ஞாயிறு, 27 அக்டோபர், 2019

பாடலீஸ்வரர் கோவில், கடலூர்


பாடலீஸ்வரர் கோவில், திருப்பாதிரிபுலியூர்
(தற்போது கடலூர் நகரின் ஒரு பகுதி)

















இறைவன் பெயர்:
பாடலீஸ்வரர், பாடலேஸ்வரர், தோன்றாத்துணை நாதர்
இறைவி பெயர்:
பெரியநாயகி, தோகைநாயகி, அருந்தவநாயகி
பதிகம்:
திருநாவுக்கரசர் - 1 திருஞானசம்பந்தர் - 1

எப்படிப் போவது
திருப்பாதிரிபுலியூர் கடலூர் நகரின் ஒரு பகுதி. திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவிலும், கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்திலும் கோயில் உள்ளது. நகரப் பேருந்து வசதிகள் உண்டு.

தல வரலாறு: ஒரு முறை கைலாயத்தில் பரமனும், பார்வதியும் சொக்கட்டான் ஆடினர். பலமுறை ஆடியும் தோல்வி பெருமானுக்கே. ஆனால் வெற்றி தனக்கே எனக் கூறிய பெருமானின் திருக்கண்களை பார்வதி தன் திருக்கரங்களால் மூடினாள். இதனால் உலகம் இருண்டு அனைத்து செயல்களும் நின்று போயின. இதனைக் கண்ட இறைவி தன் செயலால் ஏற்பட்ட இன்னல்கள் கண்டு மனம் வருந்தி தனக்கு மன்னிப்பு வேண்டினாள். அதற்கு இறைவன் சிவபெருமான் இறைவியை பூலோகம் சென்று அங்குள்ள சிவ தலங்களை பூசிக்கும்படியும் அவ்வாறு பூசிக்கும் போது எந்த தலத்தில் இடது கண்ணும் இடது தோளும் துடிக்கின்றதோ அந்தத் தலத்தில் ஆட்கொள்வதாக கூறினார். அதுபோல் இறைவியும் பல தலங்களைத் தரிசித்துவிட்டு பாதிரி வனமாகத் திகழ்ந்த இத்தலத்திற்கு வந்தபோது இடது கண்ணும், இடது தோளும் துடித்ததால் இத்தலத்திலேயே தங்கி அரூபமாக (உருவமில்லாமல்) இறைவனை பூசித்து பேறு பெற்றாள். ஆலயத்தில் இறைவன் கருவறை சுற்றி வரும்போது கஜலட்சுமி சந்நிதியை அடுத்து, துர்க்கை கோஷ்ட மூர்த்தமுள்ள இடத்தில் அம்பிகை அருவ வடிவில் தவம் செய்த இடம் அருந்தவநாயகி சந்நிதியாகப் போற்றப்பட்டு வருகின்றது. சந்நிதியில் உருவம் ஏதும் இருக்காது. பீடம் மட்டுமே உள்ளது.

கோவில் அமைப்பு: ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
கோபுரத்தில் ஏராளமான சுதை சிற்பங்கள் உள்ளன. வாயிலைக் கடந்து உட்சென்றால் உயரத்தில் பலிபீடம், செப்புக்கவசமிட்ட கொடிமரம், நந்தி முதலியவைகளைத் தரிசிக்கலாம். வெளிப்பிராகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை. வெளிப்பிராகார வலம் முடித்து துவார விநாயகர், துவார சுப்பிரமணியர் தொழுது 2வது வாயிலைக் கடந்து இடப்புறமாகத் திரும்பினால் உள்சுற்றில் சந்திரனும் அதையடுத்து திருநாவுக்கரசர் உற்சவமூர்த்தமும், அடுத்து மூலமூர்த்தமும் தனித்தனி சந்நிதிகளாக உள்ளன. அமர்ந்த கோலத்துடன் அப்பர் கைகூப்பி உழவாரத்துடன் காட்சி தருகின்றார். திருநாவுக்கரசரை உட்கார்ந்த நிலையில் பார்ப்பது இந்த சிவ தலத்தில் மட்டுமே காண முடியும். உட்பிரகாரம் சுற்றி வரும்போது 63 மூவர் சந்நிதியை அடுத்து தலவிநாயகர் கன்னி விநாயகர் என்ற பெயருடன் காட்சி தருகிறார். அம்பிகை இறைவனை வழிபட்டபோது உதவி செய்தமையால் கையில் பாதிரி மலருடன் காட்சி தருகிறார். உள் சுற்றில் உற்சவத் திருமேனிகளின் சந்நிதி, வியாக்ரபாதர், அகத்தியர் முதலியோர் பூசித்த லிங்கங்கள், மீனாட்சி சுந்தரேசர் சந்நிதி, வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகர் சந்நிதிகள் ஆகியவையும் உள்ளன. தலமரமான ஆதிபாதிரி மரம் கவசமிட்டுக் காக்கப்பட்டு வருகின்றது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

புலிக்கால் முனிவர் தவம் செய்து பேறு பெற்ற இத்தலம் இதுவாகும். இதன் காரணமாகவே பாதிரி மரத்தை தலவிருட்சமாக உள்ள இவ்வூர் பாதிரிப்புலியூர் எனப் பெயர் பெற்றது. பஞ்ச புலியூர் தலங்களில் இத்தலமும் ஒன்று.
எல்லா சிவன் கோவில்களிலும் பள்ளியறை இறைவியின் சந்நிதியின் அருகில் தான் இருக்கும். பள்ளியறை இல்லாத கோவில்களும் உண்டு. (எடுத்துக் காட்டாக திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயத்தைக் கூறலாம்). ஆனால் பள்ளியறை இறைவன் திருக்கோயிலில் அமைந்து, நாள் தோறும் இறைவியே பள்ளியறைக்கு எழுந்தருள்வது இத்தலத்தின் தனிச்சிறப்பு.

திருநாவுக்கரசரை பல்லவ மன்னன் மகேந்திரவர்மன்(கி.பி 600 -630) சமணர்கள் பேச்சைக் கேட்டு கல்லுடன் சேர்த்துக் கட்டி கடலில் தள்ளியபோது அப்பர் சுவாமிகள் "கற்றூணைப்பூட்டி ஓர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே" என நமசிவாயப் பதிகம் பாடித் துதிக்க அக்கல்லே தெப்பமாக மாறி கடலில் மிதந்து வந்து கறையேறிட நகர மக்களெல்லாம் அதிசயப்பட்டு அன்பு கொண்டு மகிழ்ந்து வரவேற்கச் சென்றார்கள். இன்றும் அப்பர் கடலிலிருந்து கரையேறிய இடம் "கரையேறவிட்ட குப்பம்" என்னும் பெயரால் சிறந்து விளங்குகிறது. இங்கிருந்து 2கிமீ தூரத்தில் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக