ஞாயிறு, 10 டிசம்பர், 2017

நீர் காத்த அய்யனார் கோவில்-ராஜபாளையம்.






















நீர் காத்த அய்யனார் கோவில்-ராஜபாளையம்:
ராஜபாளைத்தில் இருந்து 13 கி.மீ தொலைவில் இந்த அய்யனார் கோவில் இருக்கிறது .கோவில் செல்லும் பாதையின் இருமருங்கிலும் மாமரங்கள், தேக்கு மரங்கள், புளிய மரங்கள் என இருபுறமும் பசுமையாய் இருக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கையில் எங்கு பார்த்தாலும் பசுமை சில்லிட வைக்கும் சாரல் என அற்புதமாய் இருக்கிறது இக்கோவில்.
கோவில் மிக அமைதியாக இருக்கிறது. மலைகளில் இருந்து வரும் அருவி நீர் ஓடை போல் கோவில் அருகே வருகிறது. ஒரு ஓடை மிக மெல்லியதாய் சிறு சிறு பாறைகளுக்கு இடையே வந்து கொண்டு இருக்கிறது. இதை தாண்டிதான் அய்யனார் கோவில் செல்ல வேண்டும்
தல வரலாறு :
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடி வாரத்தில், பாலாறு, நீராறு ஒன்றாக சேரும் ஆற்றங்கரை ஓரத்தில் நீர் காத்த அய்யனார் அருளாட்சி செய்து கொண்டிருக்கிறார்.
ராஜபாளையம் நகரின் நீர் வளத்திற்கும், நில வளத்திற்கும், தொழில் வளத்திற்கும் ஆதார தெய்வமாக நீர் காத்த அய்யனார் விளங்குகிறார். அத்துடன் தன்னை வேண்டி வரும் பக்தர்களின் குறைகளை கேட்டு வரம் வழங்கும் சுவாமியாக விளங்குகிறார்.
இந்நகர் மக்களின் செழுமைக்கும், நீர் உற்பத்தி ஆதாரமாகவும், மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு உற்ற துணையாக காக்கும் கடவுளாக, அருள்மழை பொழிபவராக அய்யனார் அருள்பாலிக்கிறார்.
இவருக்கு வலது புறம் பூர்ணா, இடதுபுறம் புஷ்கலா தேவியார் வீற்றிருக்கின்றனர். கிட்டதட்ட 1000 ஆண்டுகளுக்கு முன் ராஜ ராஜ சோழன் காலத்தில் இக்கோவில் அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
கோவிலின் உள்ளே சுற்றி வர பிரகாரம் கொஞ்சம் பெரிதாகவே இருக்கிறது.
இந்தக் கோயிலில் வனலிங்கம், தலைமைசுவாமி, பெருமாள், லட்சுமி, சின்ன ஓட்டக்காரசாமி, பெரிய ஓட்டக்காரசாமி, வனகாளி, மாடன், மாடத்தி, ராக்கச்சி அம்மன், வனப்பேச்சியம்மன், கருப்பசாமி, தர்மராஜர், சப்தகன்னிமார் ஆகிய தெய்வங்கள் அருள்பாலிக்கிறார்கள்.
இந்தகோவிலின் அய்யனார் மிகவும் சக்தி வாய்ந்தவராக துயரங்கள் தீர்ப்பவராக இருக்கிறார்.
குடும்பத்தில் நிலவும் தாங்க முடியாத பிரச்சனைகளையும், குறைகளையும் போக்கவும் ராஜபாளையம் மற்றும் சிவகாசியை சுற்றிலும் உள்ள மக்கள் பலர் இங்கு வந்து வழிபடுகின்றனர்.
பராக்கிரம பாண்டிய மன்னன் ஆட்சிக்காலத்தில் மேற்குப்பகுதியான இந்த அய்யனார் கோயில் பகுதியை கேரள பந்தள தேச மன்னன் ஆக்கிரமிப்பு செய்தான். அவனை விரட்டியடிக்க பாண்டிய மன்னன், சின்னையா தேவன் என்பவனது தலைமையில் ஒரு படையை அனுப்பி வைத்தான்.
அந்த வீரர்கள் மதுரையிலிருந்து கிளம்பி ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் வழியாக மேற்கு தொடர்ச்சி மலை சென்று பந்தள மன்னனின் படைகளை விரட்டி அடித்தனர்.
இதன்பின் பாண்டிய மன்னனின் படைவீரர்கள் தங்களது நாடு திரும்ப அய்யனார் கோயில் அருகே உள்ள ஆற்றின் வழியாக வரும்போது, திடீரென ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த வெள்ளத்தில் சிக்கி கொண்ட பாண்டிய படை வீரர்கள் தங்களை காத்து அருளும்படி அய்யனாரை வேண்டிக் கொண்டனர். அப்போது ஆற்றின் கரையில் இருந்த ஒரு பெரிய மரம் திடீரென கீழே விழுந்து ஆற்றை கடக்க உதவும் பாலம் போல இருந்தது.
பாண்டியன் படைவீரர்களும் அந்த ஆற்றின் குறுக்கே விழுந்த மரத்தின் மேல் நடந்து உயிர் தப்பினர். இவ்வாறு நீரை காத்து பாண்டியன் படையை காத்ததால் இந்த அய்யனார் நீர் காத்த அய்யனார் என அழைக்கப்பட்டார்.
இங்கு பிரார்த்தனை நிறைவேறியதும் அபிஷேகம் செய்து, தங்களால் இயன்ற பொருளுதவி, அன்னதானம் செய்தும் நேர்த்திக்கடன் செய்கின்றனர்.
ஓடையில் நீர் வரத்து குறைவாக இருக்கும் காலங்களில் மட்டுமே இங்கு செல்ல வேண்டும். திடீர் என்று வெள்ளப்பெருக்கும் இந்த பகுதிகளில் ஏற்படும். மழைக்காலங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும். இங்குள்ள ஒரு ஓடையை கடந்துதான் கோவில் செல்ல வேண்டும்.
இயற்கையை விரும்புகிறவர்கள், தனிமையை நாடுபவர்கள், தியானம் செய்ய விரும்புபவர்கள் செல்லவேண்டிய அற்புத இடம் இந்த அய்யனார் கோவில்.

ராஜபாளையத்தில் இருந்து 13 கி.மீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கிறது. ராஜபாளையம் நகரில் இருந்து பேருந்து போக்குவரத்து வசதி இருக்கிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக