அரசிலிநாதர் கோவில், திருஅரசிலி, இப்போது ஒழிந்தியாபட்டு என அந்த ஊர் அழைக்கப்படுகிறது.
சுயம்புலிங்கம் ஒளிந்து அடையாளம் பட்டுக் கண்டுக்கொண்டதால் அது ஒழிந்தியாபட்டு..
சிவஸ்தலம்.
இறைவன் பெயர்
அரசிலிநாதர்
இறைவி பெயர்
பெரியநாயகி
பதிகம்
திருஞானசம்பந்தர்
பாண்டிச்சேரி - திண்டிவனம் (வழி கிளியனூர்) ஒழிந்தியாப்பட்டு கைகாட்டி அருகில் இறங்கி கிழக்கே ஒழிந்தியாப்பட்டு செல்லும் சாலையில் 2.கி.மீ சென்றால் அரசிலி ஆலயத்தை அடையலாம். பாண்டிச்சேரியில் இருந்து சுமார் 17 கி.மி. தொலைவில் ஒழிந்தியாப்பட்டு கைகாட்டி கிளைப் பாதை பிரிகிறது. . மற்றொரு பாடல் பெற்ற தலமான இரும்பை மாகாளம் இங்கிருந்து சுமார் 5 கி.மி. தூரத்தில் இருக்கிறது.
சுமார் 2.5 ஏக்கர் பரப்பளவில் ஒரு 3 நிலை இராஜகோபுரமும், ஒரு பிராகாரமும் கொண்டு இவ்வாலயம் அமைந்துள்ளது. மூலவர் அரசிலிநாதர் சுயம்புலிங்க வடிவில் கிழக்கு நோக்கியும், அம்பாள் பெரியநாயகி தனி சந்நிதியில் தெற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர்.
வாசலில் மூலவரை நோக்கியவாறு பைரவர், சூரியன், உருவங்கள் உள்ளன. கோஷ்டமூர்த்தி தட்சிணாமூர்த்தி தனி விமானத்துடன் அழகாக உள்ளார். இவருக்கு மேலே நடராஜர் ஆனந்த தாண்டவ கோலத்தில் சிறிய மூர்த்தியாக இருக்கிறார்.
ஒரே இடத்தில் சிவனது ஞான உபதேச கோலத்தை கீழேயும், மேலே தாண்டவ கோலத்தையும் தரிசனம் செய்வது மிகவும் விசேஷமானதாகும். பிரம்மா, துர்க்கை, வைஷ்ணவி ஆகிய பிற கோஷ்ட மூர்த்திகளின் சந்நிதிகளும் உள்ளன. கருவறைக்கு பின்புறத்தில் கோஷ்டத்தில் லிங்கோத்பவருக்கு பதிலாக அவ்விடத்தில் மகாவிஷ்ணு மேற்கு பார்த்தபடி இருக்கிறார். கருவளையில் இறைவன் அரசிலிநாதர் 108 ருத்ராட்ச மணிகள் சேர்ந்த ருத்ராட்ச பந்தலின் கீழ் சுயம்பு லிங்க விடிவில் சிறிய மூர்த்தியாக அருளுகிறார். லிங்கத்தின் தலையில் அம்பு பட்ட காயம் இருக்கிறது. இந்த காயத்தை மறைப்பதற்காகவும், சிவனுக்கு மரியாதை செய்யும் விதமாகவும் லிங்கத்திற்கு மேலே தலைப்பாகை அணிவித்து பூஜைகள் செய்கின்றனர்.
தல விருட்சமாக அரசமரம் விளங்குகிறது. மரங்களில் சிறந்த அரசடியில் இறைவன் விளங்குவதால் இத்தலம் அரசிலி என்று பெயர் பெற்றது. வாமதேவர் எனும் முனிவர் தான் பெற்ற சாபத்திற்கு விமோசனம் பெறுவதற்காக பல தலங்களுக்கு சென்று சிவனை வணங்கி வந்தார். அவர் இங்கு வந்தபோது ஒரு அரசமரத்திற்கு அருகில் சற்று நேரம் அமர்ந்து ஒய்வெடுத்தார். உடலுக்கு குளிர்ச்சி தரும் அரசமரத்தின் அடியில் சற்று நேரம் இருக்கும் நமக்கே இவ்வளவு சுகமாக இருக்கிறதே என்று நினைத்த முனிவர், இங்கு சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்பினால் எப்படி இருக்கும் என மனதில் நினைத்து கொண்டார். அவரது எண்ணத்தை அறிந்த சிவன், அரசமரத்திற்கு அடியில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார். மகிழ்ந்த வாமதேவ முனிவர் அருகில் உள்ள தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கினார். சிவன் அவர் முன் காட்சி தந்து சாபத்திற்கு விமோசனம் தந்தார். அரசமரத்தின் கீழ் சுவாமி சுயம்புவாக எழுந்தருளியதால் தலத்திற்கு அரசிலி என்றும், இறைவனுக்கு அரசலீஸ்வரர் என்றும் பெயர் ஏற்பட்டது.
பூசம் நட்சத்திரத்திற்குரிய மரம் அரச மரம். அது இத்தலத்தின் தல விருட்சமாக இருப்பதால் இத்தலம் பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஒரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்தலம் வந்து இறைவனையும், இறைவியையும் வழிபட்டால் பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எல்லா நலனையும் அடைவார்கள்.
தல புராணம்: வாமதேவ முனிவருக்குப் பின பல ஆண்டுகள் கழித்து இந்த லிங்கம் மீண்டும் பூமியில் புதையுண்டு போயிற்று. சத்தியவிரதன் எனும் சாளுக்கிய மன்னன் ஒருவன் இப்பகுதியை ஆட்சி செய்து வந்தான். சிவன் மீது அளவிலாத பக்தி கொண்டிருந்த மன்னனுக்கு பிள்ளைகள் இல்லை. ஒரு நந்தவனம் அமைத்து அருகிலுள்ள மற்றொறு சிவலிங்கத்திற்கு வழிபாடுகள் செய்து வந்தான். பணியாள் ஒருவன் தினமும் நந்தவனத்தில் இருந்து மலர்களை எடுத்து வரும் பணியை செய்து வந்தான். ஒரு சமயம் பணியாள் நந்தவனத்திற்கு சென்றபோது அங்கு மலர்கள் இல்லை. அரண்மனைக்கு திரும்பிய பணியாளன், மன்னனிடம் செடியில் மலர்கள் இல்லாத விபரத்தை கூறினான். மன்னரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், மன்னனும் அன்று வேறு மலர்களால் சுவாமிக்கு பூஜை செய்தான். மறுநாளும் பணியாள் நந்தவனம் சென்றபோது அங்கு செடியில் மலர்கள் இல்லை. அவன் மீண்டும் மன்னரிடம் சென்று தகவலை கூறினான். மலர்களை அதிகாலையில் யாரோ பறித்து சென்று விடுவதாக சந்தேகம் கொண்ட மன்னன், அடுத்தநாள் காலையில் தன் படையினருடன் நந்தவனத்திற்கு சென்று கண்காணித்தான். அப்போது நந்தவனத்திற்குள் புகுந்த மான் ஒன்று மலர்களை உண்டதைக் கண்டான். சிவபூஜைக்கு என்று ஒதுக்கப்பட்ட மலர்களை மான் சாப்பிட்டதைக் கண்ட மன்னன் கோபத்துடன் மான் மீது அம்பு எய்தான். மான் தப்பிவிட, காவலர்கள் அதனை விரட்டிச் சென்றனர். அந்த மான் ஒரு அரசமரத்தின் பொந்திற்குள் சென்று மறைந்து கொண்டது. மன்னன் மரத்திற்குள் அம்பு எய்தான். அதிலிருந்து ரத்தம் வெளிப்பட்டது. மான் அம்பால் தைக்கப்பட்டிருக்கும் என நினைத்த மன்னன் உள்ளே பார்த்தபோது அங்கு மான் இல்லை. அதற்கு பதில் பல்லாண்டுகளுக்கு முன் மறைந்த வாமதேவர் வழிபட்ட லிங்கம் இருந்தது. லிங்க பாண்த்தில் ரத்தம் வழிந்தபடி இருந்தது. அதிர்ந்த மன்னன் சிவனை வேண்டினான். சிவன் மன்னனுக்கு காட்சி தந்து, மான் வடிவில் அருள்புரிந்தது தாந்தான் என்று உணர்த்தியதோடு, மன்னனுக்கு புத்திர பாக்கியமும் கொடுத்து அருளினார். அதன்பின் மன்னன் இத்தலத்தில் கோயில் கட்டினான். சத்தியவிரதனின் மகன் இந்திரசேனன் என்பவனும் இத்தல இறைவனிடம் அளவில்லாத பக்தியுடன் வழிபட்ட தலம். இந்த இந்திரசேனன் மகள் அரசிலிநாதரை வழிபட்டு இத்தலத்திலேயே வாழ்ந்து இறையடி கூடிய தலம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக