின் அகங்காரம் களைய தட்சிணா மூர்த்தியாக அவதாரம் எடுத்து அருள் தந்தது, வழிப்போக்கு முனிவர்கள் இருவருக்கு சிதம்பரம் நடராஜர் போன்று நடனக்கோலத்தில் காட்சி கொடுத்தது, தன்னை நெக்குருகி வேண்டி வீணை வாசிக்கும் சகோதரிகள் இருவருக்கு மன்னரின் கனவில் தோன்றி  பரிசு கொடுக்கச் சொல்லியது என வைத்தியநாதஸ்வாமி எப்போதுமே பக்தர்களின் நாயகனாகத் திகழ்கிறார்.

பண்டைய மதுரையின் மன்னர் திருமலை நாயக்கருக்குகுன்ம நோயினால்பெரும் வயிற்று வலி ஏற்பட்டிருந்தபோது, இத்திருக்கோயிலில் தங்கியிருந்து வைத்தியநாதஸ்வாமியை வேண்டி குணமடைந்திருக்கிறார். அதற்குக் காணிக்கையாக மதுரையிலிருந்து இறைவனை தரிசனம் செய்ய வந்த பல்லக்கினை எம்பெருமானுக்கு தானம் செய்துள்ளார் திருமலை நாயக்கர். இன்றும் வைத்தியநாதர் சந்நிதியில் வைகாசி விசாகத்தின்போது நடைபெறும்பல்லக்கு ஊர்வலத்தில்திருமலை நாயக்கர் வழங்கிய பல்லக்கே பயன்படுத்தப்படுகிறது.

போக்குவரத்து, வாகன, தந்தி, தொலைபேசி இல்லாத அந்தக்காலத்தில் மடவார்வளாக வைத்திய நாத சுவாமி கோயிலில் உச்சி கால பூஜை நிறைவேறியதை தெரிந்து கொள்வதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரை செல்லும்

ரோட்டில் ஆங்காங்கே கல் மண்டபங்களை அமைத்து அவற்றில் இருந்து பூஜை நேரத்தில் முரசு முழங்கச்செய்து அந்த ஒலி மதுரையை எட்டியவுடன், மன்னர் வைத்தியநாதரை வணங்கி வழிபாடு செய்த பின் தான் மதிய உணவே சாப்பிடும் பழக்கத்தை மேற்கொண்டார். இதற்கு சான்றாக இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை நெடுஞ்சாலையில் பல கல்மண்டபங்கள் உள்ளதை காணலாம்.























இத்திருத்தலம் கி.பி.ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இத்திருக்கோயிலுக்கு மூவேந்தர்களும், திருமலை நாயக்கரும் திருப்பணி செய்துள்ளனர். திருமலை நாயக்கர் காலத்தில் உருவான மூலிகை ஓவியங்கள் இன்றும் அழியாமல் பல கதைகளைச் சொல்லுகின்றன. இத்திருக்கோயிலில் கொடி மரத்தின் முன்னர் இருக்கும் ஆமைக் கல் 7 அடி உயரத்தில் இருப்பது சிறப்பு. மேலும் இத்திருக்கோயிலில் மூலவர் சந்நிதியின் மேற்கூரையில் வாஸ்துபுருஷரும் 27 நட்சத்திரங்களும் இருப்பது தனிச்சிறப்பு. அதுபோல இறைவி சிவகாமி அம்மன் சந்நிதிக்கு முன்னே உள்ள மேற்கூரையில் ஸ்ரீ சக்கரமும் 12 ராசிகளும் காட்சி தருகின்றன. இத்திருக்கோயிலில் பங்குனி மாதத்தின் முதல் 3 நாட்களிலும், புரட்டாசி வளர்பிறை பிரதோஷத்திலும் சூரியனுடைய ஒளிக்கதிர்கள் கருவறையில் விழுவதால், சூரியனே வைத்தியநாதரைப் பூஜிப்பதாக ஐதீகம் நிலவுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக