சனி, 5 அக்டோபர், 2019

வீரட்டேஸ்வரர் திருக்கோயில், திருக்கோவலூர்.















வீரட்டேஸ்வரர் திருக்கோயில், திருக்கோவலூர், விழுப்புரம் மாவட்டம்
-----------------------------------

செத்தையேன் சிதம்ப நாயேன் செடியனேன் அழுக்குப் பாயும்
பொத்தையே போற்றி நாளும் புகலிடம் அறிய மாட்டேன்
எத்தைநான் பற்றி நிற்கேன் இருளற நோக்க மாட்டாக்
கொத்தையேன் செய்வ தென்னே கோவல்வீ ரட்ட னீரே.
- திருநாவுக்கரசர்

பாடல் பெற்ற சிவாலயங்களில், திருவண்ணாமலை - விழுப்புரம் - விருத்தாசலம் - கடலூர் பகுதிகள் நடுநாடு என்று கூறப்படுகின்றன. அவற்றில் உள்ள 22 பாடல் பெற்ற தலங்களில் திருக்கோவலூர் மூன்றாவதாக விளங்குகிறது. விழுப்புரத்திலிருந்து நேரடி பஸ் வசதி உண்டு. கீழையூர் என்று கேட்டு இறங்க வேண்டும். அங்கிருந்து சிறிது தொலைவு நடந்தால், கோயிலை அடையலாம். வைணவர்களின் சிறப்பு வாய்ந்த திவ்ய தேசமான திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயிலும் இங்கிருந்து நடை தூரமே.

தலபுராணம்

அட்ட வீரட்டத் தலங்கள் என்னும் எட்டு தலங்களில் சிவபெருமான் சினமுற்று எதிரிகளையும் பகைவர்களையும் அழித்தொழித்த இடங்களாகக் கூறுவர். அவற்றை கீழ்க்காணலாம்:

திருக்கண்டியூர் : சிவபிரான் பிரமனுடைய தலையைக் கொய்து செருக்கழிந்த தலம்

திருக்கோவிலூர் : அந்தகாகரனைக் கொன்ற இடம்

திருவதிகை : திரிபுரத்தை எரித்த இடம்

திருப்பறியலூர் : தக்கன் தலையைத் தடிந்த தலம்

திருவிற்குடி : சலந்தராசுரனை வதைத்த தலம்

திருவழுவூர் : கயமுகாசுரனைக்கொன்று தோலை உரித்துப்போர்த்துக்கொண்ட தலம்

திருக்குறுக்கை : மன்மதனை எரித்த தலம்

திருக்கடவூர் : மார்க்கண்டேயனைக் காத்துக் கூற்றுவனை உதைத்த தலம்

இன்று நாம் காணவிருக்கும் திருக்கோவலூர் இரண்டாவது வீரட்டத் தலமாகும்.

சிவபெருமானும் உமையன்னையும் ஒரு நாள் மகிழ்ந்திருக்கையில், பார்வதி விளையாட்டாக ஈசன் கண்களை மூட உலகெங்கும் அந்தகாரம் சூழ்ந்தது. அந்தகம் என்றால் இருளென்று பொருளாகும். அவ்விருளே ஒரு அசுரனாக உருமாறி போர்துவங்க, சிவன் தன் கை கதையால் அவன் தலையில் அடித்து வதம் செய்யலானார். ஆனால், அசுரன் தலையிலிருந்து விழுந்த ஒவ்வொரு இரத்தத் துளியும் ஒரு அசுரனாக மாறவே, மலைமகள் காளியாக வடிவெடுத்துக் கையில் கபாலமேந்தி அசுரனின் இரத்தம் ஒரு துளியும் கீழே விழாதவாறு ஏந்தினாள். கீழே சிந்திய இரத்தத் துளிகள் எட்டுத் திக்குகளிலும் எண் கோணங்களா விரிய, ஈசனும் சளைக்காது 64 பைரவர்களைப் பிறப்பித்து அசுரர்கள் அனைவரையும் அழித்தொழித்தார்.
இக்காரணம் தொட்டே எண் திசைக் காவலர்களாக 64 பைரவர்கள் கணக்கில் கொள்ளப்படுவதானது. பூமி பூஜை, கிருஹப்பிரவேசம் செய்யும் போது 64 பைரவர்களைக் கொண்ட வாஸ்து பூஜை செய்யப்படலானது.

மூலவர் வீரட்டேசுவரர் ஆவார். உற்சவர் அந்தகாசுர வத மூர்த்தி ஆவார்.
தாயாரின் திருப்பெயர் சிவானந்த வல்லி. பெரிய நாயகி என்றும் வழங்குதல் உண்டு.

வீரட்டேஸ்வரர் கோயிலும், சிவானந்தவல்லி கோயிலும் தனித்தனியாகவே அமைந்துள்ளன. இங்கு வீரட்டேஸ்வரருக்கு இடப்புறத்தில் பெரிய நாயகி உறைந்திருக்கிறாள்.

தலச் சிறப்பு

ஈசனின் வீரச்சிறப்பைக் காட்டும் அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று இது. சத்ரு ஜெயம் கொள்ள விரும்புவோர் தரிசிக்க வேண்டிய தலம் என்று சொல்லத் தேவையில்லை!
அந்தகம் என்பது இருள் என்று புறப்பொருள் கொண்டிருந்தாலும், அறியாமை, அஞ்ஞானம் என்பதே அதன் உட்பொருளாகும். அஞ்ஞானத்தை விரட்ட எத்துணை முயற்சிகள் எடுத்தாலும் அது அந்தகாசுரனைப் போல மேலும் மேலும் பல் வேறு வடிவங்களில் நம்மைத் தொடர்ந்து கொண்டே இருப்பதை முறியடிக்க, ஞான விளக்கேற்றிட இத்தலத்து நாயகனை தரிசித்தல் தகும். ஞானமும், ஞானத்தின் விளைவான பிறப்பறுக்கும் முத்தியும் அளிக்கவல்லான் திருக்கோவலூர் வீரட்டேஸ்வரன்.
இறைவன் மூலஸ்தானத்தில் பைரவ ரூபமாக உள்ளதால் பில்லி, சூனியம், செய்வினை ஆகியவற்றால் தொல்லையுறுவோர் இங்கு வந்து தரிசித்தால் அவற்றின்றும் விடுபடலாம்.
சுக்கிரன் சாப விமோசனம் பெற்ற தலம் என்றும் கூறுவர். எனவே காதல், தாம்பத்திய வாழ்க்கையில் நிறைவு இல்லாதோர் இங்கு வந்து வழிபடுதல் நலம்.
சாந்தஸ்வரூபிணியாக காட்சியளிக்கும் அஷ்ட புஜ துர்க்கை அம்மனைத் தொழுதால் திருமணத் தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
எப்பிறப்பில் செய்த பாபமும் இங்குள்ள ஈசனை வணங்கின் விலகும். முத்தி கிட்டும். இவ்வுலக வாழ்வில் மன நிம்மதி அடையலாம்.
அசுரனைக் கொன்ற பிரம்ம ஹத்தி தோஷத்தை இங்குள்ள சிவனாரைத் தொழுது முருகப்பெம்மான் போக்கிக் கொண்டார் என்பதால், இது சாபவிமோசனம் அளிக்கும் தலமுமாகும்.
*#இக்கட்டுரை பல தளங்களிலிருந்து திரட்டியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக