சனி, 5 அக்டோபர், 2019

திருவெண்ணெய்நல்லூர் அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் ஆலயம்



















பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா!
எத்தால் மறவாதே நினைக்கின்றேன்? மனத்து உன்னை
வைத்தாய்; பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
அத்தா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? ..

பித்தனே, பிறையைக் கண்ணியாகச் சூடியவனே, பெருமை உடையவனே, பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய, 'அருட்டுறை' என்னும்திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, எனது நெஞ்சத்துள் உன்னை அகலாதுவைத்தருளினாய்; அதனால், எவ்வாற்றானும் உன்னை மறவாமலே நினைந்து, முன்பே உனக்கு அடியவனாகி, இப்பொழுது, 'உனக்கு அடியவன் அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

திருவெண்ணெய்நல்லூர் அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் ஆலயம்
தடுத்து ஆட்கொண்ட நாதர் கோவில் திருவெண்ணைநல்லூர்

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

சிவஸ்தலம் பெயர்:
திருவெண்ணைநல்லூர்
இறைவன் பெயர்:
தடுத்து ஆட்கொண்ட நாதர், கிருபாபுரீஸ்வரர், வேணுபுரீஸ்வரர்
இறைவி பெயர்:
வேற்கண்ணி அம்மை, மங்களாம்பிகை

எப்படிப் போவது?
மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமான திருக்கோவிலூரில் இருந்து தென்கிழக்கே சுமார் 20கி.மி. தொலைவிலும், விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ. தொலைவிலும் பெண்ணையாற்றின் தென்கரையில் திருவெண்ணைநல்லூர் தலம் அமைந்துள்ளது. திருக்கோவிலூரில் இருந்து அரசூர் செல்லும் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். விழுப்புரம், உளுந்தூர்பேட்டை மற்றும் திருக்கோவிலூரில் இருந்து இங்கு வர நேரடிப் பேருந்துகள் உள்ளன.

இவ்வாலயம் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு இராஜகோபுரத்துடனும் இரண்டு பிராகாரங்களுடனும் அமைந்துள்ளது.

கோபுரம் கடந்து உள்ளே நுழைந்தால் சுந்தரர் வழக்கு நடந்த "வழக்கு தீர்த்த மண்டபம்" உள்ளது. அடுத்து செப்புக் கவசமிட்ட கொடிமரம், கொடிமர விநாயகர், பலிபீடம் ஆகியவை உள்ளன. நேரே உயரத்தில், மேலே, சுந்தரருக்கு இறைவன் ரிஷபாரூடராகக் காட்சி தந்த விமானக் கோயில் உள்ளது. அதற்கு எதிரில் கீழே சுந்தரர் சந்நிதி உள்ளதையும் காணலாம். இவ்வுருவத்தில் சுந்தரர் கையில் ஓலையுடன் காட்சியளிக்கிறார். இத்தல மூலவர் சுயம்பு லிங்கமாக கிருபாபுரீஸ்வரர் என்ற பெயருடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். அம்மன் மங்களாம்பிகை சந்நிதியும் கிழக்கு நோக்கியே உள்ளது. கோவிலின் தென்புறம் தண்டதீர்த்தம் உள்ளது. உட்பிராகரத்தில் பொள்ளாப் பிள்ளையார், முருகன், சுந்தரர் சந்நிதிகள் உள்ளன.கோஷ்ட மூர்த்தங்களாகப் பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், மகாவிஷ்ணு, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. வெளிச்சுற்றில் அறுபத்துமூவர் திருமேனிகளையடுத்து வரிசையாக சப்தமாதர்களும், சம்பந்தர், மகாவிஷ்ணு, அருணந்திசிவம், மெய்கண்டதேவர் திருமேனிகளும் உள்ளன. உட்புறத் தூண்களில் பைரவர், தட்சிணாமூர்த்தி சிற்பங்கள் உள்ளன.

இளைவன் நஞ்சுண்ட காலத்தில் அந்நஞ்சு அவரை துன்புறுத்தாமலிருக்க உமையம்மை இத்தலத்தில் பசு வெண்ணெயால் கோட்டை கட்டி அதில் பஞ்சாக்கினி வளர்த்து அதன் நடுவிலிருந்து தவம் செய்த காரணத்தால் இத்தலம் வெண்ணெய்நல்லூர் எனப் பெயர் பெற்றதெனத் தலபுராணம் கூறுகிறது.

இறைவன் சிவபெருமான், சுந்தரரை தடுத்தாட்கொண்ட சிறப்புடையது இத்தலம். இறைவன் முதிய வேதியராய் வந்து வழக்குரைத்து சுந்தரர் தனக்கு அடிமை என்று நிரூபித்து தன்னுடன் அழைத்துச்சென்று அவரை ஆட்கொண்டார். இறைவன் அடியெடுத்துத் தர சுந்தரர் "பித்தா பிறை சூடி" என்ற திருப்பதிகத்தை அருளிய தலம். தலத்தின் பெயர் திருவெண்ணெய்நல்லூர் என்றும் கோவிலின் பெயர் அருட்டுறை என்றும் பதிகத்தில் குறிப்பிடப் பெறுகிறது. அருணகிரிநாதர் இத்தலத்தில் முருகப் பெருமான் மயில்மீது நடனம் புரிதலைக் கண் குளிரக் கண்டு திருப்புகழ் ஒன்றும் பாடியுள்ளார். சுந்தரர் பாடிய இத்தலப் பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இவர் பாடிய முதல் பதிகம் என்ற சிறப்பும் இப்பதிகத்திற்கு உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக