வெள்ளி, 4 அக்டோபர், 2019

விநாயகர் அகவல்



விநாயகர் அகவல் தோன்றிய விதம்

ஒரு முறை சுந்தரரும், அவரது நண்பரான சேரமான் பெருமானும் திருகயிலாயத்தில் சிவபெருமானின் தரிசனம் வேண்டி கையிலையை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

வழியில் விநாயகர் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த அவ்வை மூதாட்டியைக் கண்டனர்.

அப்போது அவ்வை அவர்களிடம் “நீங்கள் எங்கு செல்கிறீர்கள்?” என்று கேட்டார். அவ்வையிடம் அவர்கள் இருவரும் “நாங்கள் கையிலாயத்தில் சிவபெருமானின் தரிசனம் பெற போய் கொண்டிருக்கிறோம்.” என்றனர்.

அதனைக் கேட்ட அவ்வைப் பாட்டிக்கும் சிவபெருமானின் கையிலாய தரிசனத்தைக் காணும் எண்ணம் ஏற்பட்டது. அதனால் வழிபாட்டினை அவசரமாக முடிக்கத் தயாரானார் அவ்வையார்.

அவ்வையின் எண்ணத்தை அறிந்த விநாயகப் பெருமான் “அவ்வையே அவசரப்படாமல் பூஜையை செய். என்னைப் பற்றி ஒரு பாடல் பாடு. நானே உன்னை கையிலைக்கு அழைத்துச் செல்கிறேன்” என்றார்.

அவ்வையாரும் ஞானத்தின் வடிவமான விநாயகப் பெருமானைப் பற்றி சீதக்களப எனத் தொடங்கும் பாடலைப் பாடினார். பாடல் பாடி முடித்ததும் விநாயகப் பெருமான் தனது துதிக்கையில் அவ்வையை இறுத்தி கையிலாயத்தில் சேர்த்தார்.

அவ்வையாரும் சுந்தரர் மற்றும் சேரமானுக்கு முன்னால் சிவபெருமானின் தரிசனம் பெற்றார்.

விநாயகப்பெருமானைப் பற்றி அவ்வை பாடிய

"சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்"

எனத் தொடங்கும் பாடலே விநாயகர் அகவல் என்று அழைக்கப்படுகிறது.

அவ்வைப் பாட்டியை கையிலாயத்துக்கு விரைந்து கொண்டு சென்ற பிள்ளையார் திருக்கோவிலூர் என்னும் திருத்தலத்தில் அருள்புரிகிறார்.

இவரது திருநாமம் பெரிய யானை கணபதி என்பதாகும். இத்தல இறைவன் வீரட்டேஸ்வரர் என்பவராவார். அம்மை சிவானந்தவல்லி என்று அழைக்கப்படுகிறார். இத்தலம் சிவனின் வீரத்திருவிளையாடல்கள் நிகழ்ந்த அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாகும்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக